

சில பழங்களைச் சாப்பிட்ட பிறகு, உணவு உண்ட திருப்தி கிடைக்கும். அதுவே தர்பூசணியை சாப்பிட்ட பிறகு தண்ணீரும் சேர்த்துக் குடித்த திருப்தி கிடைக்கும். ஆம், அவ்வளவு நீர்ச்சத்து நிறைந்தது தர்பூசணி. ஒரு கனிக்குள் தண்ணீர் தடாகத்தையே (தர்பூசணி) படைத்திருக்கிறது இயற்கை!
கோசா பழம், தர்பூஸ், தர்பீஸ், தண்ணிப் பழம் என பல்வேறு பெயர்களைக் கொண்டிருக்கும் தர்பூசணியின் தாயகம் ஆப்பிரிக்கப் பகுதி. காலப் போக்கில் பல்வேறு நாடுகளுக்குப் பல காரணங்களுக்காகப் பரவியது. இப்போது தர்பூசணி உற்பத்தியைக் கையில் எடுத்திருக்கும் நாடுகள் பல.
எப்படிச் சப்பிடலாம்?
தர்பூசணி சதைகளை அப்படியே சாப்பிடுவது ஒரு சுவை… ”அய்யோ குளிர்ச்சி, சளி பிடித்துக்கொள்ளும்” என அங்கலாய்ப்பவர்கள், மிளகுத் தூளைத் தூவி சுவைப் பிடித்துச் சாப்பிடலாம். மிளகாய்த் தூள் – உப்பு கலவையை தர்பூசணியில் தூவி சாப்பிடும் வழக்கம் பட்டித் தொட்டியெல்லாம் பிரபலம்.
90 சதவிகிதம் தண்ணீர் உள்ள தர்பூசணியின் சதைகளை சவைத்து நீர்ச்சத்து நாவிறங்க சுவைப்பது நல்லது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, நீரிழப்பை ஈடுசெய்யப் பழச்சாறாகவும் அருந்தலாம். பழத்தை வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தோ, பழத்தை வெட்டி நீண்ட நேரத்திற்குப் பிறகோ சாப்பிடுவது நல்லதல்ல.
பொதிந்திருக்கும் சத்துகள்
தர்பூசணியில் இருக்கும் லைகோபீன்கள், ஆன்டி-ஆக்சிடண்டாக செயல்பட்டு, உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். புற்று நோயைக் கட்டுப்படுத்தும் லைகோபீன்களின் செயல்பாடு குறித்து பல்வேறு ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இரத்தக் குழாய்களைக் கடினத் தன்மையடையாமல் பாதுகாக்கும் செய்கை தர்பூசணியில் இருக்கும் லைகோபீன்களுக்கு இருக்கின்றன. பழம் இயற்கையாக எந்தளவிற்குச் சிவந்திருக்கிறதோ, நிறைய லைகோபீன்கள் இருக்கிறது என்று அர்த்தம். அதே நேரத்தில் தோலை ஒட்டி இருக்கும் வெண்மையான பகுதியில் நலம் பயக்கும் ’சிட்ருலின்’ அமினோ அமிலம் நிறையவே இருக்கிறதாம்.
அள்ளித் தரும் நன்மைகள்
உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மையும் இதற்கு உண்டு என்கின்றன ஆய்வுகள். ஒரு துண்டு தர்பூசணியை கடித்து இரை குழலுக்குள் அனுப்பும் போது, கூடவே சிறிதளவு பொட்டாஷியம், மக்னீசியம், வைட்டமின் – சி போன்றவையும் உட்செல்லும். நீர்ச்சத்தோடு சிறிதளவு நார்ச்சத்தும் சேர்ந்திருப்பதால் மலத்தைக் கடினமின்றி இளக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும் கூறுகளும் தர்பூசணியில் இருக்கின்றன. விளையாட்டு வீரர்களின் செயல்திறனை அதிகரிக்க தர்பூசணி சிறந்தது என்று ஆய்வு நிரூபிக்கிறது.
கோடையில் உண்டாகும் நீர்வறட்சி, அதிக தாகம் போன்ற குறிகுணங்களுக்கு இயற்கை வழங்கிய வரம் தர்பூசணி. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, என்புகளுக்கு வலுவைக் கொடுக்கவும் இது உதவும். கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுப்பதோடு, உடல் முழுவதும் குளிர்ச்சியை அள்ளி வீசும். நீரிழிவு நோயாளர்கள், பழச்சாறாக எடுக்காமல், சில தர்பூசணி துண்டுகளைச் சுவைக்கலாம்.
