

சென்னையில் கோமாரி நோய் (Hand, foot, and mouth disease) பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது. இந்த நோயின் பாதிப்பு தானாகவே கட்டுக்குள் வந்துவிடும் என்றாலும், கோமாரி நோய்பரவுவதைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என குழந்தை நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எதனால் ஏற்படுகிறது?
கோமாரி நோய் என்பது ஒரு வைரஸ் தொற்று. இந்த தொற்றுநோய் காக்ஸ்சாக்கி வைரஸால் ஏற்படுகிறது. பொதுவாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. கை, கால்களில் வெடிப்பு, வாயில் புண் ஆகியவற்றுடன் காய்ச்சலும் இந்தத் தொற்றுநோயின் முக்கிய அறிகுறிகள். சின்னம்மைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றம் போன்றவையும் இதற்குத் தேவையில்லை.
மற்ற வைரஸ் நோய்களைப் போலவே இதுவும் ஒரு வாரத்தில் மட்டுப்பட்டுவிடும். இது வேகமாகப் பரவும் தொற்றுநோய் என்பதால், நோயாளியுடன் தொடர்பைத் தவிர்ப்பது நல்லது. நோய் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஏழு நாட்களுக்குப் பள்ளிகளுக்கோ குழந்தைப் பராமரிப்பு மையங்களுக்கோ அனுப்பக் கூடாது.
அச்சம் வேண்டாம்
இது குறித்து சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையின் துணை மருத்துவ இயக்குநர் ஜனனி சங்கர் கூறும்போது, “கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகளை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். இந்த நோயின் காரணமாக முழங்கை, பாதங்கள், புட்டம், வாய் ஆகியவற்றில் புண் ஏற்படலாம். இந்த நோய் மட்டுப்பட்டுவிடும் என்பதால், பெற்றோர் அதிகம் கவலைப்படத் தேவையில்லை” என்றார்.
குறைந்துவரும் தொற்று
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சமூகக் குழந்தை மருத்துவப் பிரிவின் இயக்குநர் ரெமா சந்திரமோகன் இந்த நோய் குறித்துக் கூறுகையில், ”கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு அதிக காய்ச்சல் இருப்பதில்லை. எனவே, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய தேவை இருக்காது. வெளிநோயாளிக்கான சிகிச்சையே அவர்களுக்குப் போதுமானது. இது எளிதில் தொற்றும் தன்மை கொண்ட நோய் என்பதால், வீட்டில் வேறு குழந்தைகள் இருந்தால், பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த ஆறு வாரங்களாக அதிகரித்துவந்த கோமாரி நோய் பாதிப்பு தற்போது குறைந்துவருகிறது” என்றார்.
பள்ளிக்கு உடனே தெரியப்படுத்துங்கள்
"கோமாரி நோய் பாதிப்புக்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். குழந்தை நர்சரி பள்ளிக்குச் சென்றால், உடனடியாக இந்தப் பாதிப்பு குறித்துப் பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். பள்ளியில் வைரஸை அழிப்பதற்குக் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மிக அரிதாக அசெப்டிக் மூளைக்காய்ச்சல், மயோர்கார்டிடிஸ் போன்ற சிக்கல்கள் இந்த நோயின் தாக்கத்தால் ஏற்படுகின்றன” என்று குழந்தை நல மருத்துவரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தலைவருமான இ.தேரனிராஜன் குறிப்பிட்டார்.
காக்கும் வழிமுறை
பெருந்தொற்று பரவல் காரணமாக, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குக் குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். கடந்த சில மாதங்களாகத்தான், பாதுகாப்பான அந்தச் சூழலை விட்டு அவர்கள் வெளியே வந்து பள்ளி செல்ல தொடங்கியுள்ளனர். பள்ளி செல்வது, வெளி மனிதர்களைச் சந்திப்பது, பேருந்து பயணம் போன்ற காரணங்களால் குழந்தைகளிடையே நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முகக்கவசம் உள்ளிட்ட நோய் கட்டுப்பட்டு நெறிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதே குழந்தைகளின் நலனைக் காக்கும் வழிமுறை.
நன்றி: தி இந்து