நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஏ.பி.சி.டி வழிமுறை

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஏ.பி.சி.டி வழிமுறை
Updated on
2 min read

அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்களான கார்டிசால், அட்ரீனலின், நார் அட்ரீனலின் போன்றவற்றை அதிகமாகச் சுரக்கின்றன. மன அழுத்தத்தைத் தூண்டும் இந்த ஹார்மோன்கள் இன்சுலின் செயல்பாட்டினை கடுமையாகப் பாதிப்பதன் மூலம் சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றன. மன அழுத்தம் குறையும்போது இந்த ஹார்மோன்களின் சுரப்பு குறைந்து சர்க்கரையின் அளவும் குறைகிறது.

மன அழுத்தத்தால் ஏற்படும் நீரிழிவு நோய் பிரச்சினைக்கு நன்றாக மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்க முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவத்துடன் மூச்சுப் பயிற்சியினையும் தொடர்ந்து செய்துவருவது நல்ல பலனளிக்கும். ஒருவேளை இரத்த அழுத்த உயர்வு இருந்தால் அதனைக் கட்டுப்படுத்தவும் இது உதவும்.

அது என்ன ஏ.பி.சி.டி?

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஏ.பி.சி.டி என்ற தாரக மந்திரத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டே இருந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வருவது உண்மை.

  • ஏ. ( A) ஹெச்.பி.ஏ.1.சி. (HbA1C) - பொதுவாக மூன்று மாத சர்க்கரை அளவின் சராசரி அளவு 6 -க்கு கீழ் இருக்க வேண்டும். நீரிழிவு நோய்க்கு மருத்துவம் எடுத்துக் கொள்பவர்களுக்கு 7க்கு கீழ் இருந்தால் நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லலாம்.
  • பி. ( B ) Blood Pressure . இரத்த அழுத்தம் இயல்பான அளவில் கட்டுக்குள் இருக்க வேண்டும்.
  • சி. ( C ) Cholesterol - கொழுப்பினை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.
  • டி. ( D ) Discipline - அதாவது ஒழுக்கம். இதுதான் இருப்பதிலேயே மிகவும் முக்கியம். ஆனால் பலருக்கும் கடினமானதும் கூட. அதாவது நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மருத்துவம் இவற்றினை மருத்துவரின் அறிவுரைப்படி முறையாகச் சரியாகத் தவறாது கடைப்பிடிப்பது.

இரத்த அழுத்த உயர்வினை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயினைத் தடுக்க முடியுமா?

இரத்த அழுத்த உயர்வினைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று அண்மையில் ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளிவந்துள்ள ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இரத்த அழுத்த உயர்வினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதயப் பிரச்சினைகள், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான பக்கவிளைவுகளையும் தடுக்க முடியும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நீரிழிவு நோய் கட்டுக்குள் வருவதில்லை என்று பலரும் புலம்புகிறார்கள். நேர்மறையான எண்ணம், நீரிழிவு நோயைக் குறைத்துவிட முடியும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கை இத்துடன் தொடர் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் சர்க்கரையின் அளவை உறுதியாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி எவ்வித பக்கவிளைவுகள் இன்றி நீரிழிவுடனேயே நலமாய் வாழவும் முடியும்.

கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in