

உணவு நஞ்சாதல் (Food Poisoning) காரணமாக, ஆரணி தனியார் உணவகத்தில் கடந்த ஆண்டு சாப்பிட்ட பத்து வயது சிறுமி பலியானார். கேரளத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி சமீபத்தில் உயிரிழந்துள்ளார். உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 60 கோடி பேர் உணவு நஞ்சாதலால் பாதிக்கப்படுகின்றனர்; 4 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்தப் பிரச்சினையின் முழு வீரியம் குறித்து புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.
உணவு நஞ்சாதல் என்றால் என்ன?
கெட்டுப் போன உணவைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பே உணவு நஞ்சாதல். பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், நச்சுப் பொருட்கள், வேதிப் பொருட்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட உணவையோ பானங்களையோ அருந்தும்போது இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. உணவு பதப்படுத்தும் இடத்திலோ உற்பத்தி செய்யும் இடத்திலோ இவை உணவோடு கலந்து, உணவைக் கெட்டுப்போக வைக்கின்றன. உணவு பொருட்களைத் தவறாகக் கையாண்டால் அல்லது தவறாகச் சமைத்தால் உணவு நஞ்சாதல் ஏற்படக்கூடும்.
நஞ்சாவதற்கான காரணிகள்
l சமையல் மூலப்பொருட்களைக் கழுவாமல் இருப்பது
l சமைப்பதில் சுகாதாரமான முறையைக் கையாளாமல் இருப்பது
l பாதுகாப்பான வெப்பநிலையில் சமைக்காமல் இருப்பது
l குளிரூட்டப்பட்ட / உறைநிலையை முறையாகப் பேணாமல் இருப்பது.
உணவு நஞ்சாதலை ஏற்படுத்தும் கிருமிகள், ஒட்டுண்ணிகள்
ஈ.கோலி (E. coli): வேகவைக்கப்படாத இறைச்சி, பச்சைக் காய்கறிகளில் காணப்படும். இளம் குழந்தைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
லிஸ்டீரியா: மென்மையான பாலாடைக்கட்டி, உறைநிலையில் இருக்கும் இறைச்சி, வேக வைக்கப்படாத முளைவிட்ட பயிர் போன்றவற்றில் உள்ள பாக்டீரியா லிஸ்டீரியோசிஸ் தொற்றுநோயை ஏற்படுத்தும். இது கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும் ஆபத்து.
நோரோ வைரஸ்: முழுமையாக வேகவைக்கப்படாத மீனைச் சாப்பிடுவதன் மூலமோ, நோய்வாய்ப்பட்டவர் சமைத்த உணவைச் சாப்பிடுவதன் மூலமோ இந்த பாதிப்பு ஏற்படலாம்.
சால்மோனெல்லா: பச்சை முட்டை, வேகவைக்கப்படாத கோழி இறைச்சி போன்றவற்றால் இந்தத் தொற்று ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை வரலாம். உயிரிழப்பும் ஏற்படலாம்.
ஸ்டாப் தொற்று (staph): நம் கைகளிலிருந்து உணவில் பரவும் ஸ்டாப் பாக்டீரியாவால் இந்தத் தொற்று ஏற்படும்.
க்ளோஸ்ட்ரிடியம் பெர்பிரிங்ஜென்ஸ் (Clostridium perfringens): வேக வைக்கப்படாத இறைச்சி, சமைக்கப் பட்டுப் பதப்படுத்தப்படும் உணவு போன்றவற்றால் இந்தத் தொற்று ஏற்படலாம். குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவை அறிகுறிகள். பொதுவாக ஒன்றிரண்டு நாள் நீடிக்கும், சிலருக்கு சில வாரங்கள் நீடிக்கலாம்.
கேம்பிலோபாக்டர் (Campylobacter): இந்தப் பொதுவான பாக்டீரியா தொற்று, இரைப்பையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சி, அசுத்தமான காய்கறிகள், பால், நீர் போன்றவற்றால் இந்தத் தொற்று ஏற்படுகிறது.
டிரிசினெல்லா ஸ்பைரலிஸ் (Trichinella spiralis): இது ஒரு புழு. வேக வைக்கப்படாத / முறையாகச் சமைக்கப்படாத இறைச்சி, குறிப்பாகப் பன்றி இறைச்சியில் இது காணப்படுகிறது.
