

அதீதக் கண்டிப்பு
அதீத அன்பு போல் ஆபத்தானது அதீதக் கண்டிப்பு. குழந்தைகளை நல் வழிப்படுத்துகிறேன் என அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கும்போது குழந்தைகளின் மன நலம் மிகவும் பாதிக்கப்படும். தன் உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கி, ஊறுபடத்தக்க ஆளுமையாக மாற வாய்ப்புள்ளது. மேலும் அவர்களின் தன்னம்பிக்கைத் திறனும் பாதிக்கப்படும். குழந்தைகளிடம் கடும் வார்த்தைகளால் கண்டிப்புடன் பேசாமல், அடிக்காமல் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடியும். அவர்கள் அடம்பிடித்தால் அது தவறு என்பதை உறுதியுடன் தெரிவியுங்கள். அவர்கள் அதைத் திரும்பப் பெற முயல்வார்கள். ஆனால், நீங்கள் உறுதியாக இருந்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். குழந்தைகளுடன் கண்டிப்பாக நடந்துகொண்டால் அது அவர்களைப் பொய் சொல்பவர்களாக ஏமாற்றுபவர்களாகக்கூட மாற்றக்கூடும். அதனால் அதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் இயல்பாக நடக்கட்டும்
குழந்தைகளுடன் விளையாடும்போது அவர்கள் விருப்பத்தில் நீங்கள் இணைய வேண்டும். உங்கள் விருப்பத்துக்கு அவர்களைத் திருப்பாதீர்கள். மேலும் சில படைப்பூக்கமான விஷயங்களை அவர்கள் விளையாட்டின் மூலம் கண்டுபிடிப்பார்கள். குழந்தைகள் புதுப் புது விளையாட்டுகளைக் கண்டுபிடித்து விளையாடும். அதை உற்சாகப்படுத்த வேண்டும். இதைத் தடுக்கும்பட்சத்தில் அவர்களது கற்பனைத் திறன் பாதிக்கப்படும்.
குழந்தைகள் இருக்கும்போது மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாகப் புறம் பேசுவதை எப்போதும் தவிர்ப்பது நல்ல விஷயம்தான். குழந்தைகள் தானே என்று நாம் அவர்களை நடுவில் வைத்து பிறரைப் பற்றிப் பேசும்போது அவர்கள் அதை நுட்பமாகக் கவனிப்பார்கள். அது அவர்களது ஆளுமையில் பாதிப்பை விளைக்கும். நமக்குப் பிடிக்காத நபர் ஏதோ செய்ததைச் சொல்லி நீங்கள் கேலி செய்து சிரித்தால், அப்படிச் செய்வது கேலிக்குரிய விஷயம் எனக் குழந்தைகள் புரிந்துகொள்ளும். இன்னும் பேசத் தொடங்கவில்லைதானே எனச் சிறு குழந்தைகள் முன்பு வைத்தும் புறம் பேசாதீர்கள். அவர்கள் பேசத் தொடங்கவில்லை என்றாலும் அவர்களுக்குள் கிரகிக்கும் தன்மை தொடங்கி இருக்கும்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription