

குழந்தை வளர்ப்புக்கு யோசனைகள்
குழந்தைகளுக்குப் பேச்சுத் தெளிவு பெறும் வரை அழுகைதான் அவர்களது மொழி. தனக்குப் பசிக்கிறது என்றால் அழுகை மூலம்தான் தெரியப்படுத்தும். தனக்கு ஏதேனும் உபாதை என்றாலும் அழுது வெளிப்படுத்தும். உணவு கொடுத்த பிறகும் அழுதால் வேறு ஏதோ பிரச்சினை எனப் புரிந்துகொள்வோம்.. ஆனால், மாதங்கள் செல்லச் செல்ல குழந்தைகள் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக்கொள்ள அழுகையைப் பயன்படுத்த முயலும். எப்போதும் தூக்கிவைத்திருக்கக் குழந்தைகள் விருப்பப்படும்.
அதற்கு இணங்கிலால் குழந்தைகளின் முறையான வளர்ச்சி காலதாமதப்படும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். தவழ்வதற்கும் நடப்பதற்கும் முயல்வது கால தாமதமாகும். மேலும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடும்போது அவர்களின் ஜீரணசக்தி அதிகரிக்கும். உடல் உபாதை போன்று ஏதெனும் ஏற்பட்டால் தவிர குழந்தையை எடுத்து வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. அழுது அடம்பிடித்தால் குழந்தையின் மனநிலையை அதிலிருந்து மாற்ற முயல வேண்டும். குழந்தைகள் சட்டெனத் தங்கள் மனநிலையை மாற்றும் இயல்புடையவர்கள். அதனால் அவர்களை ஈர்க்கும் வேறு விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பலாம்.
ஆபத்தான அதீத அன்பு
அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுக்கக் கூடாது. உதாரணமாக இப்போது செல்போன் பயன்படுத்தாத குழந்தைகளே இருக்கமாட்டர்கள். குழந்தைகளை ஆற்றுப்படுத்துவதற்காக நாம்தான் அவர்களுக்கு அதைப் பழக்கப்படுத்துகிறோம். பிறகு அவர்கள் அதற்கு அடிமையாகிறார்கள். அவர்களுக்கு என்று தனி செல்போன் வாங்கிக் கொடுக்கும் அளவு இன்று இந்தப் பழக்கமும் இருக்கிறது. அதீத அன்பு கொடுக்கிறோம் என நாம் அவர்களுக்குப் பாதகம் செய்கிறோம் என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். செல்போன் பார்ப்பதால் குழந்தைகள் பேசத் தொடங்குவது தாமதம் ஆகும் என மருத்துவ ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
அவர்களது பார்க்கும் திறனையும் பாதிக்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும் ஆடிப் பாடி விளையாட வேண்டிய வயதில் அவர்கள் ஒரே இடத்தில் இருந்து செல்போன் பார்ப்பது அவர்களின் உடல் நலனையும் மன நலனையும் பாதிக்கக் கூடியது. அதனால் அதைத் தவிருங்கள். செல்போனுக்குப் பதிலாகப் படங்கள் உள்ள புத்தகங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கலாம். அதில் உள்ள கதைகளை நீங்களே அவர்களுக்கு விவரித்துச் சொல்லும்போது அவர்களது கற்பனைத் திறன் பெருகும். மேலும் புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் உண்டாகும்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription