மே 17 - உலக உயர் ரத்த அழுத்த நாள் | ஆபத்தை உணர்வோம், பாதிப்பைத் தவிர்ப்போம்

மே 17 - உலக உயர் ரத்த அழுத்த நாள் | ஆபத்தை உணர்வோம், பாதிப்பைத் தவிர்ப்போம்
Updated on
3 min read

உலகச் சுகாதார நிறுவனம் உயர் ரத்த அழுத்தம் குறித்து 2005ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கிய நாள் இது. உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களிடமும் உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதே அந்தப் பிரச்சாரத்தின் நோக்கம். அதற்காக, மே 17ஆம் தேதியை உலக உயர் ரத்த அழுத்த நாள் (WHD) என உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதன் படி, இன்று உலக உயர் ரத்த அழுத்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘ரத்த அழுத்தத்தை அளவிடுங்கள், அதைக் கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழுங்கள்’ என்பதே உலக உயர் ரத்த அழுத்த நாளுக்கான இந்தாண்டின் கருதுகோள்.

ரத்த அழுத்தத்தின் வகைகள்

பொதுவாக, ரத்த அழுத்தத்தில் ‘உயர் ரத்த அழுத்தம்’, ‘குறைந்த ரத்த அழுத்தம்’ என இரண்டு வகைகள் உள்ளன. 30 வயதுள்ள ஒரு சராசரி நபருக்கு ரத்த அழுத்தம் என்பது 120/80 மி.மீ. என்கிற அளவில் இருக்க வேண்டும். அதுவே சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுவது. இது ‘சுருங்கு அழுத்தம்’ எனப்படும். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் தன்னிடம் இருந்து ரத்தத்தை வெளியேற்றி, விரிந்த நிலையில் உடலிலிருந்து திரும்ப வரும் ரத்தத்தைப் பெறுவது. இது ‘விரிவு அழுத்தம்’ எனப்படும்.

உயர் ரத்த அழுத்தத்தின் நிலைகள்

உலகச் சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது. இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்று சொல்கிறது. உயர் ரத்த அழுத்தம் கீழ்க்கண்ட மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் நிலை

  • சிஸ்டாலிக் 140 – 159
  • டயஸ்டாலிக் 90 – 99

இரண்டாம் நிலை

  • சிஸ்டாலிக் 160 – 179
  • டயஸ்டாலிக் 100 – 109

மூன்றாம் நிலை / நெருக்கடி நிலை

  • சிஸ்டாலிக் 180 – க்கு மேல்
  • டயஸ்டாலிக் 110 – க்கு மேல்

எப்படி ஏற்படுகிறது?

நடுத்தர வயதை (35 To 40) கடக்கும்போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த ரத்தக் குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்க நேரிடும். நமது தவறான உணவுப் பழக்கங்களால் ரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் கெட்ட கொழுப்பு வகைகள், அந்தக் குழாய்களின் உள் அளவைச் சுருக்கும். இவற்றால், ரத்த ஓட்டத்தின் வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகும். இந்த நிலையே “ரத்தக் கொதிப்பு” என அழைக்கப்படுகிறது. ரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால், இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துத் தடுக்கவில்லை என்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களைப் பாதிக்கும். அவற்றில் ஏற்படும் நோய்களுக்கும் காரணமாக அது அமையும்.

காரணங்கள்

  • நாம் சாப்பிடும் உணவின் தன்மை
  • கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது,
  • மன அழுத்தம்.
  • எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
  • புகைப்பிடித்தல், மது அருந்துதல்
  • அதிக உடல் எடை
  • ஹார்மோன் கோளாறுகள்.
  • நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறுகள்.
  • உடற்பயிற்சியின்மை.
  • அதிக இரைச்சல், ஒலி மாசு உள்ள இடங்களில் வெகுநாட்கள் வாழ்வது.
  • மரபியல் காரணம்.
  • கருத்தடைக்கான மருந்துகளை அதிகம் பயன்படுத்துவது

பாதிப்புகள்

  • பக்கவாதம்.
  • பார்வை பறிபோகுதல்.
  • சிறுநீரகச் செயலிழப்பு.
  • இதய நோய், மாரடைப்பு

பாதுகாக்கும் வழிமுறைகள்

  • உணவில் உப்பின் அளவைக் குறைத்தல்.
  • பழங்களையும், காய்கறிகளையும் தினமும் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது.
  • மனத்தை எளிதாக வைத்துக்கொள்ளுதல்.
  • தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்தல்.
  • புகைபிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் போன்ற பழக்கங்களை அறவே தவிர்த்தல்.
  • தவறாமல் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளுதல்

அமைதியாகக் கொல்லும்

உலகளவில் தற்போது, 100 கோடிக்கும் அதிகமானோர் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சமீபகாலமாக நம் நாட்டில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்துவருகிறது. இந்த நோய் பலருக்கு எந்தவிதமான பாதக விளைவுகளையும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், அவர்களை ஆபத்தான கட்டத்துக்கு இட்டுச் செல்லும். அதாவது, இதன் காரணமாக, ஆரோக்கியமான மனிதராக நடமாடிக் கொண்டிருக்கும் நபர் திடீரென்று மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார். வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டாமல் இருப்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு ‘ அமைதியான கொலையாளி’ (Silent Killer) எனக் கருதப்படுகிறது.

பரிசோதனையே நம்மைக் காக்கும்

சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக்கூட உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, 20லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறையாவது ரத்த அழுத்தப் பரிசோதனையைச் செய்து கொள்வது அவசியம். 40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்தத்தைச் சோதித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மரபியல் ரீதியாக உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாகத் தங்களை மருத்துவரிடம் காட்டிப் பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம். போதுமான இடைவெளிகளில் அழுத்தப் பரிசோதனையைச் செய்து கொள்வதே, அது ஏற்படுத்தும் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கும் வழி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in