

பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கி யத்துக்குப் பிறப்புறுப்பு சுகாதாரமே அடித்தளம். கருவுறுதல், தாம்பத்திய உறவு போன்றவற்றில் பிறப்புறுப்பு பிரச்சினைகள் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் அதிகம். பிறப்புறுப்பு பிரச்சினைகள் நீண்ட நாள் தொடர்ந்தால் மன அழுத்தம், உறவுப் பிரச்சினைகள், தன்னம்பிக்கை இழப்பு போன்ற உளவியல் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும்.
பிறப்புறுப்பு பிரச்சினைகள் சார்ந்த மருத்துவ அறிகுறிகளைத் தெரிந்துகொள்வதும், பிறப்புறுப்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதும் மிகவும் முக்கியம்.
அறிகுறிகள்
பெரும்பாலான பெண்கள் அவ்வப் போது பிறப்புறப்பு சார்ந்த சிறிய சிரமங்களை எதிர் கொள்கிறார்கள். இந்த நோய்த்தொற்றுகள் எந்த காலத்திலும் ஏற்படலாம். குறிப்பாக, அவை மாதவிடாய் நிறுத்தத்துக்கு (மெனோ பாஸ்) முந்தைய இனப்பெருக்க ஆண்டுகளில் ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம். இந்த அறி குறிகள் எப்போதும் தொற்றுநோயாக இருக்க வேண்டியதில்லை. அவை பிறப்புறுப்பு சார்ந்த நோய்களின் விளைவாகவும் ஏற்படக்கூடும்.
வழக்கமான மாதவிடாய் வெளியேற் றத்தில் ஏற்படும் மாற்றம், பிறப்புறுப்புப் பிரச்சினையின் முதல் அறிகுறியாக இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் அல்லது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வை அனுபவிப்பது போன்ற மாற்றங்களும் பிறப்புறுப்பு பிரச்சினைகளின் அறிகுறிகளாக இருக்கும் சாத்தியம் உண்டு.
பாக்டீரியம், பூஞ்சை, ஒட்டுண்ணிகள், ஈஸ்ட் போன்றவை பிறப்புறுப்புப் பாதையிலும் அதைச் சுற்றியும் வளர்வதால் பிறப்புறுப்பு சார்ந்த தொற்றுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக வலி, எரிச்சல் உணர்வு, அசாதாரண வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
நோய்த்தொற்றைத் தவிர்க்கும் வழிகள்
ஈரமான நீச்சல் உடைகளை விரைவாக மாற்றியாக வேண்டும்: ஈரமான நீச்சலுடை தோலுடன் ஒட்டியிருப்பதன் காரணமாகக் குளத்தில் உள்ள ரசாயன எச்சங்கள் பிறப்புறுப்பு, கருப்பை வாயில் பாக்டீரியா ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம்.
இறுக்கமற்ற கால்சட்டைகளை அணியுங்கள்: பருத்தி இடைப்பகுதியைக் கொண்ட பருத்தி உள்ளாடைகள், காலுறைகளைத் தேர்ந்தெடுங்கள். பருத்தியானது செயற்கை இழைகளைவிட அதிக காற்றுப்போக்கை தரக்கூடியது, வேகமாகக் காய்ந்துவிடும். எந்த வகையான பிறப்புறுப்பு வெளியேற்றத்தையும் பருத்தி ஆடைகள் உறிஞ்சிக்கொள்ளும். அரிப்பு, துர்நாற்றம் போன்ற பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சினைகள் பருத்தி ஆடை அணிந்தால் குறையும்.
மருத்துவர் அறிவுரையின் பேரில் மட்டுமே மருந்துக் கரைசலால் கழுவ வேண்டும். தண்ணீருடன் மருந்துக் கரைசலைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவுதல் ‘டௌசிங்’ எனப்படுகிறது. அது நன்மை பயக்கும் பாக்டீரியாவைக் கொன்று, பிறப்புறுப்பில் பாக்டீரிய சமநிலையை சீர்குலைக்கும், இதன் காரணமாகப் பிறப்புறுப்புத் தொற்றுடன் பாலியல் நோய்த்தொற்றுகளும் ஏற்படலாம்.
