

'ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா', 'விழிப்புள்ளி சிதைவு' போன்ற சரி செய்ய முடியாத பார்வை பிரச்சினையுடன் பலர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேருந்து நிலையத்திலோ, தொலைப்பேசி பூத்திலோ, வயர் சேர் பின்னும் இடத்திலோ, கோயில்- குளம் போன்ற இடங்களிலோ இந்த பார்வை பிரச்சினை உள்ளவர்களை அடிக்கடி நாம் பார்க்க முடியும்.
இவற்றுக்குச் சிகிச்சை கிடையாது. எனவே, வாழ்நாள் முழுவதும் பார்வை பாதிப்பு ஏற்பட்ட நிலையிலோ, பார்வையை முற்றிலும் இழந்தோ வாழ வேண்டிய சூழலுக்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா
குழந்தைப்பருவத்தில் மெல்ல ஆரம்பிக்கும் இந்தப் பிரச்சினை வளர வளர தீவிரமடையும். முற்றிய நிலையில் பார்வை முழுவதுமாக பாதிப்படையும். சிறுவயதில் மாலைக்கண் போன்று மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் பார்வையில் தடுமாற்றம் இருக்கும். வளரும்போது அதிகரித்து இருபது, இருபத்தைந்து வயதினை நெருங்கும்போது சிலருக்கு முற்றிலுமாக பார்வையிழப்பு ஏற்படலாம். நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்து கொள்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இப்பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம். அதேபோல், மரபுவழியில், பெற்றோரிடமிருந்தும் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான சாத்தியமும் உண்டு.
விழிப்புள்ளி சிதைவு
பெரும்பாலும் வயதானவர்களுக்கு, குறிப்பாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினை இது. விழித்திரையின் நடுப்பகுதி பாதிப்புக்குள்ளாவதால் இந்தச் சிதைவு ஏற்படுகிறது. இவ்வகை பாதிப்பில், பார்க்கும் உருவத்தின் இடையே திட்டு திட்டாகத் தெளிவில்லாமல் தெரியும். இதற்கு முழுமையான சிகிச்சை கிடையாது. நாளாக நாளாக இதனால் முற்றிலுமாக பார்வை இழப்பும் ஏற்படலாம்.
மின்னணு தீர்வுகள்
இவை போன்ற பார்வை பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்குப் பார்வை அளிக்கும் முயற்சிகள் 250 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. பெஞ்சமின் பிராங்கிளின், மின்சாரத்தைப் பயன்படுத்தி பார்வை பிரச்சினைக்கும், காது கேட்காத பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகு வந்த அறிஞர்கள் பெஞ்சமினின் கோட்பாடுகளின்படி மின்சாரத்தைக் கொண்டு செயற்கையாக விழித்திரையைத் தூண்டி பார்வை கொடுக்க முடியுமா என்று முயன்றிருக்கிறார்கள். இன்று, எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட 'பயோனிக் கண்' ( Bionic eye) மூலம் பார்வை அளிப்பதற்கான முயற்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
பயோனிக் கண்
கண்ணின் விழித்திரை என்பது ஒரு காமிராவின் பிலிம் ரோல் போன்றது. விழித்திரையில் ஒளிக்கதிர்கள் விழும்போது அதில் உள்ள செல்கள் அதற்கேற்றாற்போல வினை புரிகின்றன. விழித்திரையில் விழுகின்ற பிம்பத்தின் நிறம், ஒளிக்கதிரின் அடர்த்தி போன்ற அனைத்து விபரங்களும் நியூரான்களால் மூளையில் இருக்கும் 'பார்வை புறணிக்கு' ( Visual Cortex) கடத்தப்பட்டுப் பார்க்கும் பொருள் பற்றிய முழு செய்தியும் மூளையால் இனங்காணப்படுகிறது.
இதேபோன்ற செயல்தான் பயோனிக் கண்ணிலும் நடைபெறுகிறது. மூக்குக்கண்ணாடியில் இருக்கும் காமிராவிலிருந்து எடுக்கப்படும் படமானது நோயாளியின் பாக்கெட்டில் இருக்கும் புராஸசருக்கு செல்கிறது. பின் இந்த படமானது விழித்திரையில் பொருத்தப்பட்டுள்ள சில்லுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள பார்வை நியூரான்களை தூண்டுகிறது. இதனையே நம் மூளை ஒரு குத்துமதிப்பான காட்சியாக உணர்கிறது.
நம் கண்ணின் விழித்திரையில் இருக்கும் ஒளி ஏற்பியின் ( Photo receptors) செயலையே பயோனிக் கண்ணும் செய்கிறது. 2002-லேயே பயோனிக் கண் பொருத்தும் ஆய்வு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
ஆர்கஸ் II
பயோனிக் கண்ணின் முன்னோடி வடிவமே ஆர்கஸ் II. காமிரா பொருத்தப்பட்ட மூக்குக் கண்ணாடி, விழித்திரையில் ( Retina) உள்பதியமாக (Implant) பொருத்தப்பட்ட சில்லு ( chip), ஒரு புராஸசர் ஆகியவைதான் ஆர்கஸ் பயோனிக் கண் செயல்படத் தேவையானவை. ஆர்கஸ் IIவின் முதல் தலைமுறை 16 எலக்ட்ரோடுகள் கொண்டதாகும். இதன் மூலம் நோயாளியால் பொருளின் அசைவுகளை ஓரளவுக்குக் காணமுடியும். இரண்டாம் தலைமுறை ஆர்கஸ்IIவில் 60 எலக்ட்ரோடுகள் இருப்பதால் நோயாளிக்குப் பொருள் இன்னும் கொஞ்சம் தெளிவாகத் தெரிகிறது. எதிரில் இருக்கும் பொருள் டீ கப்பா, சாப்பாடுத் தட்டா என்று ஓரளவு இனங்காண முடிந்திருக்கிறது. எதுவும் தெரியாமல் இருந்ததற்கு இது ஒரு பெரிய விசயம்தான்.
ஆல்பா IMS
இதில் 1500 போட்டோடையோடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகக் காட்சியின் தெளிவு மேம்பட்டு இருக்கிறது. தற்போது இதில் 5000 போட்டோடையோடுகள் பொருத்தப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வுகளும் நல்ல முடிவுகளைக் கொடுத்துள்ளன. ஆராய்ச்சியாளர்கள் அதனைச் செயற்கை சிலிக்கான் விழித்திரை ( Artificial Silicon Retina) என்று சொல்கிறார்கள்.
போனிக்ஸ் 99
சிட்னி பல்கலைக்கழகமும், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகமும் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த போனிக்ஸ் -99 பயோனிக்கண் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது.
ஒரியன் பயோனிக் கண்
ஒரியன் பயோனிக் கண்ணில், உள்பதியத்தை மூளையில் நேரடியாகப் பார்வை புறணிக்கு அருகில் பொருத்துவதற்கு ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். இதன் மூலம் 'ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா' மற்றும் 'விழிப்புள்ளி சிதைவுக்கு' மட்டுமல்லாமல்; கண் நீர் அழுத்த நோய் ( Glaucoma), சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய் போன்ற அனைத்து வகை பார்வை இழப்புக்கும் பார்வை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வு நடத்தும் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
கண்மருத்துவத்தில் பயோனிக் கண் ஒரு புது வரவு. பார்வை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து போய் பார்வையே கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு மீண்டும் ஓரளவுக்கேனும் பார்வை கிடைப்பதற்குரிய வாய்ப்பு இருக்கிறது என்பதே மகிழ்ச்சிக்குரிய செய்திதானே.
கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com