Published : 09 Apr 2022 10:30 AM
Last Updated : 09 Apr 2022 10:30 AM

நம்மைச் சுற்றி உள்ளது ஆரோக்கிய உணவு

செஷல்ஸ் தீவுக்கு இரண்டாண்டுகள் பணி நிமித்தம் சென்று திரும்பிய தோழியிடம் பேசிக்கொண்டி ருந்தேன். அவர் கூறிய ஒரு செய்தி நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. அழகு கொஞ்சும் அந்தத் தீவில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் மிகச் சிறிய அளவிலேயே நடைபெறுவதால் பச்சைக்காய்கறிகள், பழங்கள், இறைச்சி, கீரைகள் என எதுவுமே அங்கு பறித்தவுடன் கிடைக்க வாய்ப்பில்லை. அவை சொற்பமான அளவே கிடைப்பதால், விலை அதிகம். பொருளாதார வசதியில் மேம்பட்டவர்களால் மட்டுமே அவற்றை வாங்க முடியும்.

சாமானியர்கள், சாதாரண தக்காளி யைக்கூடப் பதப்படுத்தப்பட்ட கூழ் வடிவிலேயே வாங்க முடியும். இறைச்சி உள்ளிட்டவையும் உறைநிலையில் டின்களில் அடைக்கப்பட்டவையாகவே இருக்கும். இதனால், அங்கே அதிக அளவிலான மக்கள் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எல்லா வயதினரிடமும் உடல் பருமன் பாதிப்பு காணப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். கெட்டுப் போகாமலிருப்பதற்காக வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு, பாக்கெட்டு களிலும் டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் உணவுப் பொருட்களை தொடர்ச்சியாகப் உண்பதால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகள் இவை.

ஈர்க்கும் விளம்பரங்கள்

பாக்கெட்டுகளில், டின்களில் அடைக்கப் பட்டு விற்பனைக்கு வரும் உணவுப் பொருட் கள் தீங்கானவை என்பது இன்று நாம் அறிந்திருக்கிறோம். இருப்பினும், இவை விளம்பரங்கள் வாயிலாகத் தொடர்ச்சியாகக் குழந்தைகளை ஈர்த்துவருகின்றன. இந்தத் தின்பண்டங்கள், பானங்களை வாங்கித் தருவதைத் தமது குழந்தைகளை மகிழ்விக் கும் செயலாகப் பல பெற்றோர்களும் தொடர்ந்து பின்பற்றிவருகிறார்கள். உணவு விநியோக செயலிகள் மூலம் கணப்பொழுதில் இவற்றையெல்லாம் வீட்டுக்குத் தருவிப்பது வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது.

நம் நாட்டின் நிலை

செஷல்ஸ் தீவின் நிலை நமக்கில்லை. உணவுப் பஞ்சம், பட்டினி, வறட்சி எல்லா வற்றையும் கடந்து பசுமை, வெண்மை, நீலப் புரட்சிகளால் இன்று உணவு உற்பத்தியில் அபரிமித நிலையை எட்டி உள்ளோம். ஆனால், சமச்சீர் உணவை எப்படி எளிதாக உண்பது என்கிற உண்மையை, நமது பாரம்பரிய உணவு முறையைத் தொலைத்துவிட்டோம். எழுத்தாளர் இமையத்தின் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ புத்தகத்தை அண்மையில் வாசித்தேன். நீரிழிவுக்கு அடுத்த படியாகச் சிறுநீரகச் செயலிழப்பு எப்படி மனிதர்களை முடக்குகிறது என்பதை அந்தப் புத்தகம் படம்பிடித்துக் காண்பிக்கிறது. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்காக ஆண்டுக்கு இரண்டிலிருந்து மூன்று லட்சம் சிறுநீரகங்கள் தேவைப்படும் நிலையில் சுமார் பத்தாயிரத்திற்கும் குறைவான அறுவைசிகிச்சைகளே நமது நாட்டில் நடைபெறுகின்றன. இதிலிருந்து நிலைமை யின் விபரீதத்தைப் புரிந்துகொள்ளலாம்

பெருந்தொற்று உணர்த்தும் பாடம்

ஊரடங்குக் காலத்தில் மருத்துவமனை களுக்குச் செல்ல இயலாமல், மருந்தகங் களிலும் கட்டுப்பாடுகள் இருந்த சூழலில், உணவகங்களில் வாங்குவதற்கும் அச்சம் நிலவியபோது நம் வீட்டுச் சமையலறையும், நாம் பேணிய அடிப்படைச் சுகாதாரமும்தான் பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றின. மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள், துளசி போன்றவற்றைப் பயன்படுத்தி வழிவழியாகப் பின்பற்றிவந்த வீட்டு வைத்தியமும், கஷாய முறைகளும் அவற்றில் பெரும்பங்கு வகித்தன.

