

உலகளவில் தினமும் 16,000 குழந்தைகள் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த மரணங்களில் 83 சதவீதம் கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது. சித்த மருத்துவத்தில் குழந்தைகளைத் தொற்றிலிருந்து காக்கவும் அவர்களின் உடல்நலனை மேம்படுத்தவும் பல எளிய மருத்துவ வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானதும் முதன்மையானதுமே உரை மாத்திரை. இது கிராமங்களில் உரசு மருந்து என்றும் அறியப்படுகிறது.
பயன்படுத்தும் முறை
இந்த மாத்திரையில் அக்கரகாரம், அதிமதுரம், சிற்றரத்தை, கடுக்காய், சாதிக்காய், மாசிக்காய், வசம்பு, சுக்கு, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், திப்பிலி போன்ற எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்கள் இருக்கின்றன. இவற்றைத் தூய்மை செய்து பொடித்து நீர் விட்டு அரைத்து விரல் அளவு மாத்திரைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத்திரையைத் தாய்ப்பாலில் (அ) வெந்நீரில் உரைத்து குழந்தையின் நாவில் தடவ நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். குழந்தை பிறந்த 10 நாள் முதல் 5 வயது வரை கொடுக்கலாம்.
பயன்கள்
உரை மாத்திரை சிறு குழந்தைகளுக்கு மிகச் சிறந்த நோய்த்தடுப்பு மருந்தாக இருக்கிறது. இந்த மாத்திரையைப் பயன்படுத்துவதன் மூலம் வயிற்று நோய்கள், நுரையீரல் நோய் போன்றவை வராமல் தடுக்க முடியும். பேதி, கடுப்புக்கழிச்சல், சிறுநீரக நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும் அது உதவும். உரை மாத்திரையில் சேர்க்கப்படும் தனித்தனி மூலிகை பொருட்கள் நோய் எதிரப்பாற்றல் சீராக்கும், வீக்கமகற்றும், ஒவ்வாமை போக்கும், உணவு செரிமானத்தை மேம்படுத்தும் என ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
எங்கே கிடைக்கும்?
சென்னை, பாளையங்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனை, தாம்பரம் சேனட்டோரியம் தேசிய சித்த மருத்துவமனை, ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் உரை மாத்திரை இலவசமாகக் கிடைக்கின்றன.
செரிமானத்தையும் நோய் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்தும் உரை மாத்திரையைக் குழந்தைகளுக்குக் கொடுத்து நம் சிறு பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்ப்போம். நோய்த் தொற்றிலிருந்து காப்போம்.
கட்டுரையாளர், குழந்தை நலப் பிரிவு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: dharshini874@gmail.com