குறைந்த அளவே கலோரிகளைக் கொடுக்கும் என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களின் மெனுவில் கட்டாயம் இடம் பிடிக்க வேண்டிய பழம் இது. வெப்ப காலங்களில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற குறிகுணங்களை அடித்துவிரட்டும் தர்பூசணி. ஏப்ரல், மே மாதங்களில் தர்பூசணியோடு நுங்கு, இளநீர் போன்ற இயற்கையின் செல்வங்களை உடலுக்குப் பரிசளியுங்கள்.
ஆண், பெண் தர்பூசணி
தர்பூசணியில் ஆண், பெண் வகைகளைக் கண்டறிகிறார்கள் விவசாயிகள். அதாவது தோல் தடித்து, பழம் சற்று நீண்டிருப்பது ஆண் என்றும், தோல் மெலிந்து வட்ட வடிவில் இருப்பது பெண் என்றும் குறிப்பு தருகிறார்கள். ஆண் பழத்தில் நீர்ச்சத்து அதிகமென்றும், பெண் பழத்தில் சுவை அதிகம் என்றும் தெரிவிக்கிறார்கள்.
பழுத்துவிட்டதா என்பதை அறிவது எப்படி?
தர்பூசணியின் காம்புப் பகுதி உலர்ந்திருந்தால் பழம் பழுத்துவிட்டது என்று அர்த்தம். காம்புப் பகுதி உலராமல் பசுமையாக இருந்தால் இன்னும் முழுமையாகப் பழுக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். கொடியில் உள்ள தர்பூசணி தரையில் தவழ்ந்த போது ஏற்பட்ட தழும்பு போன்ற பகுதி, சற்று மஞ்சள் நிறமாக இருப்பின் பழம் என்று தேர்வு செய்யலாம். வெண்மை நிறமிருந்தால் காயாக வகைப்படுத்தலாம். பழத்தின் அளவை விட, அதன் எடை அதிகமாக இருந்தால் நன்றாகப் பழுத்து நீரைத் தாங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறியலாம்.
தர்பூசணி ஹெல்மெட்
வெயில் சுட்டெரிக்கும் போது, தர்பூசணி பழத்தின் தோலைத் தலைக்கவசம் போலச் செய்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் தலையில் வைத்திருக்க, உடல் வெப்பம் குறையும். பழச்சதையை உடல் முழுவதும் பூசி, கால் மணி நேரம் கழித்து, கடலை மாவு தேய்த்துக் குளித்துவர, உடலின் வெப்பம் குறைவது மட்டுமன்றி, தேகம் பளபளக்கும். தேகத்தின் கட்டமைப்பைக் காக்கும் கொலாஜென், எலாஸ்டின் புரதங்களை அதிகரித்து சருமத்தை மினுமினுப்பாக்கும் தர்பூசணி!
இப்படியும் சாப்பிடலாம்
செரிமான பழ ஸ்னாக்: தர்பூசணி துண்டுகளை ஒன்றிரண்டாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போட்டு, சிறிது புதினா, கர்ப்பூரவள்ளி இலைகள், கொஞ்சம் மிளகுத் தூளை மேற் தூவி பரிமாற, ரசித்து சாப்பிடுவார்கள். வேனிற்கால செரிமானத் தொந்தரவைச் சீர்செய்யும் நலம் பயக்கும் ஸ்னாக் இது!
தர்பூசணி ஊறுகாய்: தோலை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற சதைப் பகுதியோடு (Rind), தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் சில நாடுகளில் உண்டு. 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வெளியான முதல் சமையல் புத்தகத்தில் இடம்பிடித்த ரெசிப்பி இது.
ஆரோக்கிய நொறுவை: தர்பூசணி விதைகளைத் தனியாக வறுத்துக்கொண்டு சுவைக்குக் கொஞ்சம் உப்பு சேர்த்து மாலை நேர நொறுவையாகச் சாப்பிடலாம். பல நாடுகளின் விருப்பமான நொறுவைப் பட்டியலில் இது இருக்கிறது. தர்பூசணிப் பழங்களின் மீதும் வறுத்த விதைகளைத் தூவி சாப்பிடலாம்.
தர்பூசணி-திராட்சை ரெசிப்பி: தர்பூசணி துண்டுகளோடு திராட்சை ரசம், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி, சாறு இறங்கச் சாப்பிட, சுவை கிறங்கடிக்கும்.
தேன் பழம்: விதை நீக்கிய தர்பூசணி துண்டுகளோடு, உலர்ந்த திராட்சை, பாதாம், முந்திரி சேர்த்து, தேன் குழைத்துச் சாப்பிட, இன்சுவை உடனடியாக நாவில் படரும்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com