நம் நாட்டிலிருந்து முருங்கை விதைகளை வரவழைத்து கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ பயிரிட்டபோதுகூட அசட்டையாக இருந்த நாம், நோய் எதிர்ப்பாற்றலுக்காக முருங்கைக் காயையும் முருங்கைக் கீரை சூப்பையும் அருந்தினோம். இப்போதிருக்கும் சூழலில், பெருந்தொற்றுக் காலத்தில் கற்றுக் கொண்ட உண்மையை நாம் நினைவில் வைத்திருக்கிறோமா என்பது கேள்விக்குறியே.

உணவின் மூலம் ஆரோக்கியம்

உணவின் மூலமாகவே ஆரோக்கியத்தைப் பெறலாம் என்பது ‘இந்திய ஊட்டச்சத்தியல் தந்தை’ என அழைக்கப்படும் மருத்துவர் சி.கோபாலன் உள்ளிட்ட பல்வேறு வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர். நியாயவிலைக் கடைகளில் இலவசமாகவும், குறைந்த விலையிலும் உணவுப் பொருட்களை வழங்குவது, சத்துணவுத் திட்டம் ஆகியவையெல்லாம் இதன் நீட்சிதான். பசியைத் தீர்ப்பதோடு ஊட்டச்சத்துத் தேவைகளையும் கருத்தில் கொண்டு அவை நிறைவேற்றப்பட்டன.

ஆனால், இப்போதைய சூழலில் மாற்ற மடைந்த வாழ்க்கை முறையில் செலவு செய்து துரித உணவையும், பதப்படுத்தப்பட்ட பானங்களையும், இறக்குமதி செய்யப்படும் பழங்களையும் வாங்குவது புதிய நடைமுறையாகிவிட்டது. நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் சற்று பழுப்பான அரிசி உயிர்ச்சத்தை இழக்காமல் இருக்கிறது என்கிற உண்மையைப் புரிந்துகொள்ளாமல் அதை வெளியில் விற்பவர்கள் உள்ளனர். இவர்களைக் குறிவைத்தே வேதிப்பொருட்களால் அதீத வெண்மையூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், காய்கறிகள் பல நேரம் விற்பனைக்கு வருகின்றன. அதிகக் கொழுப்பு, உப்பு, சர்க்கரை உள்ள உணவு வகைகள் உடல்பருமன், நீரிழிவு, இதய நோய்கள், தொற்றாத நோய்கள் போன்றவற்றுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. துரித உணவுகளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் இவற்றுக்கான அடிப்படைக் காரணங்கள்.

பாரம்பரிய உணவு முறைகளைக் காப்போம்

பரிந்துரைக்கப்பட்ட ஐந்து கிராம் அளவுக்குக் குறைவாக உப்பைத் தினமும் உட்கொள்வதன் மூலம் உலக அளவில் 25 லட்சம் உயிரிழப்புகளை ஒவ்வோர் ஆண்டும் தவிர்க்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அந்தந்தப் பருவத்தில், நம் சுற்றுப்புறங்களில் விளைபவற்றை உண்பது குறித்து நாம் சிந்தித்தால் சூழலியல் பாதுகாப்பு, பல்லுயிர் ஓம்பல், வேளாண்மை செழிப்பு, மாசற்ற உணவு என எல்லாவற்றையும் அந்த உணவுச் சங்கிலித் தொடர் தன்னகத்தே கொண்டுள்ளது நமக்குப் புரியும். அருகில் விளைபவற்றை, அந்தந்தப் பருவத்தில் அதிகம் கிடைப்பவற்றை உண்பது உணவுப் பொருட்களின் இயற்கைத்தன்மையை மீட்டெடுப்பதோடு நம்பகத்தன்மையைக் கொடுக்கும். விலையை யும் கட்டுக்குள் வைக்கும். ஒரே மாதிரியான உணவு முறையை மாற்றி பல்வேறு காய்கறிகள், பழங்கள், தானியங்களைக் காலநிலைக்கேற்ப உண்ணும் நல்ல உணவுத் திட்டத்தை அது நம்முள் விதைக்கும்.

இந்தப் புவியும் மக்களும் ஆரோக்கியத் துடன் மாசில்லாத காற்று, நீர், உணவோடு வாழ வேண்டும் என்பதே ஏப்ரல் 7 அன்று கடைபிடிக்கப்பட்ட உலக ஆரோக்கிய நாளின் கருப் பொருள். சூழலியலைப் பேணும் வழி முறைகளைப் பின்பற்றி நம் பாரம்பரிய உணவு, வாழ்க்கை முறைகளின் தொடர்ச்சி அறுபடாமல் காத்துவந்தால், மேற்கண்ட அனைத்தும் நம் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்.

கட்டுரையாளர், ஊட்டச்சத்தியல் துறை உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: umathanvi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x