

உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது பன்னெடுங்காலமாக இருக்கும் உலகளாவிய பிரச்சினை. ஆனால், வேதித் தாக்குதல் நடத்தி பழங்களைச் செயற்கையாகப் பழுக்கவைத்து, மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதென்பது சமீபத்தில் உருவெடுத்திருக்கும் பெரும் பிரச்சனை.
வாகனங்களுக்கு ‘வாட்டர் வாஷ்’ செய்வதைப் போல, காய்களை வேதிப்பொருட்களில் குளிப்பாட்டி சில மணி நேரத்தில் பழங்களாக மாற்றப்படுகின்றன. துணிகளை நீரில் அலசி எடுப்பதைப் போல, பழத்தார்களை வேதி நீரில் முக்கியெடுத்து, பளபள பழங்களாக மாற்றும் மாயாஜாலம் இன்று பல இடங்களில் அரங்கேறிவருகிறது.
கால்சியம் கார்பைடு கற்கள்
மாங்காய்களை கால்சியம் கார்பைடு கற்களை வைத்துப் பழுக்கவைக்கும் செயல்பாடு நாம் அனைவரும் அறிந்த ஒன்று. கால்சியம் கார்பைடு கற்கள் ‘அசிடலைன்’ வாயுவை வெளியிட்டு செயற்கையாகப் பழங்களைப் பழுக்க வைக்கின்றன. வெல்டிங் கடைகளில் பயன்படுத்தப்படும் கார்பைடு கற்கள், உணவு சார்ந்த பழங்களோடு தொடர்புகொண்டால், அதைச் சாப்பிடும் நமக்கு எவ்வளவு பாதிப்புகள் உண்டாகும் என்பதை அனுமானிக்க முடிகிறதா? நீண்ட நாட்களுக்கு கார்பைடு கற்களின் உதவியால் பழுத்த பழங்களைச் சாப்பிடும்போது பேதி, வயிற்றுப் புண் தொடங்கி புற்றுநோய் வரை ஏற்படும் சாத்தியம் உண்டு. கல்லீரலையும் பாதிக்கலாம்!
தரநிர்ணயம் குறித்த சந்தேகங்கள்
பொதுவாகப் பழங்களைப் பழுக்க வைக்க, எத்திலின் ஸ்பிரே பயன்படுத்தப் படுகிறது. பழங்களைப் பழுக்கவைக்கக் குறைந்த அளவில் எத்திலின் ஸ்பிரேவைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறது உணவுப் பாதுகாப்புத் துறை. ஆனால், அவை அளவோடுதான் அனைத்து இடங்களிலும், பழ மண்டிகளிலும் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறி. தற்போது பவுடர் நிரப்பப்பட்ட பொட்டலங்களும் (Ethephom sachet technique) பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அதற்கான தரநிர்ணயம் குறித்த சந்தேகங்கள் நிறையவே இருக்கின்றன.
வேதிப்பொருட்களின் ஆதிக்கம்
இயற்கைக்கு எதிராகச் செய்யப்படும் எந்த ஒரு விஷயமும் ஏதாவதொரு வகையில் நிச்சயம் எதிர்வினையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆண்டுக் கணக்காகத் தாக்குதலுக்கு உட்பட்ட பழங்களைச் சாப்பிட்டு வரும்போது, மூச்சுவிடச் சிரமம், நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள், நரம்புத் தளர்ச்சி, தசைகளின் பலவீனம்… நரம்பு மண்டலத்தில் பாதிப்பு எனப் பல பிரச்சினைகள் ஏற்படலாம். ‘பழங்கள் இருந்தால் நோய்களைப் பற்றி கவலையில்லை’ என்ற நிலை மாறி, பழங்களின் மூலம் நோய்கள் பெருகும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வேதிப்பொருட்களின் ஆதிக்கம் மிகுந்த உணவுக் கலாச்சாரத்தில் வாழ்ந்து வருகிறோம். கூடுதலாக வேதிக் குளியலுக்கு உட்படுத்தப்பட்ட பழங்களை உட்கொள்ளும்போது ஏற்படும் விளைவுகளை நினைக்கும்போது அச்சம் சூழ்கிறது.
பழங்களைப் பழுக்கவைக்க வேதி மருந்தை, ‘பழத்தார் மருந்து’ என அழைக்கிறார்கள் வியாபாரிகள். செயற்கையாகப் பழம் பழுக்க வைக்கப்படுவதைப் பல பகுதிகளில் ‘ஊதல்’ என்று சொல்கிறார்கள். பழங்களை வேதிப்பொருட்களின் மூலம் செயற்கையாகப் பழுக்கவைப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. இருப்பினும், பழ மண்டிகளில் நடைபெறும் உள்வேலைகளால் மிகப் பெரிய பாதிப்பு சமுதாயத்திற்குக் காத்திருக்கிறது. அதிகாலை வேளையில் ஒரு பழ மண்டிக்கு ரகசியமாகச் சென்று பாருங்கள். அங்கே நடக்கும் களேபரங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தும். பழங்கள் குறித்து மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படும்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
வாழைப்பழம்: வாழைப்பழங்களின் காம்பும் பழத்தோடு சேர்த்து மஞ்சள் நிறமாக இருந்தால் வேதித் தாக்குதலுக்கு ஆளானது என்பதை அனுமானித்துக் கொள்ளலாம். காம்பின் நிறம் பசுமையாகவும், பழத்தின் நிறம் மஞ்சள் நிறத்திலும் இருப்பின் இயற்கையான காத்திருப்புக்குப் பின்னர் பழுத்தது என்பதை உறுதி செய்யலாம்.
