பெற்றோர்களே! இந்தத் தவறுகளைச் செய்யாதீர்! -4

பெற்றோர்களே! இந்தத் தவறுகளைச் செய்யாதீர்! -4
Updated on
1 min read

பெற்றோரே முன்மாதிரி

குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதையே முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும். நீங்கள் ஏதாவது குழந்தை முன்வைத்துச் செய்துவிட்டு மறந்திருப்பீர்கள் குழந்தைகள், அதைத் திரும்பச் செய்யும். அதனால் குழந்தைகள் முன்பு நீங்கள் நல்ல காரியங்கள் மட்டும் செய்யுங்கள். உதாரணமாக குனிவதற்குச் சோம்பறித்தனம் கருதி ஒரு பொருளைக் காலால் எடுக்கிறீர்கள் என்றால் குழந்தைகள் ‘ஓ! இனிக் காலால் பொருள்களை எடுக்கலாம்’ என முடிவெடுத்துக் கொள்ளும். அதற்குப் பொருட்கள் வேற்றுமை தெரியாது. எல்லாப் பொருட்களையும் காலால் எடுக்கும். அப்போது நீங்கள் குழந்தையைக் கடிந்துகொண்டு பிரயோசனம் இல்லை.

குழந்தைகளை யாருடனும் ஒப்பிடாதீர். அவர்களின் இயல்பில் அவர்கள் இருக்கட்டும். பக்கத்து வீட்டுக் குழந்தை 7-ம் மாதமே நடந்துவிட்டது எனக் குழந்தைகளைத் துரிதப்படுத்தாதீர். நாம் சூழலை அவர்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். ஆனால், அவர்களை நிர்ப்பந்திக் கூடாது. ஒவ்வொரு குழந்தைகளும் தனித்தன்மையுடன் இருக்கும். குழந்தைகள் தவறு செய்யும்போது அதை வீட்டில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டுச் சொல்வதையும் தவிர்க்க வேண்டும். அப்படி ஒப்பிடுவது அவர்களை மனரீதியாகப் பாதிக்கும்.

குழந்தைகள் தனிச் சொத்து அல்ல

குழந்தைகள் உங்கள் வழியாக வந்தவர்கள். உங்கள் தனிச் சொத்து அல்ல என்பதை பெற்றோர் உணர வேண்டும். தாங்கள் அடைய முடியாதவற்றை அடையும் கருவியாகக் குழந்தைகளைக் கையாளக் கூடாது. குழந்தைகளுக்குக் கல்விக்கு வெளியிலும் கலை, விளையாட்டு, தற்காப்பு போன்ற பல விஷயங்களைக் கற்றுக்கொடுப்பது இன்றைக்கு பொதுவான நடைமுறை. அது நல்ல விஷயம். ஆனால், அது அவர்களுக்கு மன உளைச்சல் தராத மாதிரிப் பார்த்துகொள்ள வேண்டும். அவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. ‘தான் ஐஏஎஸ் ஆன நினைத்தேன். நடக்கவில்லை. நீ கட்டாயம் ஆக வேண்டும்’ என ஐந்தாம் வகுப்பிலேயே சுமையை ஏற்றக் கூடாது. அவர்களுக்கு விருப்பம் இருந்தால் வழிகாட்ட வேண்டும். பயமுறுத்தக் கூடாது. அப்படி வற்புறுத்தும்போது அவர்கள் ஒன்றும் ஆகாமால் போக வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளை அவர்களது சூழலில் செளர்கயமாக இருக்க அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது நாம் உடன் இருக்க வேண்டும்.

குழந்தைகளைக் கையாள்வது குறித்து பெற்றோர் தங்களுக்குள் முரண்படக் கூடாது. இது பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான். அம்மாவோ அப்பாவோ இதைச் செய்வார்கள். இல்லையென்றால் இதைச் செய்வது தாத்தா, பாட்டியாக இருக்கும். உதாரணமாக குழந்தை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தைக் கேட்டு அழுகிறது என வைத்துக்கொள்வோம். அதைத் தர முடியாது என அதற்கான விளக்கத்தை அம்மா சொல்லிக்கொண்டிருக்கும்போது அப்பா அதை மீறி எடுத்துக் கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளுக்குத் தவறான வழிகாட்டுதலாகிவிடும். ஒருவரிடம் நடக்காத காரியத்தை இன்னொருவர் மூலம் சாதித்துக்கொள்ளலாம் எனக் கற்றுக்கொண்டுவிடும். மேலும் மரியாதை, பொறுப்புணர்வும் இல்லாமல் ஆகிவிடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in