குழந்தைகளின் உணவுப் பழக்கம் - உலகச் சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையும் வழிகாட்டலும்

குழந்தைகளின் உணவுப் பழக்கம் - உலகச் சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையும் வழிகாட்டலும்
Updated on
2 min read

குழந்தைகளிடையே அதிகரிக்கும் உடல் பருமனை உலகளாவிய பிரச்சினையாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் உடல் பருமனாக இருப்பதாகவும், அந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த நிலையில், குழந்தைகளின் உணவு முறையையும் வாழ்க்கை முறையையும் மதிப்பிட்டுத் தகுந்த முறையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி முறைப்படுத்தும் விதமாக உலகச் சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டலை வெளியிட்டு இருக்கிறது. அந்த வழிகாட்டலின் முக்கிய அம்சங்கள்:

  • உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கக் குழந்தைகள், கட்டாயம் எளிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்; அதற்கு அவர்களைப் பெற்றோர்கள் பழக்கப்படுத்த வேண்டும்.
  • இந்தப் பிரச்சினையால் இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகள் பின்னால் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப் பெற்றோர்கள் தொடக்க நிலையிலேயே உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.
  • நகரமயமாக்கல், பெற்றோரின் அதிக வருமானம், துரித உணவுகளின் பெருக்கம், அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு, கொழுப்பு மிகுந்த உணவு, குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பது, குறைவான உடல் உழைப்பு போன்றவை உடல் பருமனை அதிகரிக்கும் முக்கியக் காரணிகள். இந்த விஷயங்களில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

இன்று வீடுகளில் நீரிழிவு நோய் இல்லாத பெற்றோர்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. தங்களுடைய நீரிழிவுப் பிரச்சினைகளுக்கே முறையான சிகிச்சை செய்து கட்டுக்குள் வைப்பதற்கு, பெற்றோர்கள் நிறைய மெனக்கிட வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் பிள்ளைகளுக்கும் நீரிழிவுப் பாதிப்பு ஏற்படுமானால் அவர்களையும் சேர்த்துக் கவனிப்பது சுமக்க முடியாத சுமையாக மாறிவிடும். முக்கியமாக, பெண் குழந்தைகள் விரைவாகப் பருவமடைவதற்கு அதிக உடல் பருமனும் ஒரு முக்கியக் காரணி. அதிக உடல் எடை, மூட்டுவலியை ஏற்படுத்தும். அது உடற்பயிற்சி செய்வதைக் கடினமானதாக மாற்றும்.

எனவே, உலக சுகாதார நிறுவனம் அண்மையில் விடுத்துள்ள வழிகாட்டலை மனதில் வைத்துக் கொண்டு பெற்றோர்கள் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும். அரசும், குழந்தைகளை எளிதில் கவரும் துரித உணவு விளம்பரங்களைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை முறைப்படுத்துவதே, அவர்களின் நலமான வாழ்க்கைக்கும், நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும் அடித்தளம்.

கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in