

உலகச் சுகாதார நாள்: நீரிழிவை வெல்வோம்
மருத்துவ உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நீரிழிவு நோய் குழந்தைகளுக்குக்கூட வருமா?
உலக அளவில் 1.50 கோடி குழந்தைகள் டைப் -1 வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆண்டுக்கு நான்கு லட்சம் குழந்தைகளை இந்த நோய் தாக்குவது கண்டறியப்படுகிறது. இவற்றில் பாதி ஆசியக் கண்டத்தில்.
1 - 2 வயதுக்குள், 5 வயதில் மற்றும் பருவ வயதில் என்று மூன்று பிரிவுகளில் இந்த நோய் அதிகமாகக் கண்டறியப்படுகிறது. டைப்-1 நீரிழிவு நோய் மரபணு நோய் என்று குறிப்பிடப்பட்டாலும், அது தாக்குவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. பிறவி ரூபெல்லா வைரஸ் தொற்று (Congenital Rubella Syndrome), தாளம்மை வைரஸ், குடலைத் தாக்கும் சில வைரஸ் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கின்றன. மரபுரீதியாக முதல் வகை நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு, இந்தக் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டால் நோய் வெளிப்படுகிறது.
தாய்ப்பால் தருவது இந்த நோயைக் குறைக்கிறது. பிறந்த ஆறு மாதங்களுக்குள் மாட்டுப் பால் தருவது மற்றும் அதிக மன அழுத்தம் போன்றவை இந்த நோய்க்கான காரணங்கள் என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஏன் இன்சுலின் குறைகிறது?
டயாபடிஸ்மெலிட்டஸ் டைப்-1 எனப்படும் முதல் வகை நீரிழிவு நோயில் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பகுதியில் (Ispets of Langerhans) உள்ள B செல்கள் மெதுவாக அழிக்கப்படுகின்றன. கருவில் அல்லது பிறந்த உடன் இந்த அழிவு ஆரம்பித்து, சுமார் 80 சதவீதம் செல்கள் அழிந்தவுடன் நோய் வெளிப்படுகிறது. மரபணுக்கள், வைரஸ், சில மருந்துகள், அதிக மன அழுத்தம் போன்றவை இதற்குக் காரணம். எனவே, இந்த வகை நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசி அல்லது மாத்திரைகள் கட்டாயம் தரப்பட வேண்டும்.
டயாபடிஸ் மெலிட்டஸ் டைப்-2 எனப்படும் இரண்டாம் வகை நீரிழிவு நோய், வளர்இளம் பருவத்தினருக்கும் வயது வந்தவர்களுக்கும் ஏற்படும் நோய். இதில் இன்சுலின் சுரப்பு இருக்கும். குறைவாகவோ அல்லது சரிவர வேலை செய்யாமலோ இருக்கும். இதில் செல்கள் குளுகோஸை உட்கிரகிக்க, இன்சுலின் உதவுவதில்லை. வாழ்க்கை முறை தவிரக் கணைய அழற்சி மற்றும் சில கணைய நோய்களால்கூட டைப்-2 வகை நீரிழிவு நோய் வரலாம்.
இந்த வகை நோயாளிகளுக்கு இன்சுலின் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் மாத்திரைகள் பயன்படும். அப்படியும் சர்க்கரை அளவு குறையவில்லையென்றால், இன்சுலின் தர வேண்டும்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்:
முதல் வகை
அறிகுறிகள் அதிகம் தென்படாது. வேறு நோய் பாதிப்பு இருக்கும்போது, இந்நோய் கண்டுபிடிக்கப்படலாம்.
இரண்டாம் வகை
அதிக உடல் எடை, உடல் சோர்வு, தோலில் - கழுத்து பின் பகுதியில் தடித்த கறுப்புத் திட்டுகள் (Acanthosis Nigricans), அதிகத் தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் (இரவிலும்கூட), அதிகப் பசி.
நோயை எப்படிக் கண்டுபிடிப்பது?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு
l 8 மணி நேரம் வெறும் வயிற்றுடன் இருந்த பிறகு 126 மி.கி., அதற்கு அதிகமாக இருந்தால்.
l சாப்பிட்ட பின் ஒன்றரை மணி நேரத்தில் 250 மி.கி., அதற்கு அதிகமாக இருந்தால்.
தற்செயலான சர்க்கரை சோதனை
l 200 மி.கி.க்கு மேல் இருந்தால்.
மூன்று மாத ரத்தச் சர்க்கரை சராசரி அளவு
l ஹெச்பிஏ1சி 6.5-க்கு மேல்.
