வெள்ளெழுத்து பிரச்சினையைத் தடுக்க முடியுமா?
புகழ்பெற்ற அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் ஒருமுறை இரயிலில் பயணம் செய்தபோது, ரயில்வே பணியாளர் உணவுக்கான மெனுகார்டினை அவரிடம் கொடுத்தார். வெள்ளெழுத்து கண்ணாடியை எடுத்துவர மறந்துவிட்டதால் ஐன்ஸ்டீனால் அதைப் படிக்க முடியவில்லை. மெனுகார்டினை பணியாளரிடம் கொடுத்து இதில் என்ன இருக்கிறது என்று கேட்டார். "நீங்களும் என்னை மாதிரிதானா? எனக்குப் படிக்கத் தெரிந்திருந்தால் நான் ஏன் இந்த வேலைக்கு வருகிறேன்" என்றாராம்.
2018-ல் கர்நாடகாவில் அப்போதைய முதல்வர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரெய்ச்சூர் சென்றிருந்தபோது வெள்ளெழுத்துக் கண்ணாடியைக் கொண்டு செல்ல மறந்துவிட்டதால் ஹெலிகாப்டரை பெங்களூருக்கு அனுப்பி எடுத்துவரச் செய்தார்கள். கண்ணாடி இல்லாமல் படிக்க முடியாததால் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அதுவரையில் அறைக்குள்ளேயே இருந்தார் என்ற செய்தி அப்போது அனைத்து பத்திரிக்கைகளிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. எல்லாம் வெள்ளெழுத்து படுத்தும் பாடு.
பொது இடங்களில் படித்தவர்கள்கூட வெள்ளெழுத்து பிரச்சினையால் சிரமப்படுவதுண்டு. கடைகளில் விற்பனையாளர்களும் வெள்ளெழுத்துப் பிரச்சினையால் விலைப்பட்டியலைப் பார்த்து விலையைச் சொல்லத் தெரியாமல் தடுமாறுவதுண்டு. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பலர் எதிர்கொள்ளும் பிரச்சினை இது. நாற்பது வயதை நெருங்கும்போது முடி நரைப்பதில்லையா! அது போல நாற்பது வயதில் நம் கண்ணில் உள்ள லென்சின் சுருங்கி விரியும் தன்மையில் பிரச்சினை ஏற்படுகிறது. இதன் காரணமாக ஏற்படுவதே வெள்ளெழுத்து பிரச்சினை.
முந்தைய தலைமுறையினருக்கு சாளேஸ்வரம்
வெள்ளை பேப்பரில் கருப்பாக இருக்கும் எழுத்துக்கள் இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு வெளிறிப்போய் மங்கலாக வெள்ளையாகத் தெரிவதால் இதனை வெள்ளெழுத்து என்கிறார்கள். இதுவே நம் முந்தைய தலைமுறையினருக்கு சாளேஸ்வரம். இப்படி சாளேஸ்வரம் என்று ஏன் சொல்கிறார்கள் என்று தேடினால் எங்கும் குறிப்பும் இல்லை. தமிழ் அறிஞர் நண்பர் ஒருவர் இது உருது சொல் என்று உறுதிப்படுத்தினார். உருது புலவரிடம் இதற்கு மேலும் விளக்கம் கிடைத்தது. உருது மொழியில் சாளீஸ் என்றால் 40. வரம் என்றால் வலி. ஆக 40 வயதில் ஏற்படக்கூடிய பிரச்சினை என்பதை இது குறிக்கிறது. சாளீஸ்வரம் என்பது பேச்சு வழக்கில் சாளேஸ்வரம் என்றாகி இருக்க வேண்டும்.
வெள்ளெழுத்துக்கு இருபார்வை கண்ணாடி: ( Bifocal lens)
வெள்ளெழுத்துப் பிரச்சினைக்குக் கண்பரிசோதனை செய்து தகுந்த கண்ணாடியைப் போட்டுக் கொண்டு படிப்பது நல்லது. தூரப்பார்வைக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் நாற்பது வயதில் வெள்ளெழுத்து பிரச்சினை ஏற்படும்போது அதற்குத் தனியாக வெள்ளெழுத்து கண்ணாடி போட வேண்டி இருக்கும். முன்பெல்லாம் இரண்டுக்கும் தனித்தனியாகத்தான் கண்ணாடி போட வேண்டி இருந்தது. 250 ஆண்டுகளுக்கு முன் பெஞ்சமின் பிராங்கிளினுக்கு வெள்ளெழுத்து பிரச்சினை ஏற்பட்டபோது இரண்டு கண்ணாடிகளை தனித்தனியாகக் கையாள்வதில் அவருக்குப் பிரச்சினையாக இருந்தது. மாறுபட்ட கோணத்தில் சிந்தித்தார். தூரப்பார்வை, கிட்டப்பார்வை இரண்டு கண்ணாடி லென்சுகளையும் பாதி பாதியாக வெட்டி எடுத்து ஒரே பிரேமில் மாட்டிப் பயன்படுத்தினார். இப்படித்தான் முதல் இருபார்வை கண்ணாடி ( Bifocal ) உருவானது. இரு பார்வை கண்ணாடியில் மேல் கண்ணாடி வழியாகத் தூரப்பார்வைக்கும், கீழே உள்ள கண்ணாடி படிப்பதற்கும் பயன்படும்.
Progressive லென்ஸ்
சாதாரண இருபார்வை கண்ணாடியில் தூரப்பார்வை கிட்டப்பார்வையை மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால் Progressive லென்சில் தூரப்பார்வை அண்மைப்பார்வை, என்றில்லாமல் இடைப்பட்ட எந்த தொலைவிலும் தெளிவாகப் பார்க்க முடியும். கணினியில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு இவ்வகை லென்சு வரப்பிரசாதம். முக்கியமாக, இந்த லென்சில் எவ்வித கோடோ வளைவோ இருக்காது. சாதாரண கண்ணாடி போலவே இருக்கும்.
வெள்ளெழுத்துப் பிரச்சினையைத் தடுக்க முடியுமா?
இது ஒரு நோய் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மனிதராகப் பிறந்த அனைவருக்குமே ஏற்படக்கூடிய சிக்கல் இது. இதைத் தடுக்கலாம் என்றால் தடுக்க முடியாது. ‘கண்ணாடி போடாமல் ஏதாவது செய்ய முடியுமா?’ என்று பலரும் கேட்கிறார்கள். தலை முடி நரைப்புக்கு நரை தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் சாயம் பூசி கருப்பாக மாற்றுகிறோம். அதுபோலத்தான் வெள்ளெழுத்துக்குக் கண்ணாடி போட்டால் தெளிவாகப் படிக்கலாம். இல்லையென்றால் படிக்க முடியாது. இதுதான் அவர்களுக்கான பதில்.
கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com
