ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கடுகு

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கடுகு
Updated on
2 min read

அழகாக விரிக்கப்பட்ட மஞ்சள் கம்பளம் போன்ற தோற்றத்தைத் தரும் மஞ்சள் கடுகுத் தாவரம், நமது இமயமலை அடிவாரத்தில் பிறந்தது. மஞ்சள் வண்ணத்தை வாரியிறைத்ததுபோல, கடுகு வயல் பூத்திருக்கும் அற்புதக் காட்சிப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. வசந்தகாலத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் அந்த வண்ண வரவேற்பு, வட இந்தியப் பண்பாட்டின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப, அளவில் சிறிதாக இருக்கும் கடுகில் ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் கடலளவு பொதிந்துள்ளன.

கடுகின் வரலாறு

கடுகைப் பற்றி ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வடமொழிப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடுகு பராசிகா (Brassica) காய்கறிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் காய்கறிகள் அனைத்தும் தீவிரமான புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை. தாவரவியல் ரீதியாகப் பார்த்தால் புரோகோலியும் முட்டைக்கோஸும் கடுகுக்குச் சொந்தக்காரர்களே. கடுகில் 40 வகைகளுக்கு மேல் இருக்கின்றபோதும், அவற்றில் மூன்று வகைகள் மட்டுமே பரவலாகப் பயிரிடப்படுகின்றன. கறுப்புக் கடுகு மத்தியக் கிழக்குப் பகுதியையும், வெள்ளைக் கடுகு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியையும், மஞ்சள் கடுகு இமயமலைப் பகுதியையும் தாயகமாகக் கொண்டவை.

கடுகின் மருத்துவ பயன்கள்

  • திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.
  • கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது.
  • சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் அதில் நிறைந்துள்ளன.
  • ஐசோதியோசயனேட் கடுகில் அதிகம் உள்ளது. அது புற்றுநோய் செல்களைத் தடுத்து, குடல்-இரைப்பை தடத்தையும், குடல்வாலையும் பாதுகாத்துப் புற்றுநோய்க்கு முட்டுக்கட்டை போடுகிறது.
  • ஆயுர்வேதத்தில் வெள்ளைப்பூண்டு, மஞ்சளுடன் கடுகு எண்ணெய் சேர்த்துக் காய்ச்சப்பட்டு, எலும்பு மூட்டுகள், தசை வலிகளைக் குறைக்கும் மசாஜ் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.
  • கடுகு விதைகள் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தரும், ரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் செய்யும்.
  • செலெனியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மாங்கனீஸ், பாஸ்பரஸ், தாமிரம், வைட்டமின்கள் சி, கே, பி வகை வைட்டமின்கள் கடுகு மூலம் கிடைக்கின்றன.
  • கடுகில் உள்ள பீட்டா கரோட்டினை நம்முடைய உடல் வைட்டமின் 'ஏ'வாக மாற்றிக் கொள்கிறது.
  • கடுகுக் கீரையில் (சர்சோன் டா சாக்) பெரும்பாலான பைட்டோ வேதிப்பொருட்கள் இருக்கின்றன. சளி, மூட்டுவலி, மனஅழுத்தம் போன்றவற்றுக்கெல்லாம் இந்தக் கீரை நல்ல மருந்து.

கடுகின் சமையல் பயன்கள்

சமையலில் கடுகு பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. உப்புமா, ராய்த்தா, சட்னி போன்றவற்றைக் கடுகு போட்டுத் தாளிக்காமல் சாப்பிட முடியுமா? கடுகு ஒரு நறுமண-மசாலா பொருளாகவும், அதன் கீரை உலகப் புகழ்பெற்ற 'சர்சோன் டா சாக்' கீரை கடையலைத் தயாரிக்கவும், கடுகு எண்ணெய் சமையலிலும் மருத்துவச் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.

பூஞ்சை எதிர்ப்புத்தன்மையைக் கொண்டுள்ளதால், ஊறுகாய் போடும்போது நறுமணத்தைத் தருவதுடன், உடலுக்குப் பாதுகாப்பும் அளிக்கும் சிறந்த எண்ணெய்யாகக் கடுகு எண்ணெய் இருக்கிறது. கடுகு எண்ணெய்யில் பக்கோடா, மீனைப் பொரித்தெடுத்தால் தனிச் சுவையுடன் இருக்கும். கடுகை ஊற வைத்து முளைக்கட்டி சாலட்களில் சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.

விலையோ குறைவு, தரமோ அதிகம்.

சமையல் எண்ணெய்களில், கடுகு எண்ணெய் மிகவும் ஆரோக்கியமானது. வட இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் கடுகு எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இந்த எண்ணெய் செக்கில் ஆட்டியே எடுக்கப்படுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தரமான இந்த எண்ணெய் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. முக்கியமாக, தேங்காய் எண்ணெய்யைப் போலவே, கடுகு எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினாலும் அதன் தன்மை மாறுவதில்லை. ஆம், கடுகு எண்ணெய்யைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in