சிகிச்சை முறை
முதல் வகை நீரிழிவு நோய்க்கு
l இன்சுலின் - ஹார்மோன் ஊசி, தொடர் பம்பு, மாத்திரை, மூக்கில் நுகர்தல்.
இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு
l ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் மாத்திரைகள்.
l இன்சுலின் ஊசி.
மற்ற சிகிச்சை முறைகள்:
1. உணவுக் கட்டுப்பாடு:
வயதுக்கு அல்லது உடல் எடைக்குத் தேவையான கலோரி உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வயது குழந்தைக்குத் தினமும் 1000 கலோரி. அதன்பிறகு, ஒவ்வொரு வயது அதிகரிக்கும் போதும் தினமும் 100 கலோரி கூடுதலாகக் கொடுக்க வேண்டும்.
3 வயது குழந்தைக்கு 1,200 கலோரி. 10 வயது குழந்தைக்கு 1,900 கலோரி. இந்தக் கலோரி அளவை தினமும் ஐந்து வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும் (காலை, 11 மணி, மதியம், மாலை, இரவு)நேரடி சர்க்கரை மற்றும் கொழுப்பு உணவைக் குறைத்துக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
பண்டிகை, விசேஷ நாட்களில் மட்டும் குழந்தைக்கு உணவுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம்.
2. உடல் எடைக் கட்டுப்பாடு
முதல் வகை நீரிழிவு நோயில் குழந்தை ஒல்லியாக இருக்கும். எனவே, பிரச்சினை இல்லை.
இரண்டாம் வகை நீரிழிவு நோயில் உடல் பருமன் அதிகம் இருக்கும்.
உடல் எடை அடர்த்தியை (Body Mass Index) 23-க்குள் பராமரிக்க வேண்டும்.
இதைக் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம் (உடலின் எடை / உயரம் (மீட்டரில்) இரண்டு மடங்கு)
உடற்பயிற்சி
தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, ஓடி ஆடி விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் ஆகியவை சிறந்த பயன் தரும்.
வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்தபடி, வறுத்த, பொரித்த, நொறுக்கு தீனிகளைக் கொறித்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். தினமும் 1 -2 மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் எல்லாம். அதுவும் 30 நிமிடத் தீவிர உடற்பயிற்சியும் சேர்த்துத்தான் என்று வரைமுறைப்படுத்த வேண்டும்.
மனதுக்கு ஆறுதல்
சிறு குழந்தைகளுக்கு நோய், தினமும் ஊசி அல்லது மாத்திரை, உணவுக் கட்டுப்பாடு, அதிக உடல் எடை, அடிக்கடி மருத்துவப் பரிசோதனை போன்றவை உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கும். அவ்வப்போது கவுன்சலிங் தருவது அவசியம். பெற்றோர், உடன்பிறந்தோர், ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லோரும் நோயைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும்.
நீரிழிவு நோயைத் தடுக்க முடியுமா?
நோய் வரும் வாய்ப்புகளைக் குறைத்துக்கொள்ளக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
l பெண் குழந்தைகளுக்குப் புட்டாளம்மை தடுப்பு ஊசி போடுவது.
l ஆண், பெண் இரு பாலருக்கும் தாளம்மை தடுப்பு ஊசி போடுவது.
l உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது.
l ஆறு மாதம்வரை நிச்சயமாகத் தாய்ப்பால் கொடுத்து, இரண்டு வயதுவரை தொடர்வது.
l மாவுப் பால், மாட்டுப் பால் ஆகியவற்றைக் கூடியவரை தவிர்ப்பது.
l காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சிறு வயது முதலே கொடுத்துப் பழக்குவது.
l காட்சி ஊடகங்களைத் தவிர்ப்பது.
l தினமும் குழந்தை ஓடிஆடி விளையாடப் பழக்குவது.
l நொறுக்குத் தீனிகளின் அளவை வரையறுப்பது.
l நோய் வரும் குழந்தைகளுக்கு அடிக்கடி மருத்துவ ஆலோசனை.
முதல் வகை நீரிழிவு நோயைத் தடுப்பது கடினம். இரண்டாம் வகை நீரிழிவு நோயும் குழந்தைகளிடையே அதிகரித்துவருவது கவலைக்குரிய விஷயமே. அதேநேரம் மேற்கண்ட முறைகளைப் பின்பற்றினால் இரண்டாம் வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும். முயன்றால் முடியாததல்ல; முயற்சிப்போம்.
கட்டுரையாளர், குழந்தைகள் மருத்துவ நிபுணர் மற்றும் பேராசிரியர்
தொடர்புக்கு: gangs.mythila@gmail.com