தேசிய தாய்மை பாதுகாப்பு தினம் சிறப்புக் கட்டுரை - கர்ப்பிணிகளுக்கு சித்த மருத்துவ பொக்கிஷம்

தேசிய தாய்மை பாதுகாப்பு தினம் சிறப்புக் கட்டுரை - கர்ப்பிணிகளுக்கு சித்த மருத்துவ பொக்கிஷம்
Updated on
2 min read

2020 கணக்கெடுப்பின்படி சுமார் 1 லட்சம் கர்ப்பிணிகளில் 152 பேர் கர்ப்பம், மகப்பேறு தொடர்பான பிரச்சினைகளால் இறந்துள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கர்ப்ப காலங்களில் தாய், குழந்தையின் உயிர்க்குப் பாதிப்பு தருகிற அல்லது அவர்களை ஊனமாக்கும் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.

பாதுகாப்பான தாய்மை அடைவதற்கு, கர்ப்ப காலம், மகப்பேறு காலம் ஆகியவை குறித்த மருத்துவ விழிப்புணர்வு அவசியம் தேவை. அந்தக் காலகட்டங்களில் தேவைப்படும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, பேறுகாலத்தில் தேவைப்படும் அவசர வசதிகள், பேறுகாலத்துக்குப் பின் தேவைப்படும் வசதிகள் போன்றவற்றைக் குறித்த தெளிவான அறிவும் புரிதலும் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

டாக்டர் க. தர்ஷினி பிரியா
டாக்டர் க. தர்ஷினி பிரியா

மகப்பேறும் சித்த மருத்துவமும்

சித்த மருத்துவத்தில் சித்தர்கள் 4, 448 நோய்களைக் கூறி அதற்கு மருத்துவம் மட்டும் கூறாமல், அந்த நோய் வராமல் பாதுகாக்கும் வழிமுறைகளையும் கூறியுள்ளனர். இவ்வகையில் மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குச் சித்த மருத்துவத்தில்11 வகை மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

மகப்பேற்றின்போது பெரும்பாலான பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். அதில் முதல் மூன்று மாதங்களுக்கு ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்றவற்றைச் சரி செய்யச் சித்த மருத்துவத்தில் மாதுளை மணப்பாகு, கருவேப்பிலை பொடி அளிக்கப்படும்.

அடுத்த மூன்று மாதங்களுக்குக் கர்ப்பிணிக்கு இரும்புச் சத்து அதிகரிக்கவும், வைட்டமின் சத்துக் குறைபாட்டை நீக்கவும் சித்த மருத்துவத்தில் அன்னபேதி மாத்திரை,நெல்லிக்காய் லேகியம், ஏலாதி சூரண மாத்திரை போன்றவை அளிக்கப்படும்.

கடைசி மூன்று மாதங்களின்போது ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றைக் குறைக்க உளுந்து தைலமும், சுகமகப்பேறுக்கு குந்திரிக்க தைலம், பாவன பஞ்சாங்குல தைலம் போன்றவையும் அளிக்கப்படும்.

தாய் சேய் நலன்

ஒரு பூரண மகப்பேறு மருத்துவம் என்பது குழந்தை பிறந்தவுடன் முடிவதில்லை குழந்தை பிறந்த பிறகு தாய் - சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதற்காகத் தண்ணீர்விட்டான் கிழங்கு லேகியம் அளிக்கப்படும். மேலும், குழந்தை பெற்றெடுத்த பின் இடுப்பு வலி,கைகால் வலி ஆகியவற்றுக்குப் பிண்ட தைலம் அளிக்கப்படும். குழந்தை பிறந்த பிறகு எதிர்ப்பாற்றல் அதிகரிக்கவும், ஆரம்ப கால நோய்களைச் சரி செய்யவும் உரை மாத்திரை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் தாய்மை அடைந்த பெண்களுக்குச் சித்த மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பான பொக்கிஷம்.

சஞ்சீவி மருத்துவ பொக்கிஷம்

தாய்மை அடைந்த பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மகப்பேறு சஞ்சீவி மருத்துவ பொக்கிஷம் என்று இத்தகைய சித்த மருத்துவ மருந்து திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி தாய்மையடைந்த பெண்களுக்கு வழங்குகிறது. இந்த மருத்துவ பொக்கிஷத்தை தாய்மையடைந்த பெண்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் தாய் - சேய் இருவரும் எந்தவித உடல் உபாதைகளும் இன்றி பாதுகாப்பான தாய்மையை அடையலாம்.

கட்டுரையாளர், குழந்தை நலப் பிரிவு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: dharshini874@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in