

அறிவியல் மிக வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த 21-ம் நூற்றாண்டில் மக்கள் பல சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள். அவற்றில் முக்கியமானது குழந்தை வளர்ப்பு. அடுத்த தலைமுறையை உருவாக்குவது உண்மையில் எளிய காரியமில்லைதான்.. குழந்தை வளர்ப்பு அவ்வளவு சிக்கலான காரியமா, இல்லை பெற்றோர்கள் சிக்கலாக்கிக் கொள்கிறார்களா என்ற கேள்விகள் எழலாம். குழந்தைகளின் குறும்புகளைப் பாடிக் களித்த சங்கப் பண்பாடு உடைய நம் மரபில் இன்று குழந்தைகளுடன் இருப்பது என்பதே பெற்றோர் பலருக்கும் ஒரு வேலையாகிவிட்டது. அவர்களுடன் மல்லுக்கட்டவே நேரம் சரியாக இருக்கிறது என அலுத்துக்கொள்ளும் பெற்றோர் அதிகம்.
எதற்கெடுத்தாலும் முரண்டு, கோபம் என அடம் பிடிக்கும் குழந்தைகள் இருந்தால் எங்கள் பக்கம் புரியும் எனப் பெற்றோர் தங்கள் தரப்பைச் சொல்வார்கள். ‘எதாவது பொருள் வேண்டம் என்றால் அதைக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் கையில் கிடப்பதை வீசி எறிவது, பொருட்களை உடைப்பது போன்ற செயல்கள், குழந்தைகளால் கணவன் - மனைவிக்குள் சண்டை’ எனப் பெரும் போராட்டமாக ஆகிவிட்டது குழந்தை வளர்ப்பு எனப் பெரும் பட்டியலேயே வாசிப்பார்கள் பெற்றோர்கள். இன்றைக்குப் பெரும்பாலான வீடுகளில் ஒன்று அல்லது இரு குழந்தைகள்தாம் இருக்கிறார்கள் அதற்கே இவ்வளவு போராட்டம். இது இவ்வளவு சிக்கலான விஷயமா என்ன? ஆனால், உண்மையில் குழந்தை வளர்ப்பு என்பது அனுபவிக்க வேண்டியது இனிமை; ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறுப்பு. இந்த அழகான விஷயத்தை நாம்தான் சிக்கலாக்கிக் கொள்கிறோம். குழந்தைகள் இந்த மண்ணுக்கு வரும்போது தூய்மையாக வருகிறார்கள். நாம்தான் அவர்களுக்கு ஒவ்வொன்றாகப் பழக்கப்படுத்திக் கொடுக்கிறோம்.பிறகு குழந்தை அடம் பிடிக்கிறது எனக் குறைபட்டுக் கொள்கிறோம்.