பழுக்காத காய்களை வாங்கி வந்து, கம்பிகளில் தொங்க விட்டுப் பழுக்கப் பழுக்க வாழைப் பழங்களைச் சாப்பிடுவதே சரியாக இருக்கும்… பானைக்குள் பழுக்காத காய்களைப் போட்டு, வேப்பிலைகள் சேர்த்துப் பழுக்கச் செய்யும் நமது பாரம்பரிய முறையை முயன்று பார்க்கலாம். முடிந்தால் அருகில் இருக்கும் தோப்பில் அல்லது இயற்கை விவசாயிகளிடம் வாழைத் தாராக வாங்கி வைத்து, பழமாக மாறும்போது சுவைத்து மகிழலாம்.
மாம்பழம்: கார்பைட் கற்களின் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களுக்குள் வெளிர் மஞ்சள் நிறம் இருப்பதைப் பார்க்க முடியும். சாப்பிட்டவுடன் லேசான தொண்டை எரிச்சல், வயிறு எரிச்சல் போன்றவை ஏற்படலாம். மாம்பழத்தின் மீது வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அக்காலத்தில் மஞ்சள் புல், வைக்கோல் பரப்பி அதற்கிடையில் மாங்காய்களை வைத்துப் பழுக்கச் செய்யும் முறை இக்காலத்திற்கும் உகந்தது. அரிசிப் பானைக்குள் மாங்காய்களைப் போட்டு, அவை பழமாக மாறும் வரை காத்திருந்த நாட்கள் சுவைமிக்கவை! அரிசிப் பானைக்குள் மாங்காய்களைக் கண்டுபிடித்து விளையாடுவது அக்காலச் சிறுவர்களின் பொழுதுபோக்கும்கூட!
திராட்சை: பூச்சிக்கொல்லி மருந்தின் ஆதரவோடு சந்தைக்கு வரும் திராட்சைக் கொத்துகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம். கருப்பு திராட்சை மீது படிந்திருக்கும் வெள்ளை நிற படிமத்தைக் கவனித்திருக்கலாம். புளி கரைத்த நீரிலோ அல்லது எலுமிச்சை சாறு கலந்த நீரிலோ திராட்சைகளை நன்றாகக் கழுவிவிட்டுச் சாப்பிட்டால், பூச்சிக்கொல்லி பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.
தர்பூசணி: இரண்டாக வெட்டிய தர்பூசணி யில் பஞ்சுவைத்துத் துடைத்தால் சிவப்பு நிறம் ஒட்டிக் கொள்ளும். பொதுவாக தர்பூசணியை நன்றாகப் பிசைந்தால்தான் சிவப்பு நிறம் இழையோடும். ஆனால், நிறமி செலுத்தப்பட்ட தர்பூசணிப் பழத்தைத் தண் ணீரில் கழுவினாலே சிவப்பு நிறம் வழிந்தோடுவதைப் பார்க்கலாம்.
ஆப்பிள்: ஆப்பிள் பழங்கள் சார்ந்திருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு மெழுகு! பெட்ரோ லியம் சார்ந்த மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்கள் ஆபத்தானவை. கத்தியை வைத்து ஆப்பிளின் மேற்தோலை சுரண்டினால், மெழுகுவர்த்தியிலிருந்து மெழுகு உதிர்வதைப் போல ஆப்பிளின் மேற்தோலிருந்து உதிர்வதைப் பார்க்கலாம். தண்ணீரில் ஆப்பிளைப் போட்டால் வெள்ளைப் படிமங்கள் நீரில் மிதப்பதை உணரலாம். பல்வேறு முறைகள் பழங்களில் மெழுகு பூசக் கையாளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
விழிப்புணர்வே காக்கும்
அனைத்துத் துறையிலும் தொழில் சார்ந்த உத்திகள் உண்டு. ஆனால், உணவு சார்ந்த விஷயத்தில் அறமற்ற செயல்பாடு நடைபெறுகிறதெனில் பாதிக்கப்படப் போவது நாம்தான். ஒரு பழ மண்டியிலிருந்து பள்ளிக் குழந்தைகளுக்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கோ செயற்கை வேதிப்பொருட்களின் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை வாங்கிச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம், அதனால் பாதிப்பு ஏற்படுமானால் யார் பொறுப்பு? அது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வேதித் தாக்குதலுக்கு ஆட்பட்ட பழங்களை வாங்கிச் செல்லும் நாமும் ஏதோ ஒரு வகையில் குற்றவாளிகள்தானே!
கலப்படத்தைக் கண்டறியும் முறைகளைப் பற்றி Food Safety and Standards Administration of India (FSSAI), Detect Adulteration with Rapid Test (DART) அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. மக்களாகிய நாமும் பழங்கள் மீது நடைபெறும் வேதித் தாக்குதல் சார்ந்த விஷயங்களையும், அது சார்ந்த பாதிப்புகள் குறித்தும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்! ‘ஒருவரின் அறியாமை மற்றொருவருக்கான ஆதாயம்’ எனும் வாக்கியம் பழ வணிகத்துக்கும் பொருந்தும்.
பருவ காலம் தப்பிக் கிடைக்கும் பழங்கள் வேதித் தாக்குதலுக்கு ஆட்பட்டிருக்கலாம் என்று அனுமானித்துக்கொள்ளலாம். மரத்திலே காய்த்து அங்கேயே கனியாகும் பழங்களில் மிகப்பெரிய அளவில் வேதித் தாக்குதல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. மரத்திலிருந்து காயாகப் பறிக்கப்பட்டு, பிறகு பழுக்கவைக்கப்படும் பழங்களில் செயற்கையின் தாக்கம் அதிகம் இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்வோம்! வேதித் தாக்குதல் இல்லாமல் தப்பித்துக்கொண்ட பழங்கள், இயற்கையின் வரங்கள்!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com