சிறு காற்றாலைகள்: அரசு என்ன செய்ய வேண்டும்?

சிறு காற்றாலைகள்: அரசு என்ன செய்ய வேண்டும்?
Updated on
2 min read

காற்றாலை மின் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத, வற்றாத மின் ஊற்றைப் போன்றது. காற்றின் சக்தியை நீர் இறைப்பதற்கும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கும் பாரம்பரியமாகவே பயன்படுத்தி வந்திருக்கிறோம். காற்றாலை விசிறியின் சுழற்சிப் பரப்பு (Swept area) 200 சதுர மீட்டருக்குக் கீழ் இருப்பது, 50 கிலோவாட் மின்னுற்பத்திக்குக் கீழ் உள்ளவற்றைச் சிறு காற்றாலைகள் (Small wind turbine) என்று சர்வதேச மின்தொழில்நுட்ப ஆணையம் (International Electrotechnical Commission) வரையறுக்கிறது. அதே நேரம், இந்தியாவில் 100 கிலோவாட் மின்னுற்பத்தி வரை சிறு காற்றாலைகளாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.

விவசாயப் பண்ணைகள், தொலைதூர, கிராமப்புற தொலைத்தொடர்பு கோபுரங்கள், தனித்து இயங்கும் கட்டிடங்களில் சிறு காற்றாலைகளைப் பயன்படுத்தலாம். மின் தேவை உள்ள இடங்களில் இவற்றை நிறுவுவது எளிது. அதே போல், பெரிய காற்றாலைகளை நிறுவுவதற்குத் தேவையான கடினமான நிலப்பரப்பு, மின்சாரத்தைக் கொண்டுசெல்ல ஏதுவான வழித்தடம் ஆகியவை இல்லாத இடங்களில் சிறு காற்றாலைகளைப் பயன்படுத்தலாம்.

இந்தியப் பிரச்சினைகள்

இந்தியாவில் சிறு காற்றாலை மின்னுற்பத்தி 3.3 மெகாவாட்டுக்கு மிகாமலேயே உள்ளது. ஆனால், சீனாவில் 732 மெகாவாட், அமெரிக்காவில் 161 மெகாவாட் என்கிற அளவுக்கு நிறுவப்பட்டுள்ளன. அந்நாடுகளில் சிறு காற்றாலைகளை நிறுவுவதற்கு ஆதரவான கொள்கை, ஊக்கத்தொகை, தர நிர்ணயம் ஆகியவை உண்டு.

நிறுவ, பராமரிக்க, திறமையுள்ள மனிதவளம், இடத்தைத் தேர்வுசெய்தல், சூரிய மின்னுற்பத்தி ஏற்படுத்தும் போட்டி ஆகியவற்றால் இந்தியாவில் சிறு காற்றாலைகளை அதிகரிப்பதில் சிக்கல் நிலவுகிறது. அரசு கொள்கை ஆதரவும் தொழில் சாத்தியக்கூறுகளும் குறைவாகவே உள்ளன.

2010-ம் ஆண்டு 25 சிறு காற்றாலைகளைக் கொண்டு 500 கிலோவாட் மின்னுற்பத்தி செய்து ஏரோஜெனரேட்டர் நிறுவுவதைக் குறிக்கோளாகக் கொண்டு ‘சிறு காற்றாலைத் திட்ட’த்தைப் புதிய, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் தொடங்கியது. ஒரு கிலோவாட்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் என்கிற அளவில் நிதியுதவியும் அளிக்கப்பட்டது. இத்திட்டம் 2017-ல் நிறைவடைந்த பிறகு சிறு காற்றாலை நிறுவுவதில் பெரிய முன்னேற்றம் இல்லை.

