மே 3 உலக ஆஸ்துமா தினம் - தெளிவான புரிதலே ஆஸ்துமாவை வெல்லும் வழி

மே 3 உலக ஆஸ்துமா தினம் - தெளிவான புரிதலே ஆஸ்துமாவை வெல்லும் வழி
Updated on
2 min read

ஆஸ்துமா என்பது நுரையீரல்களின் காற்றுப்பாதைகளைப் பாதிக்கும் ஒரு சுவாசப் பிரச்சனை. ஆஸ்துமாவைத் தூண்டும் சில பொருட்களுக்கு காற்றுப்பாதைகள் ஆற்றும் எதிர்வினையால் ஏற்படும் பாதிப்பு அது. இந்த எதிர்வினையால், காற்றுப்பாதைகளைச் சுற்றியுள்ள தசைகள் இறுகுகின்றன; இதன் காரணமாக காற்றுப்பாதை குறுகலாவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இதன் காரணமாக, உபரியாகச் சுரக்கும் சளி காற்றுப்பாதையை மேலும் சுருங்கச் செய்கிறது. இவை அனைத்துமே கேட்பதற்கு அச்சமூட்டுவதாக இருந்தாலும், அதை எளிதில் சமாளிப்பதற்கு இன்றைய நவீன மருத்துவம் நமக்கு உதவும் என்பதே உண்மை.

அறிகுறிகள்

  • மூச்சுத்திணறல்
  • இளைப்பு
  • கடுமையான இருமல்
  • நெஞ்சில் இறுக்கம்
  • பதற்றம்

என்ன செய்ய வேண்டும்?

அறிகுறிகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதன் மூலமாக, ஆஸ்துமா தாக்குதல் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியும், அல்லது நிலைமை மோசமாவதை நாம் தடுக்க முடியும். ஆஸ்துமா பாதிப்பு கடுமையான நிலையான நிலையை எட்டினால், அது உயிருக்கு அச்சுறுத்தலாகி, ஒரு அவசரநிலையை ஏற்படுத்தி விடும். ஆஸ்துமா நோயாளிகள் இன்ஹேலர் மருந்தளிப்புகளை முறையாக எடுத்து வந்தால், அவர்களுக்கு ஆஸ்துமா தாக்குதல் ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவு என்பதை இங்கே நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

உங்களுக்கோ அல்லது உங்களைச் சுற்றியிருக்கும் யாரேனும் ஒருவருக்கோ ஆஸ்துமா தாக்குதல் ஏற்பட்டால், முதலில் பதற்றமடையாமல், அமைதியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். பின்னர் கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும்:

  • நேராக நிமிர்ந்து உட்கார்ந்து உங்கள் ஆடைகளைத் தளர்த்தி விடவும்.
  • உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ரிலீவர் இன்ஹேலரை தாமதமின்றி பயன்படுத்தவும்.
  • ரிலீவர் இன்ஹேலரை பயன்படுத்திய பிறகு 5 நிமிடங்களுக்குள் நிவாரணம் கிடைக்கவில்லை எனில், மருத்துவர் பரிந்துரைத்தபடி ரிலீவர் இன்ஹேலரின் இதர டோஸ்களையும் எடுக்க வேண்டும்.
  • இன்னமும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில், தாமதமின்றி அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
  • முக்கியமாக, மருத்துவரிடம் ஆலோசிக்காமல் ரிலீவர் இன்ஹேலர் டோஸ் வரம்பை நீங்களாகவே அதிகரிக்கக்கூடாது.

உடனடி மருத்துவ அனுமதி எப்போது தேவைப்படும்?

  • நிறம் மாறிய (நீலம் அல்லது பழுப்பு) உதடுகள், முகம் அல்லது நகங்கள்
  • மூச்சு விடுவதில் கடுமையான சிரமம்
  • பேசுவது அல்லது நடப்பதில் சிரமம்
  • சுவாசிக்கச் சிரமப்படுவதால் ஏற்படும் அதீத பதற்றம் அல்லது பயம்
  • நெஞ்சு வலி
  • வேகமான நாடித்துடிப்பு , முகம் வெளிறி வியர்த்தல்

எப்படித் தவிர்ப்பது?

ஆஸ்துமா நோயைக் கட்டுக்குள் வைக்க சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலில் ஆஸ்துமாவைத் தூண்டும் பொருட்களைக் கண்டறிய வேண்டும். உதாரணமாக வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தும்போது அசவுகரியமாக உணர்ந்தால். அதைத் தவிர்த்துவிட வேண்டும். இதுபோன்று எவையெல்லாம் ஆஸ்துமாவைத் தூண்டுகிறது என்பதை அறிந்து அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் பக்கம் தலை காட்டக் கூடாது.

எந்த உணவையாவது, பழங்களையாவது சாப்பிட்ட பிறகு சளி பிடிக்கிறது என்றால் அதைத் தவிர்க்க வேண்டும். செல்லப் பிராணிகள் வளர்ப்பதையும் கொஞ்சுவதையும் தவிர்க்க வேண்டும். வீட்டில் ஒட்டடை அடிப்பது, சாம்பிராணி, ஊதுபத்தி பயன்படுத்துவது போன்றவை கூடாது. வெளியே செல்லும்போது தூசி அதிகமாக இருக்கும். வாகனப் புகையும் இருக்கும். இதிலிருந்து தப்பிக்க முகக் கவசம் அணிந்துகொள்வது ஆஸ்துமா தாக்கும் அபாயத்தைக் குறைக்கும்.

புகை பிடிப்பதால் ஆஸ்துமா வரும் சாத்தியம் அதிகம் உண்டு. எனவே, புகை பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். சிகரெட் பிடிப்போர் மத்தியில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அப்படிச் செய்யும்போது நுரையீரல் சோதனையும் செய்துகொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி

ஆஸ்துமாவிலிருந்து தப்பிக்க மூச்சுப் பயிற்சி மிகவும் அவசியம். தினமும் காலைக் கடன்களை முடித்துவிட்டு மூச்சுப் பயிற்சி செய்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மூச்சுப் பயிற்சியில் காற்றை இழுக்கும்போது 30 விநாடிகளுக்குக் காற்றை உள்ளே இழுத்தால். காற்றை வெளியிடும்போது ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

உலக ஆஸ்துமா தினம்

ஆஸ்துமா நோய் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு பாதிப்பு. ஆனால், இந்த நோய் குறித்த முன்னெச்சரிக்கைகள், மருத்துவச் சிகிச்சை முறைகளைப் பாதிக்கப்பட்டவர்கள்கூட முழுவதுமாக அறிந்து இருப்பதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. இந்நிலையில், ஆஸ்துமா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, உலக ஆஸ்துமா தினம் 1998ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் மே 3 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆஸ்துமா குறித்த தெளிவான புரிதலே, ஆஸ்துமாவுக்கான சிகிச்சையின் முதல் படி என்பதால், ஆஸ்துமா குறித்த புரிதலை மேம்படுத்துவோம்; ஆஸ்துமாவை வெல்வோம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in