

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உயிர்க்கொல்லி வேதிப்பொருட்களாலும், உரங்களாலும் நமக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் காலகட்டம் இது. இருப்பினும், வணிக நிர்பந்தம் காரணமாக விவசாயம் அதிலிருந்து விடுபடாமல் இன்றும் அவற்றைச் சார்ந்தே இருக்கிறது. லாப நோக்கில் நச்சுமயமாகி இருக்கும் விவசாயத்தை அதிலிருந்து மீட்டெடுத்து, மீண்டும் இயற்கையை நோக்கி மடைமாற்றும் முன்னெடுப்புகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அத்தகைய முன்னெடுப்புகளில் ஒன்றுதான் சென்னை தக்கர் பாபா வித்யாலயத்தில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வேர்கள், கிழங்குகள் திருவிழா.
வேர்கள், கிழங்குகள், பாரம்பரிய நெல் வகைகள், மரபு விதைகள், பாதுகாப்பான உணவு ஆகியவற்றின் மறுமலர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கம். நிகழ்வு நடைபெற்ற விதமும் அதன் அமைப்பும் கிராமத்துச் சந்தையை நினைவூட்டின. உள்ளே நுழைந்ததும் தித்திப்பான கரும்பு, பனை ஓலைப்பெட்டிகளில் பொதியப்பட்டிருந்த கருப்பட்டி, நுங்கு, இளநீர் ஆகியவை வரவேற்றன. அருகிலேயே நகர்ப்புற மக்களின் தோட்ட ஆசைகளுக்குத் தீனி போடும் வகையில் மாடித் தோட்டத்துக்கான செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றைத் தாண்டிச் சென்றால் இயற்கை விவசாயப் பொருட்கள், துணிகள் ஆகியவற்றின் விற்பனையும் கண்காட்சியும் நடைபெறும் கூடங்கள் இருந்தன. பருப்பு வகைகள், அரிசி உள்ளிட்ட இயற்கை விவசாயப் பொருட்களை வாங்க மக்கள் திரண்டிருந்தார்கள்.
உரை நிகழ்வு நடைபெறும் முக்கிய அரங்குக்குச் செல்லும் வழியில் பல வகையான கிழங்குகள் அழகுறக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அரங்குக்குள் இடப்புறத்தில் விதைகள், வேர்கள், பல்வேறு அரிசி வகைகள், தானியங்கள், கிழங்கு வகைகள், இயற்கை மூலிகை மருந்துகள் போன்றவை விற்பனைக்கு இருந்தன. அங்கே இருக்கும் பொருட்களைக் குறித்த மக்களின் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் கடைகளில் இந்தவர்கள் பொறுமையாகப் பதிலளித்த விதம் பயனுள்ளதாக இருந்தது. எந்தக் கல்விநிலையத்திலும் வழங்கப்படாத அனுபவ அறிவு அது.
போதாமைகளைக் களையும் முயற்சி
இத்தகைய முன்னெடுப்புகள் இன்றைய காலகட்டத்துக்கு அவசியமானவை என்றாலும், வணிகமயமாக்கத்தின் உச்சத்திலிருக்கும் விவசாயத்தை, அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு இவை மட்டுமே போதுமா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இயற்கை விவசாயப் பொருட்களின் நன்மை, மேன்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியது; அவற்றைப் பயன்படுத்தும் ஆர்வத்தை மக்களிடம் தூண்டியது. இருப்பினும் குறைவான உற்பத்தி, அதிக விலை, விற்பனைக் கட்டமைப்பு இல்லாமை போன்ற போதாமைகளால், இந்தப் பொருட்கள் அனைவருக்கும் எட்டாதவையாக இருக்கின்றன. பெரும் வணிக அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கும் நிலைக்குச் சாதாரண மக்களை இந்தச் சூழல் தள்ளுகிறது.
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சீதாலட்சுமியிடம் கேட்டபோது, “இந்தக் குறைபாடுகள் இருப்பது உண்மைதான். ஆனால், கொள்கைரீதியாகச் சந்தைப்படுத்துதலை நாங்கள் ஆதரிப்பதில்லை. இயற்கை விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். வாரந்தோறும் சென்னை வேளச்சேரியில் நாங்கள் நடத்தும் சந்தைகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு ஊக்கமளிக்கிறது. பொருளாதாரரீதியில் முன்னேறிய சமூகம் இயற்கை விவசாயப் பொருட்களை அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கினால், அது விற்பனையை அதிகரிக்கும். தொடர்ச்சியாக உற்பத்தியைப் பெருக்கும்; விலையைக் குறைக்கும்” என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
குழந்தைகளிடமிருந்து தொடங்குவோம்
இயற்கை விவசாயப் பொருட்களின் பயன்பாட்டைப் பொறுத்தவரை முதலில் மனரீதியாக நாம் அதற்குத் தயாராக வேண்டும்; அதன் இயல்புக்குப் பழக வேண்டும். எடுத்த எடுப்பில், அதை நோக்கி முழுவதுமாகத் திரும்பாமல் அரிசி, பருப்பு, புளி, கருப்பட்டி, செக்கு எண்ணெய் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவது வீட்டில் எழும் எதிர்ப்புகளைச் சமாளிக்க உதவும்.
முக்கியமாக, குழந்தைகளுக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சாக்லெட், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து, வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய கடலை உருண்டை, கம்மர்கட் உள்ளிட்ட பண்டங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்க வேண்டும். குழந்தைகளிடமிருந்து தொடங்கும் மாற்றமே, எதிர்காலத்தில் நிலையான மாற்றத்துக்கு வழிவகுக்கும்.