

உலகச் சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் 100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் ஓர் எல்லையைத் தாண்டிச்சென்றால், அதனால் உயிரிழப்புக்குக்கூட வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு உருவான சிகிச்சைகளே ‘பேரியாட்ரிக் சர்ஜரி’’, லைப்போசக் ஷன் போன்றவை.
இவை ஆபத்தான சிகிச்சை முறைகளும்கூட. ஆபத்தை முழுமையாக உணராமல், உடலுக்கு அழகூட்டும் சிகிச்சை களாக இவற்றை அணுகும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் லைப்போசக் ஷன் சிகிச்சையால் கன்னட நடிகை சேத்தனா ராஜ் (22) உயிரிழந்தார்.
யாருக்குத் தேவை?
# மரணத்தை விளைவிக்கும் உடல் பருமன் (Morbid obesity) உள்ளவர்கள்.
# 37.5க்கு மேல் உடல் பருமக் குறியீடு (BMI - Body mass index) அளவீடு உள்ளவர்கள்.
# நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுடன் உடல் பருமக் குறியீடு (BMI - Body mass index) அளவீடு 32. 5க்கு மேல் இருப்பவர்கள்.
ஏன் செய்ய வேண்டும்?
அபரிமித உடல் எடை காரணமாக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பின்வரும் பாதிப்புகளின் அபாயத்தைக் குறைக்கவும் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது:
l இதய நோய் / பக்கவாதம்.l உயர் ரத்த அழுத்தம்.
l கொழுப்புக் கல்லீரல் நோய் (NAFLD) / மதுசாரா கொழுப்புநிறைக் கல்லீரல் நோய் (NASH).
l தூக்கத்தில் மூச்சுத் திணறல்.
l கட்டுப்பாடற்ற டைப் 2 நீரிழிவு.
அறுவைச் சிகிச்சையின் வகைகள்
ஸ்லீவ் கேஸ்ட்ரோக்டமி, கேஸ்ட்ரிக் பைபாஸ் உள்ளிட்ட எடை குறைப்பு அறுவைச் சிகிச்சைகள் பேரியாட்ரிக் அறுவைச் சிகிச்சை என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. உடலின் எடையைக் குறைக்க உதவும் வகையில் நம் உடலின் செரிமான அமைப்பில் மாற்றங்களைச் செய்வதே இந்த அறுவைசிகிச்சையின் நோக்கம்.
பேரியாட்ரிக் அறுவைச் சிகிச்சை
இந்த அறுவைசிகிச்சையில் பானைபோல் இருக்கும் இரைப்பை சுருக்கப்பட்டு, சிறிய குழாய்போல் ஆக்கப்படும். சிறுகுடலின் அளவும் குறைக்கப்பட்டு 150 செ.மீ. தள்ளி இரைப்பையுடன் இணைக்கப்படும். இதன்மூலம் இரைப்பையின் கொள்ளளவு குறையும். இதன் காரணமாக அதிகம் சாப்பிட முடியாது. உதாரணத்துக்கு 15 இட்லி சாப்பிடுகிறவர்கள், பேரியாட்ரிக் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிட முடியாது. வயிற்றில் பசியைத் தூண்டும் க்ரெலின் என்னும் ஹார்மோன் சுரப்புப் பகுதி இந்த அறுவைச் சிகிச்சையில் நீக்கப்படும். இது பசியைக் கட்டுப்படுத்தும். அதனால் இயல்பாகவே எடை குறைந்துவிடும். இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஹார்மோன் செயல்பாடு சீராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மெட்டபாலிக் அறுவைச் சிகிச்சை
அதிக உடல் பருமன், நீரிழிவு, ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சினைகளில் இரண்டு அல்லது மூன்று பிரச்சினைகள் இருந்தால், அது ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்’ என்று குறிப்பிடப்படுகிறது. ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்’ பிரச்சினை கொண்டவர்களை மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாது. ஏனென்றால் பக்கவிளைவாகச் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழப்பதற்கான வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு மெட்டபாலிக் அறுவைச் சிகிச்சையே ஒரே தீர்வு. அதிக உடல் பருமன் பிரச்சினை மட்டும் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படுவது பேரியாட்ரிக் அறுவைச் சிகிச்சை. ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்’ பிரச்சினைகளுக்கும் சேர்த்து மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சை ‘மெட்டபாலிக் அறுவைச் சிகிச்சை’.
பேரியாட்ரிக் ஆபத்துகள்
l அதிக ரத்தப்போக்கு.
l நோய்த்தொற்று ஏற்படுதல்.
l மயக்க மருந்துக்கு எதிர்மறையான எதிர்வினைகள்.
l ரத்தக் கட்டிகள்.
l நுரையீரல் / சுவாசப் பிரச்சினைகள்.
l இரைப்பைக் குடல் அமைப்பில் கசிவுகள்.
l அரிதாக உயிரிழப்பு.
நீண்ட நாள் பாதிப்பு
l குடல் அடைப்பு.
l பித்தப்பைக் கற்கள்.
l குடலிறக்கம்.
l ரத்தச் சர்க்கரை குறைவு.
l ஊட்டச்சத்துக் குறைபாடு.
l வயிற்றுப்புண்.l வாந்தி.
l அமிலம் எதிர்க்களித்தல்.
l டம்பிங் சிண்ட்ரோம் - இதனால் வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், குமட்டல் / வாந்தி ஏற்படலாம்.
l இரண்டாவது / மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
பேரியாட்ரிக், கொழுப்பு உறிஞ்சுதல் ஆகிய இரண்டும் ஆபத்தான அறுவைச் சிகிச்சைகளே. உயிரிழக்கும் ஆபத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த அறுவைச் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முக்கியமாக, சீருணவு, உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் உடல் எடையைக் குறைக்க முயன்று உரிய பலன் கிடைக்காவிட்டால் மட்டுமே இவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே உடல் எடை குறைப்புக்கு இந்தச் சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பது ஆபத்தில் முடியும் என்பதை நடிகை சேத்தனா ராஜ் மரணம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
| கொழுப்பு உறிஞ்சுதல் (Liposuction) உடலில் இருக்கும் கொழுப்பை அகற்ற உதவும் சிகிச்சைமுறை இது. இந்தச் சிகிச்சையின் மூலம் உடலில் குறிப்பாக இடுப்பு, தொடை, வயிறு, மார்புப் பகுதியில் இருக்கும் கொழுப்பு அகற்றப்படும். அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், சாதாரண ஊசி மூலமாகவும் உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படும். இந்தச் சிகிச்சையில் ரத்த இழப்புப் பெருமளவு குறைக்கப்படும். ஆனால், அதிகளவு உடல் எடையைக் குறைக்க இந்த முறை உதவாது. கொழுப்பு உறிஞ்சுதல் முறையின் ஆபத்துகள் # சருமத்தில் சுருக்கங்கள், தழும்புகள், புள்ளிகள் ஏற்படலாம். |
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in