கரோனா வைரஸ்: கற்பிதங்களால் உயிரிழக்க வேண்டாம்!

கரோனா வைரஸ்: கற்பிதங்களால் உயிரிழக்க வேண்டாம்!
Updated on
4 min read

நாவல் கரோனா வைரஸ் எப்படி உருவானது? அது எப்படிப் பரவுகிறது? அது எப்படி மனிதனைப் பாதிக்கிறது? அதிலிருந்து எப்படி மீள்வது ஆகியவற்றைக் கண்டறிய அறிவியல் உலகும் மருத்துவ உலகும் தொடக்கத்தில் தடுமாறித் திணறின. அந்தத் தருணத்தைப் போலிச் செய்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன. கரோனா வைரஸ் குறித்தான மக்களின் அச்சத்தை அறுவடை செய்த அந்தச் போலிச் செய்திகள், அறிவியலின் வீச்சை, அதன் அடியாழ உண்மைகளைப் பின்னுக்குத் தள்ளின. எட்டுத்திக்கும் அதிவேகத்தில் பரவிய அந்தச் செய்திகள் அறிவியலின் உண்மைகளிலிருந்து மக்களை அந்நியப்படுத்தின.

இன்று அந்தப் போலிச் செய்திகள் நமக்கு நகைப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளன என்றாலும், அன்று அவை மக்கள் உயிரோடு விளையாடின என்பதே உண்மை. அறிவியலின் பலனை எவ்வித கேள்வியமற்று ஏற்றுக்கொள்ளும் மக்கள், அது கண்டறிந்து உணர்த்தும் உண்மைகளையும் அவ்வாறு ஏற்றுக்கொள்வது இல்லை என்பதை கரோனா பெருந்தொற்று காலம் நமக்கு மீண்டும் உணர்த்தி சென்றுள்ளது. மனித மனங்களின் முரண்களின் வழியே உள்ளே நுழைந்து பெருந்தொற்றின் அதிவேக பரவலுக்கும், மனிதர்களின் உயிரிழப்புக்கும் அடிக்கோலிட்ட சில போலி செய்திகள் குறித்த பார்வை இங்கே:

கற்பிதம்: எலுமிச்சை சாற்றை மூக்கில் பிழிவது கரோனா வைரஸைக் கொல்லும்

உண்மை: அது கரோனா வைரஸைக் கொல்லாது. நமது மூக்கின் உட்புறத்திலிருக்கும் மென்திசுக்களையே அழிக்கும்.

கற்பிதம்: மூலிகை மசாலாவை மூக்கினுள்ளும் வாயினுள்ளும் பீய்ச்சியடிப்பது கரோனா வைரஸைக் கொல்லும்

உண்மை: நிச்சயம் கரோனா வைரஸைக் கொல்லாது. கரம் மசாலா வாசனையுடன் மணக்க மட்டுமே செய்யும்.

கற்பிதம்: வெங்காயமும் இந்துப்பும் (பாறை உப்பு) கரோனா வைரஸைக் குணப்படுத்தும்

உண்மை: வெங்காயமும் இந்துப்பும் அருமையான சாலடை உருவாக்கப் பயன்படும். பிரியாணி, பிரிஞ்சி, சப்பாத்தி ஆகியவற்றுடன் இந்த சாலடைச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இது கோவிட் 19யை கண்டிப்பாக குணப்படுத்தாது.

கற்பிதம்: பூண்டு சாப்பிடுவது கரோனா வைரஸைத் தடுக்கும்

உண்மை: பூண்டு ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, அதற்கு ஆண்டிமைக்ரோபியல் பண்புகளும் இருக்கக்கூடும். இருப்பினும், பூண்டு சாப்பிடுவது கரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாத்துள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.


கற்பிதம்: வெந்நீரில் புதினா எண்ணெய் கலந்து ஆவிபிடிப்பது கரோனா வைரஸை அழிக்கும்

உண்மை: நீராவி பிடிப்பது மூக்கடைப்புக்கு நல்லது. சளித் தொல்லை போன்றவற்றுக்கு நல்ல நிவாரணி. புதினா எண்ணெய்யைக்கொண்டு மசாஜ் செய்வது உடலுக்கு இதம் தரும். கரோனா வைரஸ் அழிப்புக்கோ அதற்கு சிகிச்சை அளிக்கவோ எந்த விதத்திலும் உதவாது.

கற்பிதம்: சரிவிகிதத் தாவர உணவு கரோனா வைரஸைத் தடுக்கும்

உண்மை: சரிவிகிதத் தாவர உணவு நம்முடைய உடல்நலனுக்கு மிகவும் நல்லதுதான். ஆனால் தடுப்பூசி, சமூக இடைவெளி, ஈரடுக்கு முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவை மட்டுமே கரோனா வைரஸைத் தடுக்கும்.

கற்பிதம்: நல்ல மனநிலை கரோனா வைரஸை அண்ட விடாது.

உண்மை: நல்ல மனநிலை மன அமைதிக்கும் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும் அவசியம். அவை நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கக்கூடும். ஆனால், கரோனா வைரஸை அண்ட விடாது என்று சொல்வதில் எள்ளளவும் உண்மையில்லை.

கற்பிதம்: வெந்நீரில் குளிப்பது கரோனா வைரஸைத் தடுக்கும்

உண்மை: சூடான குளியல் எடுப்பது கரோனா வைரஸைத் தடுக்காது என்பதே உண்மை. குளிக்கும் நீரின் வெப்பநிலை எதுவாக இருந்தாலும், நம்முடைய உடல் வெப்பநிலை 36.5 ° C முதல் 37 ° C வரையிலேயே இருக்கும். உண்மையில் கொதிக்கும் நீரில் குளிப்பது தீங்கையே விளைவிக்கும். கரோனா வைரஸுக்கு எதிராக நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான சிறந்த வழி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதுதான்.

