

நம்மோடு நெருங்கி உறவாடும் பழங்களை யாருக்குத் தான் பிடிக்காது. 'பழங்களைப் பிடிக்காதவர்கள் இப்பூவுலகில் உண்டோ…' என்ற கேள்வியை இக்காலத்தில் எழுப்பினால், பதில் என்னவாக இருக்கும்!... 'பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்…' எனும் வருத்தம் தரக்கூடிய பதிலை நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும். பழங்களைப் பிடிக்காமல், அவற்றைச் சுவைக்காமல், அதிலிருந்து கிடைக்கும் சத்துகளை அனுபவிக்காமல் இருக்கும் மக்கள் நமது சமுதாயத்தில் நிறையவே இருக்கிறார்கள்! பழங்களோடு நமக்கிருந்த மரபு பிணைப்பு தற்போது கொஞ்சம் அறுபட்டதாகவே தோன்றுகிறது.
இப்போதைய தலைமுறையில் ஒரு முறை கூட மாதுளையின் சுவையை அறிந்திடாத மனிதர்களை நான் அறிவேன்! அத்திப் பழத்தின் துவர்ப்பை உணர்ந்திடாத ஆட்கள் எத்தனையோ பேர்! விளாம்பழமா… சப்புக் கொட்ட வேண்டிய பழத்தை, 'உவ்வே' என உச்சுக்கொட்டும் துரித மனிதர்கள் நிறையப் பேர்!... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்! பழங்கள் சார்ந்த அடிப்படை விஷயங்களாவது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டாமா! நமது அன்றாட உணவியலில் பழங்கள் கட்டாயம் இடம் பிடிக்கும்படி மாற்றங்கள் நிகழ வேண்டும். பழங்களின் பலன்களை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும்!
நேரடியாகப் பழங்களை அறிமுகப்படுத்துங்கள் பெற்றோர்களே!...
அடுத்த தலைமுறையை ஆரோக்கிய தலைமுறையாக உருமாற்ற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம் நாம்! ஆரோக்கியத்தை விதைக்கப் பழங்களே சிறப்பான ஆயுதம்! பிள்ளைகளுக்குத் துரித உணவு ரகங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, பழங்களின் பெருமைகளை எடுத்துக்கூறுங்கள். சூப்பர் மார்க்கெட்டில் சென்று பழங்களைச் சுட்டிக்காட்டுவதை விட, பழ மரங்களைத் தேடி அருகிலுள்ள கிராமங்களுக்கு உங்கள் சுட்டிகளை அழைத்துச் செல்லுங்கள்! வாய்ப்பு இருந்தால் பழங்களுக்குப் புகழ் பெற்ற தளங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்! 'சேலத்து மாம்பழம்' எனும் பெயர் உருவானது எப்படி… 'ஏலக்கி வாழை' எனும் பெயர் ஏற்பட்டது எப்படி… எனப் பழங்கள் சார்ந்த விவரங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!
அத்திப் பரிச்சை
மரத்தின் உடலோடு ஒட்டி உறவாடும் அத்திக் காய்கள், அத்திப் பழங்களின் பாசப் பிணைப்பை அவர்கள் நேரடியாக அறிந்துகொள்ளட்டும். நாம் அதிகம் சாப்பிடாத துவர்ப்பு சுவைக்கு அத்திப்பழம் சிறந்த எடுத்துக்காட்டு எனும் பேருண்மையை அவர்களிடம் விளக்கிக் கூறுங்கள். கூடவே அத்தி மரத்தில் இடைவிடாமல் பாடிக்கொண்டிருக்கும் 'குக்குறுவான்' எனும் அழகிய பறவையையும் உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். சித்திரை மாதத்தில் தயாரிக்கப்படும் அத்திக்காய் சமையல் குறித்து விளக்கிக் கூறுங்கள்! குழந்தைகளின் பழத்தேர்வில் மாற்றங்கள் நிகழ்வதை படிப்படியாக உணர்வீர்கள்!
பழ சுற்றுலா
ஆப்பிள் மரங்களைத் தேடி ஜம்முவிற்குத் தான் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை! கொய்யாவையும் மாம்பழங்களையும் தேடி அருகில் உள்ள தோப்பிற்கு அழைத்துச் செல்லுங்கள். ஆப்பிள் பழங்களுக்கு நிகரான சத்துக்களைப் பொதித்து வைத்திருக்கின்றன கொய்யாவும் மாங்கனியும்! சிவந்திருக்கும் கொய்யாக் கனிகளை உங்கள் துணையோடு கிளை ஏறிப் பறித்திடும் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுங்கள்! மாம்பழங்களின் ருசியை நேரடியாக உணர்த்திடுங்கள்! நெகிழி குவளைகளில் அடைக்கப்பட்ட செயற்கை பழரசங்களுக்கும், இயற்கையான பழச்சாறுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துச்சொல்லுங்கள். கொய்யாவும், மாங்கனியும் குழந்தைகளின் மனதில் சுவையாக ஒட்டிக்கொள்ளும்!
