

தமிழகத்தில் மாம்பழ சீசன் களைக் கட்டத் துவங்கியுள்ள நிலையில், மாம்பழங்களை நாடிச் செல்லும் மக்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மக்களின் நாட்டத்தை உடனடி காசாக்கும் பேராசையில் சில வியாபாரிகள், மாம்பழத்தை கார்பைடு கல் மூலம் செயற்கையாகப் பழுக்க வைத்து விற்பது ஒவ்வோர் ஆண்டும் நடந்துவருகிறது. அந்த மாம்பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுவலி, அஜீரண கோளாறு உள்ளிட்ட உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்த வருகின்றனர். இருப்பினும், அந்த நடைமுறை நின்றபாடில்லை. இந்தாண்டும் அது தொடர்கிறது என்பதை நேற்று கோயம்பேடு சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் உணர்த்துகின்றன. ஆம், கோயம்பேடு சந்தையில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட 8 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று பறிமுதல் செய்து இருக்கின்றனர். அரசங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் சூழலில், பொதுமக்களாகிய நமக்கும் எது இயற்கையாகப் பழுத்த மாம்பழம், எது செயற்கையாகப் பழுத்த மாம்பழம் என்பதைக் கண்டறியும் புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.
ஏன் கார்பைடு கற்கள்?
கார்பைடு கற்கள் வெல்டிங் பட்டறைகளில்தான் இது பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. அது சுத்தமான நிலையில் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலையில் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப் பூண்டின் வாசனையும் அதில் சிறிதளவு இருக்கும். கார்பைடு கற்களில் ஆர்சனிக், பாஸ்பரஸ் ஹைட்ரைடு போன்ற நச்சுப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை அந்தக் கற்கள் வெளியேற்றும். இந்த வாயுவே பழங்களைப் பழுக்கவைக்கிறது.
காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் மாங்காய் இயற்கையாகப் பழுப்பதற்கு 48 முதல் 72 மணி நேரம் ஆகும். கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலின் வாயுவோ அந்த மாங்காயை 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைத்துவிடும். மக்களின் தேவையை உடனடி காசாக்கும் முயற்சியில் சுயநலமிக்க சில வியாபாரிகள் மாங்காயைப் பழுக்க வைப்பதற்கு கார்பைடு கல் போன்ற செயற்கை முறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்; மக்களின் நலனுக்குத் தெரிந்தே பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.
ஏற்படும் ஆபத்துகள்?
கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களே மிகவும் ஆபத்தான, உடல்நலனுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருள் என்றால் அது மிகையல்ல. கார்படு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களைச் சாப்பிட்டால், சருமத்தில் ஒவ்வாமை, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும். அதிகமாகச் சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியமும் உண்டு. அதைத் தொடர்ந்து சாப்பிட்டால் நரம்பு மண்டலம், கல்லீரல், குடல், இரைப்பை ஆகியவற்றில் கடுமையான பாதிப்பு ஏற்படும். முக்கியமாக, குழந்தைகளும், முதியவர்களும் இதுபோன்ற பழங்களை அதிகம் சாப்பிட்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப் போக்கு, ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். கர்ப்பகாலத்தில் பெண்கள் கண்டிப்பாகச் செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களைச் சாப்பிடக்கூடாது
எப்படிக் கண்டறிவது?
இயற்கையிலேயே பழுத்த பழங்களின் மேற்தோல் ஒரே சீரான நிறத்தில் இருக்கும். செயற்கையாக கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களின் நிறமோ ஒரே மாதிரியாக இல்லாமல், ஆங்காங்கே பச்சை நிறத்தில் திட்டு திட்டாகக் காணப்படும். தோல் பகுதி சுருக்கம் இல்லாமல் பளபளப்பாக இருக்கும். அது நல்ல கனமாகவும் இருக்கும். தோலை நீக்கி பார்த்தால் உள்ளே காயாக இருக்கும். முகர்ந்தால் வாசனை தெரியாது. இயற்கையான மணம் குறைவாக இருக்கும். சாப்பிட்டால் ருசியும் இருக்காது. காம்பு பகுதியில் லேசாகக் கீறினால் புளிப்பு மணம் வீசும்.
தெரிந்தோ தெரியாமலோ கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை வாங்க நேர்ந்தால், அதைத் தண்ணீரில் 5 நிமிடம் நன்கு கழுவி, தோலை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிச் சாப்பிடுவது ஆபத்தைச் சற்று குறைக்கும்.