பிறப்புறுப்பு பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, கழிப்பறை சென்ற பிறகு, பிறப்புறுப்பைச் சுத்தமாகத் துடைக்க வேண்டும். மலம் கழிக்கும் பகுதியிலிருந்து பிறப்புறுப்புக்கு பாக்டீரியா பரவுவதை அது தடுக்கும். பிறப்புறுப்பு ஸ்ப்ரே, நறுமணமுள்ள டாய்லெட் ரோல்கள் / சோப்பு, வாசனைத் திரவியங்கள் கலந்த டாம்பான் அல்லது சானிடரி நாப்கின் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. அவை பிறப்புறுப்புப் பாதையில் காயத்தை ஏற்படுத்தலாம். லேசான, வாசனையற்ற சோப்புகளைக் கொண்டு தண்ணீரில் கழுவினால் போதும்.
சானிடரி நாப்கினை அடிக்கடி மாற்ற வேண்டும்: நீண்ட நேரத்திற்கு ஒரு சானிடரி நாப்கினை வைத்திருப்பது பிறப்புறுப்புப் பகுதியில் பாக்டீரியா சமநிலையைப் பாதிக்கும். சானிட்டரி நாப்கின் அல்லது டம்பானை ஒருவர் நீண்ட நேரத்துக்குப் பயன்படுத்தி னால், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்கள் பெருகி, சிறுநீர் பாதை / பிறப்புறுப்பு நோய்த் தொற்றுகளும், தோல் தடிப்புகளும் ஏற்படலாம்.
உடனடி மருத்துவ ஆலோசனை
கோடையில் ஏற்படும் பிறப்புறுப்பு பிரச்சினைகள் சாதாரண தொற்றுபோல் தோன்றினாலும், சிறிது காலம் கழித்து அவை பெரிய பிரச்சினைகளாக மாறக் கூடும். எனவே, கோடைக் காலத்தில் பிறப்புறுப்பு தொடர்பான சாதாரண, முக்கிய பிரச்சினைகளைப் பெண்கள் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால், அவை பெரிய தொற்றுநோய்களுக்கு வழி வகுக்கலாம், நோய்களை ஏற்படுத்தலாம். பிறப்புறுப்பில் ஏதேனும் எரிச்சலோ, பிறப்புறுப்பு வெளியேற்றங்களில் வேறுபாடோ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நீண்ட நாள் பாதிப்பிலிருந்து காக்கும்.
| கோடைக்காலத்தில் பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய தொற்றுகள் ஈஸ்ட் தொற்று: ஈஸ்ட் தொற்று என்பது பூஞ்சை சார்ந்த தொற்று. பொதுவாக ஈரமான, வெளிச்சம் படாத பகுதிகளில் பூஞ்சை தொற்று வளர்கிறது. கோடையில் பொதுவாக அதிக வியர்வையும் ஈரப்பதமும் இருக்கும். வெப்ப அலைகளால் இது மேலும் அதிகரிக்கலாம். வெப்பநிலை அதிகரிப்பும் ஈரப்பதமும் உடலில் ஈஸ்ட் வளர்வதை எளிதாக்குகின்றன. பாக்டீரிய வஜினோசிஸ்: இது ஒரு பொது வான பிறப்புறுப்புத் தொற்று. பிறப்புறுப்பில் வாழும் சில சாதாரண பாக்டீரியா வகைகள் அளவுக்கு அதிகமாக வளர்ந்து, பாக்டீரிய சம நிலையைக் குலைக்கும்போது இது ஏற்படலாம். மேலும் கோடையில் பிறப்புறுப்பின் மேற்பரப்பில் நீண்ட நேரம் ஈரப்பதம் தங்கியிருக்கும்போது இவை அதிகமாக வளரக்கூடும். |
- கட்டுரையாளர், மூத்த சிறுநீரக - மகப்பேறு மருத்துவ ஆலோசகர்