மருந்தில்லா பழங்கள்
கொய்யாவில் ஊடுருவும் சிறு புழுக்களைச் சுட்டிக் காட்டுங்கள்… மாம்பழத்தில் விளையாடும் வண்டுகளைப் பற்றிச் சொல்லிக்கொடுங்கள்! பூச்சி மருந்து அடிக்கப்பட்ட பழங்களில் புழுக்களும் வண்டுகளும் இல்லாதிருப்பினும், பூச்சி மருந்து அடித்த பழங்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதகங்களைப் பட்டியலிடுங்கள்! பூச்சி மருந்தை விட, புழுக்களும், வண்டுகளும் பெரிய எதிரிகள் அல்ல எனும் உண்மை அவர்களுக்குத் தெரியட்டும். இயற்கை விவசாயம் குறித்த செய்திகளையும் குழந்தைகள் தெரிந்துகொள்ளட்டுமே! மருந்தில்லா பழங்களைச் சாப்பிட்ட கடந்த தலைமுறையின் ஆரோக்கியக் குறிப்புகளைக் குழந்தைகளிடம் பட்டியலிடலாம்.
விளா மரத்தடியில் நின்றுகொண்டு, விளாம்பழங்கள் சார்ந்த கிராமத்து நினைவுகளை அவர்களோடு பகிருங்கள்! பழங்களை விற்கும் கிராமத்துப் பாட்டிகளின் பெருமைகளை அவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள்! இருக்கவே இருக்கிறது திராட்சைத் தோட்டம்… தென் தமிழக திராட்சை வளர்ப்பு குறித்து எடுத்துக்கூறுங்கள்! திராட்சையின் விசாலமான பயன்பாடு குறித்துத் தெரியப்படுத்துங்கள்!
ஒரு பழ சுற்றுலா சென்று வந்த பிறகு, உங்களால் காண்பிக்க முடியாத பழங்களைப் பழ மார்க்கெட்டிலோ, சூப்பர் மார்க்கெட்டிலோ காட்டி சொல்லிக்கொடுங்கள்! 'நம் நாட்டுப் பழங்கள் இன்றி பல்வேறு வெளிநாட்டுப் பழ ரகங்களும் இப்போது எளிதாகக் கிடைக்கின்றன… நம் நாட்டுப் பழங்கள், வெளிநாட்டுப் பழங்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவை அல்ல…' எனும் பேருண்மையைத் தவறாமல் அவர்களின் மனதில் பதிய வையுங்கள்! 'விலையுயர்ந்த பழங்கள்தான் உசத்தி என்றில்லை… விலை மலிவான பழங்களும் நோய் போக்குவதில் உசத்தித் தான்…' என்பதை உறுதியாகச் சொல்லுங்கள்!
ராஜ விருந்துகளில் இடம்பிடித்த பழங்கள்
பழங்களை வைத்தே பல நோய்களைப் போக்க முடியும். பல நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ளவும் முடியும். பழங்கள் சார்ந்து எத்தனை பானங்கள் இருந்திருக்கின்றன என்பதைப் பழங்கால நூல்களின் மூலம் அறியும் போது, மனம் உற்சாகமடைகிறது. பழங்கள் சார்ந்து எண்ணிலடங்கா உணவு ரகங்களை நம் முன்னோர்கள் சாப்பிட்டுப் பழகியிருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும்போது, முன்னோர்கள் காலத்தில் வாழப் பேராசை துளிர்விடுகிறது.
பல மன்னர்களின் உணவு மேஜையைப் பழங்கள் அலங்கரித்திருக்கின்றன! அரசர்களுக்கான ராஜ பானங்களை உருவாக்கப் பழங்கள் உதவி இருக்கின்றன… மருத்துவர்களின் 'மருந்துப் பெட்டகத்தில்' உலர்ந்த பழங்கள் இடம்பிடித்திருக்கின்றன! பயண உணவாகவும் பழங்கள் பயன்பட்டிருக்கின்றன! பஞ்சம் போக்கும் அட்சய பாத்திரமாகவும் பழங்கள் பேருதவி செய்திருக்கின்றன! ஒவ்வொரு வீடு தோறும் பழ மரங்கள் விளைவிக்கப்பட்டிருக்கின்றன! கிராமங்களில் ஆங்காங்கே பழத்தோட்டங்களும் தோப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன! எளியோருக்கான உணவுப் பொருளாகவும் உருமாறிப் பசியாற்றியிருக்கின்றன பழங்கள்!
சுவைமிக்க பழச்சங்கிலி
நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் ஒவ்வொன்றாய் நிகழும்! சமுதாயத்தில் மாற்றங்களைத் தனி மனிதர்கள் தான் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதரின் செயல்பாடுகளால், கூட்டுச் சங்கிலியாய் உறுதியடைந்து சமுதாயம் மேம்படும். பழங்களின் அருமை பெருமைகளை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் எனும் இந்த 'பழச்சங்கிலி' நோயில்லா வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது! சுவைமிக்க பழச்சங்கிலியை உருவாக்க உறுதி எடுப்போம்! பழச்சங்கிலியைக் காப்போம்!...
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com