தமிழகத்தில் சிறு காற்றாலைகள்

காற்று வளமிக்க தமிழகத்தில் பெரிய காற்றாலைகள் மூலம் மின்னுற்பத்தி செய்யப்படும் நிலையில், சிறு காற்றாலைகளின் பங்களிப்பு சொற்பமே. இதுவரை 257 கிலோவாட் சிறு காற்றாலைகள் (MNRE Annual Report 2018-19) மட்டும் நிறுவப்பெற்று, இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

மகாராஷ்டிரம், ஆந்திரத்தில் முறையே 1,833 கிலோவாட், 291 கிலோவாட் திறனுக்குச் சிறு காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் மின்தொகுப்புக்கு வெளியே மின்னுற்பத்தித் திட்டத்தின்கீழ் சிறு காற்றாலைத் திட்டங்களும் ஊக்கப்படுத்தப்படுகின்றன. சிறு காற்றாலை நிறுவ மூலப் பொருட்கள் கிடைப்பதால் பராமரிப்பும் எளிதாக உள்ளது.

தமிழகத்தில் சாத்தியமுள்ள இடங்களில் பெரிய காற்றாலைகள் நிறுவப்பட்டுவிட்டதால், மற்ற பகுதிகளில் சிறிய ரகக் காற்றாலைகளாகப் பரவலாக நிறுவலாம். தேசியக் காற்று ஆற்றல் நிறுவனத்தின் காற்று வேக வரைபடத்தைக் காணும்போது தமிழகத்தில் பல இடங்களில் சிறு காற்றாலைகளை நிறுவ முடியும். இவற்றைத் தனித்தோ, மின் தொகுப்புடன் தொடர்புப்படுத்தியோ பயன்படுத்தலாம். மின்தொகுப்புடன் இணைக்காமல் தனித்து இயங்கும் பொழுது நீர் இறைக்க, தானியம் அரைக்க, விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். மின் ஒளியூட்டவும், நீரைக் குளிர்விக்கவும் சூடாக்கவும் பயன்படுத்தலாம்.

அரசின் கொள்கை, திட்டங்கள் சிறு காற்றாலைகளை ஊக்குவிக்க வேண்டும். அப்போது சூரிய மின்னாற்றல் பரவலைப் போன்று சிறு காற்றாலைகளையும் பரவலாக்க முடியும். சூரிய மின்னாற்றலுக்கு மாறாகப் பகல், இரவு என இரண்டு நேரங்களிலும் சிறு காற்றாலைகள் மின்சாரத்தை வழங்கும்.

மரபுசாரா மின்னுற்பத்திக் கொள்கையில் சிறிய காற்றாலைகள் நிறுவுவதை ஒரு இலக்காகக் கொண்டு தொலைத்தொடர்பு கோபுரங்களில் அவற்றை இணைத்துப் பயன்படுத்தலாம். போதிய நிதியுதவியும் அரசு கொள்கை ஆதரவும் இருந்தால் சிறு காற்றாலைகள் நிறுவுவது பரவலாகச் சாத்தியப்படும்.

சிறு காற்றாலைகளுக்கு ஏற்ற சந்தையை உருவாக்க மூலப் பொருள், நிறுவுதல், பராமரிப்பு, மனிதவளம் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். புதுமையான தொழில்முறைகள் சார்ந்தும் முயலலாம். மாநில அளவிலான காற்று வேக வரைபடத்தை வெளியிட வேண்டும். தமிழகத்தின் மரபுசாரா மின்னுற்பத்தியில் காற்றாலைகளின் பங்களிப்பை அதிகரித்து, உகந்த அளவில் பயன்படுத்தினால் சிறு காற்றாலைகள் போன்ற தொழில்நுட்பங்கள் மேன்மை அடையும்!

கட்டுரையாளர்கள், உலக ஆதார நிறுவனத்தின் இந்திய ஆற்றல் திட்ட ஆராய்ச்சியாளர்கள்

தொடர்புக்கு: kajol@wri.org, vaisakh.kumar@wri.org

தமிழில்: ரமேஷ் செங்குட்டுவன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in