யார் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்?
l கர்ப்பிணிப் பெண்கள்.
l வயதானவர்கள் (65 வயதுக்கு மேற்பட்டவர்கள்).
l இளம் குழந்தைகள் (5 வயதுக்குக் கீழ்).
l புற்றுநோய், எச்.ஐ.வி அல்லது பிற நோய்களால் பலவீனமான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்கள்.
அறிகுறிகள்
l வயிற்றுப்போக்கு
l வயிற்றுப் பிடிப்பு.
l குமட்டல் l தொடர் வாந்தி.
l பசியிழப்பு.
l காய்ச்சல்.
l குளிர் நடுக்கம்.
எப்படிக் கண்டறிவது?
ஒருவருக்கு உணவு நஞ்சாதல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா அல்லது வேறு வகையான தொற்று இருக்கிறதா என்பதை பிரித்தறிவது கடினம். உணவு நஞ்சாதலின் அறிகுறிகள் இரைப்பைக் குடல் அழற்சியின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்ட பிறகு அறிகுறிகள் தோன்றினாலோ, அதே உணவைச் சாப்பிட்ட மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, உணவு நஞ்சாதல் பாதிப்பு என்பதை உறுதிசெய்யலாம். மல மாதிரி அல்லது ரத்தப் பரிசோதனை தேவைப்படலாம்.
சிகிச்சைகள்
நோய் ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் உணவு நஞ்சாதல் பாதிப்பை உடல் தானாகவே நிர்வகித்துக்கொள்ளும். வாந்தி அல்லது வயிற்றுப்போக்கால் கடுமையான நீரிழப்பு ஏற்பட்டால், மருத்துவமனையில் சிரை வழியாகத் திரவங்களை ஏற்ற வேண்டியிருக்கும். சில பாக்டீரியா வகைகளால் ஏற்படும் உணவு நஞ்சாதலுக்குச் சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைப் பரிந்துரைக்கப்படலாம்.
சிக்கல்கள்
l நீரிழப்புl கருச்சிதைவு அல்லது பிரசவம்l சிறுநீரகப் பாதிப்புl கீல்வாதம்l மூளை பாதிப்புl தீவிர பாதிப்பில் மரணமும் ஏற்படலாம்என்ன செய்ய வேண்டும்?
l எலக்ட்ரோலைட், பழச்சாறு பருகுங்கள்
l சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
l மீண்டும் சாப்பிடத் தயாராகும்போது, எளிதில் செரிக்கும் மிதமான உணவைக் குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள்
l நன்றாக ஓய்வெடுங்கள்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்
l அதிக காய்ச்சல் (102°Fக்கு மேல்).
lமலத்திலோ/வாந்தியிலோ ரத்தம் வருதல்.
l மிகுதியான நீரிழப்பு, சிறுநீர் கழிக்க முடியாத நிலை
l சில நாட்களுக்கு மேல் தொடரும் வயிற்றுப்போக்கு
l தசை பலவீனம் / மங்கலான பார்வை
l குழப்பம், தலைசுற்றல் அல்லது மயக்கம்.
தவிர்க்கும் வழிகள்
l சுத்தம், சுகாதாரத்தைப் பேணுங்கள்.
l உணவு வகைகளைத் தனித்தனியே பிரித்து வையுங்கள். ஒன்றால் மற்றொன்று கெட்டுப் போகும் சாத்தியத்தைத் தவிர்க்க இது உதவும்.
l முழுமையாக வேக வையுங்கள்
l குளிர்சாதனப் பெட்டியில் உணவை முறையாகக் கையாளுங்கள்
l ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்யுங்கள்
l உணவு காலாவதியாகும் நாட்களைக் கவனியுங்கள்
l ஏதேனும் உணவகத்தில் சாப்பிட்டு பாதிப்பு ஏற்பட் டால், உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள். இது மற்றவர்களைக் காக்க உதவும்.
எந்த உணவைத் தவிர்க்க வேண்டும்?
l வேக வைக்கப்படாத இறைச்சி, கோழி, மீன் வகைகள்
l பச்சை முட்டை அல்லது முழுமையாக வேக வைக்கப்படாத முட்டை
l வேக வைக்கப்படாத பீன்ஸ், முள்ளங்கி, கீரை
l பதப்படுத்தப்படாத பழச்சாறு
l பதப்படுத்தப்படாத பால், பால் பொருட்கள்
l நீல நரம்புகள் கொண்ட பாலாடைக்கட்டிகள்; பதப்படுத்தப்படாத பாலாடைக்கட்டிகள்
l குளிரூட்டப்பட்ட இறைச்சி
l உறைநிலையில் இருக்கும் இறைச்சி
சுவையைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது.