

ஒருவருடைய ஆரோக்கியத்தை வாழ்நாள் முழுவதும் நீட்டிப்பதற்கு நல்ல உணவு அவசியம். அதுவும் பருவத்துக்கேற்றவாறு உணவு முறையை அமைத்துக்கொண்டால் தொற்றா நோய்கள் மட்டுமல்லாமல், அவ்வப்போது அச்சுறுத்தும் பெருந்தொற்றுகளிலி ருந்தும் நம்மைக் காக்கும் மிகப்பெரிய அரண் நம் உடலுக்குக் கிடைக்கும்.
நேரத்துக்கேற்ற உணவையே சரியாகச் சாப்பிட மறந்துவிட்ட நாம், பருவத்துக்கேற்ற உணவை முறையாகப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பிறந்த குழந்தை முதல் மூப்பு காலம் வரை உண்ண வேண்டிய திட்டவட்டமான உணவுத் திட்ட முறையை அறிந்துகொள்வது நம் வாழ்க்கைத் தரத்தை வலுப்படுத்தும், மேம்படுத்தும்.
குழந்தைகளுக்கான உணவு
குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங் களுக்குத் தாய்ப்பால் அவசியமான உணவு. பிற்காலத்தில் குழந்தைக்கு உண்டாகும் பல நோய்களைத் தடுக்கும் நோயெதிர்ப்பாற்றலை உண்டாக்கத் தாய்ப்பால் அத்தியாவசியம். ஒவ்வாமை சார்ந்த நோய்கள் எதிர்காலத்தில் குழந்தைகளைத் தாக்காமல் இருக்க, தாய்ப்பாலின் இயற்கை சாரங்கள் பயன்படும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்குப் புற்றுநோய் வராமல் இருப்பதற்கான சாத்தியங்களும் அதிகம்.
அடுத்தது கேழ்வரகுப் பால் (கேழ்வரகை நன்றாக உலர்த்தி, அரைத்து எடுக்கப்பட்டது) வழங்கலாம். முதல் பத்து மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு ‘உரை மாத்திரை’ வழங்க நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். மெலிந்த தேகம் உடைய குழந்தைகளுக்கு மலைவாழை, செவ்வாழை ஆகியவற்றைக் காயவைத்து உலர்த்திய பொடியைப் பாலில் கலந்துகொடுக்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கு…
சத்து மாவு வகைகளைக் கொண்டு குழந்தைகளுக்குப் பிடித்த புதுப்புது உணவு வகைகளைத் தயாரித்துப் பரிமாறலாம். சிறுதானிய உணவு வகைகளைச் சிறிது சிறிதாக உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, இருங்கு சோளம் போன்ற சிறுதானிய உணவு வகைகள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாரபட்சமில்லாமல் ஊட்டம் கொடுப்பவை!
சிறுதானிய மாவுடன் தண்ணீர் சேர்த்து நீர்க்க வைத்து, குழந்தைகளுக்கு வழங்கலாம். சிறுதானியங்களில் உள்ள புரதம், இரும்புச் சத்து உள்ளிட்ட பல நுண்ணூட்டங்கள் பிள்ளை களின் சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கடலை மிட்டாய், பயறு உருண்டை போன்ற புரதச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டாயமாக்கலாம்.
பருப்பு வகைகள்
சோற்றுடன் உருக்கிய நெய்யும் குழைந்த பருப்பும் சேர்த்துப் பிசைந்து பிள்ளைகளுக்கு ஊட்டலாம். நம் கலாச்சாரத்தின் ஊட்ட உணவுப் பொருளான பருப்பு ரகங்களைத் தேவைக்கு ஏற்ப குழந்தைகளுக்குத் தரவேண்டும். அமினோ அமிலங்கள் நிறைந்த பச்சைப் பயறு, துவரை, கொண்டைக்கடலை போன்றவற்றை உணவு முறையில் சேர்க்கலாம். தேகம் மெலிந்த குழந்தைகளின் எடை கூடுவதற்குப் பருப்பு வகைகள் சிறந்த தேர்வு.
மீன் உணவு நல்லது
பீட்ஸா, பர்கர், செயற்கை உப்பு சேர்ந்த நொறுவைகளைக் குழந்தைகளிடமிருந்து தள்ளிவைப்பது காலத்தின் கட்டாயம். சிறுவயதிலேயே உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் உருவாகக் காரணியாக மேற்சொன்ன உணவு வகைகளைச் சுட்டிக்காட்டலாம். அசைவ உணவு வகைகளில் இளம் ஆடு, மீன் வகை களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மீன் உணவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ரத்த நாளங்களின் செயல்திறனை அதிகரிப்பதோடு பல்வேறு நோய்களைத் தடுக்கவும் பயன்படும். எண்ணெய்யில் பொரித்த அசைவ உணவு வகைகள் வேண்டாம்.
இளம் பெண்களுக்கு
பூப்படைந்தது முதல் வாழைப்பழமும் நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிடுவது இளம் பெண்களுக்குப் பலத்தைக் கொடுக்கும். பனைவெல்லம் கலந்த நீரை வாரத்தில் மூன்று முறை அருந்திவர எலும்புகள் பலப்படும்; சுண்ணச்சத்து உடலில் அதிகமாக உட்கிரகிக்கப்படும். வெள்ளைச் சர்க்கரைக்கு உகந்த மாற்று பனைவெல்லம் என்பதை இளையோரிடம் உணர்த்துவது முக்கியம்!
மாதவிடாய் காலத்தில் எள்ளு ருண்டை சிறந்தது. மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்த பேருதவி புரியும். மாதவிடாய் சீராக இருக்க மாதவிடாயின் முதல் 1 - 5 நாட்கள்: எள் சேர்ந்த உணவு; 6 – 14 நாட்கள்: உளுந்து சேர்ந்த உணவு; 15 – 28 நாட்கள்: வெந்தயம் சார்ந்த உணவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மாதவிடாய் சுழற்சி முறைப்படுத்தப்படுவதை உணர முடியும்.
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. வாழைப் பூவைப் பொரியலாகவோ துவையலாகவோ சாப்பிடலாம். வேகவைத்த வாழைப்பூவை மோரில் ஊறவைத்துச் சாப்பிடுவது இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சிக்கலைப் போக்க உதவும்.
கேழ்வரகும் கம்புவும் பூப்பெய்திய பெண்களின் உணவில் தவறாமல் இடம்பிடிப்பது அவசியம். கால்சியம் சத்து நிறைந்த கேழ்வரகு, தசைகளுக்கு வலிமை அளிப்பதோடு, எதிர்காலத்தில் எலும்பு அடர்த்திக்குறைவு நோய் வராமல் பாதுகாக்கவும் உதவும். இரும்புச் சத்தின் ஊற்றாகத் திகழும் கம்பு சார்ந்த உணவையும் பூப்பெய்திய பெண்களுக்கு வழங்கி வரலாம். கம்பங்கூழாகவோ, கம்பங் களியாகவோ சுவைப்பதன் மூலம் மருத்துவப் பலன்களைப் பெறலாம்.
பழங்கள், காய்கள், பனைவெல்லம், பனங்கற் கண்டு, கடலை மிட்டாய், சிறுதானியங்கள் போன்றவை உணவுப் பட்டியலில் அடிக்கடி இடம்பெறட்டும். கர்ப்பிணிகளுக்கு அவசியமான போலிக் அமிலம், தினையிலும் வாழைப்பழத்திலும் தேவைக்கேற்ப இருக்கிறது. கரு உருவாகும்போது ஏற்படும் நரம்பு சார்ந்த வளர்ச்சிக் குறைபாடுகளை (Neural tube defects) தடுக்க போலிக் அமிலம் உதவும்.
பால் சுரப்பை அதிகரிக்கும் உணவு
பருப்பு வகைகளும், சிறுதானிய கஞ்சி வகைகளும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பெருமளவில் உதவும். பூண்டு, வெந்தயம், தண்ணீர்விட்டான் கிழங்கு, பப்பாளிக்காய், முருங்கைக் கீரை, முருங்கைக் காய், சுரை, புடலை ஆகிய நீர்க்காய்கள் தாய்ப்பால் பெருக்கத்திற்கான சிறந்த தேர்வு. பேரீச்சை, அத்தி போன்றவை தினமும் அவசியம். ‘கேழ்வரகுப் பால்’, பாலூட்டும் தாய்மார் களுக்கான ஊட்டப் பானமாக அமையும்.
முதியோர் உணவு
முதிர்ந்த வயதைக் கப காலம் என்று குறிப்பிடுகிறது சித்த மருத்துவம். கப காலத்தில், கபத்தை அறுக்கக்கூடிய ஆடாதோடை, துளசி, கற்பூரவல்லி ஆகிய மூலிகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். தாகம் இல்லாதிருப்பினும் தேவையான அளவு நீர் பருகிக்கொண்டே இருப்பது உடலில் நீர்ச்சத்தைத் தக்கவைக்க உதவும்.
இஞ்சியைத் தேனில் ஊற வைத்து தினமும் சிறு துண்டு சாப்பிட்டு வர, உடல் வலுவடையும்; செரிமானமின்மைத் தொந்தரவுகள் மறையும். தோல் சுருக்கங்கள் தாமதமடையும். காயகற்ப மருந்தான இஞ்சித் தேன் முதியோருக்கான அத்தியாவசிய ஊட்ட உணவு!
செரிக்கும் தன்மை உள்ள எளிய உணவு வகைகள் முதியவர்களின் தட்டில் இடம்பிடிக்க வேண்டும். கேழ்வரகு சார்ந்த உணவு, கால்சியம் குறைபாட்டைத் தடுக்க உதவும். முதிய வயதில் உண்டாகும் மனம் சார்ந்த நோய்களைத் தடுக்கவும், மனத்தை உற்சாகப்படுத்தவும் மாதுளையை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். மைதா சார்ந்த உணவு வகைகள் முதியோருக்கு மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் எதிரி! ஆகவே, மைதா சேர்க்கப்பட்ட உணவு வகைகளைத் துரத்திவிடுங்கள்!
சீரக ஊறல் நீர் அல்லது சீரகக் கொதிநீர் பயன்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும். செரிமானம் சார்ந்த உபாதைகள் தலைதூக்காது. மலக்கட்டைத் தடுக்க உலர்ந்த திராட்சைகளை மிதமான வெந்நீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வரலாம். கூடவே நேரம் தவறாமல் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், இணக்கமான முதுமை சாத்தியம்.
அனைத்து வயதினருக்கும்…
வழக்கற்றுப்போன உணவு முறைகளை மீட்டெடுத்தாலே ஆரோக்கியமான நல வாழ்வு சாத்தியம். மண்பானையில் சமைத்த சுவையான உணவு, நோய் வராமல் தடுக்கும். வாரத்தில் இரு முறையாவது வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றில் பல் துலக்கப் பற்கள் ஆரோக்கியமடையும். கேடு விளைவிக்கும் கேன் நீருக்குப் பதிலாக, மண் அல்லது செப்பு பாத்திரத்தில் வைத்துக் குடிக்கப் பழகலாம்.
குளிக்கும் நீரில் வேப்பிலை, நொச்சி இலை, மாவிலை ஆகியவற்றைப் போட்டுக் காய்ச்சி குளித்தால் வாத நோய்கள் குணமாகும். மழைக்காலத்தில் வாரம் ஒருமுறை ஆவி பிடிப்பது (வேது பிடித்தல்) சிறந்தது. வெயில் காலங்களில் கோரைப் பாயில் உறங்கலாம். பொதுவாக ஃபோம் வகை மெத்தைகளுக்குப் பதிலாக இலவம்பஞ்சு மெத்தைகளைப் பயன்படுத்துவது உகந்தது. துரித உணவு வகைகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் பாரம்பரிய உணவு வகைகளை அடிக்கடி பயன்படுத்துவோம். பருவத்திற்கேற்ற உணவு முறை நோய்களை எதிர்கொள்ளும் முதல் ஆயுதம்!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com