கற்பிதம்: மாட்டு சாணமும் கோமியமும் கரோனா வைரஸை விரட்டும்

உண்மை: சமீபகாலமாகச் சில அரசியல்வாதிகள் மாட்டுச் சாணமும் கோமியமும் கரோனா வைரஸை விரட்டியடிக்கும், நோயாளிகளைக் குணப்படுத்தும் என்று கூறிவருகின்றனர். மாட்டுச் சாணமும் கோமியமும் அருமையான இயற்கை உரங்கள். உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால், அங்கே பயன்படுத்திப் பயன்பெறுங்கள்.

கற்பிதம்: கற்பூரத்தையும் ஓமத்தையும் சுவாசிப்பது ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்

உண்மை: இரண்டாவது அலையின்போது சமூக ஊடகங்களில் அதிகம் பரவிய செய்தி இது. ஒரு பாத்திரத்தில் கற்பூரத்தையும் ஓமத்தையும் போட்டு சுவாசிக்கும்போது, உடலின் ஆக்சிஜன் அளவு எப்படி அதிகரித்தது என்று வீடியோக்கள் பரவின. உடலில் ஆக்சிஜன் அதிகரிப்பதற்கும் கற்பூரம், ஓமம் கலவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆக்சிஜன் செறிவூட்டி, குப்புறப் படுத்தல் போன்றவையே ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் கோவிட் நிமோனியாவின் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய இக்கட்டான தருணம் அது. அந்தத் தருணத்தில் இந்த மாதிரியான வீடியோக்கள் உயிருக்கு எமன்.

கற்பிதம்: ஆக்சிஜன் அளவு குறைந்தால் பிரணாயாமம் செய்யுங்கள்

உண்மை: கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஆக்சிஜன் அளவு குறைவு என்பது நோயின் தீவிரத்தை உணர்த்தும் குறியீடு. உடனடி மருத்துவ கண்காணிப்பு தேவை. மருத்துவரின் உதவிக்குக் காத்திருக்கும் தருணத்தில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் குப்புறப் படுக்கும் முறையைப் பின்பற்றலாம். புரோனிங் என்பது மார்பில் தலையணையை வைத்துக் குப்புறபடுத்து மூச்சுவிடும் முறை. இது ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆரோக்கியமான நிலையில் பிராணாயாமம் உடல்நலனுக்கும் மன அமைதிக்கும் நல்லது. ஆக்சிஜன் அளவு உடலில் குறைந்த நிலையில் பிராணாயாமம் செய்வது உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும்.

கற்பிதம்: மது அருந்துவது கரோனா வைரஸை அழிக்கும்

உண்மை: சமூக ஊடகங்களில் அதிகம் பரவிய செய்தி இது. கிருமிநாசினியிலிருக்கும் ஆல்கஹால் கரோனா வைரஸை அழிக்கும்போது, ஏன் மதுவிலிருக்கும் ஆல்கஹால் அதை அழிக்காது என்பதே இந்தச் செய்தியின் அடிப்படை. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் இதை ஆமோதித்தவர் என்பதிலிருந்தே, இதன் உண்மைத்தன்மை கேள்விக்குரியதாகிறது. போதையை மட்டுமே மது அளிக்கும். அது ஒருபோதும் கரோனா வைரஸை அழிக்காது. இந்த மூடநம்பிக்கையின் உந்துதலில்தான் ஈரானில் சானிடைசர் குடித்து 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கற்பிதம்: கொசுக் கடியின் மூலம் கரோனா வைரஸ் பரவும்

உண்மை: கொசுவின் மூலம் கரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. கரோனா வைரஸ் என்பது சுவாச மண்டலத்தைத் தீவிரமாகப் பாதிக்கும் ஒரு வைரஸ் தொற்று. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது வெளிப்படும் நீர்த்துளிகள் மூலமாகவோ உமிழ்நீர் துளிகள் மூலமாகவோ சளி மூலமாகவோதான் அது பரவுகிறது.

கற்பிதம்: தடுப்பூசியில் மைக்ரோ சிப் உள்ளது

உண்மை: உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்கக்கூடிய மைக்ரோசிப் ஒன்றைத் தடுப்பூசி கொண்டுள்ளது என்பது தடுப்பூசி குறித்த கட்டுக்கதைகளில் ஒன்று. பில்கேட்ஸுக்கும் இந்த மைக்ரோ சிப்புக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்தக் கதை கூறுகிறது. இது அபத்தமானது, விசித்திரமானது. 2000 ரூபாய்த் தாளில் மைக்ரோ சிப் விவகாரம் எப்படிப் பொய்யோ, அதுபோலவே இதுவும் அக்மார்க் பொய்.

கற்பிதம்: முகக்கவசம் அணிவது உடலில் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுத்தன்மையை அதிகரிக்கும்

உண்மை: முகக்கவசத்தை, குறிப்பாக என்95 அல்லது என்99 முகக்கவசத்தை எட்டு மணி நேரம் தொடர்ந்து அணிந்தால் உடலில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு இரண்டு முதல் நான்கு சதவீதம் மட்டுமே அதிகரிக்கச் சாத்தியமுள்ளது. இந்தச் சூழல் அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு மட்டுமே ஏற்படும். சர்ஜிகல் மாஸ்க் அல்லது ஈரடுக்கு மாஸ்க் அணிபவர்களுக்கு இத்தகைய ஆபத்து ஏற்படச் சாத்தியமில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in