

மனிதர்களின் வரலாறு அவ்வளவு பெருமைக்குரிய ஒன்றல்ல. தன்னிருப்பை நிலைநிறுத்தவும், தன்னைக் காக்கவும், சுயநலத்தின் உச்சத்தில் பிற உயிரினங்களின் மீதும், இயற்கையின் அனைத்து கூறுகளின் மீதும் மனிதர்கள் நிகழ்த்திய வன்முறை மிகவும் அதிகம். அறிவியல் கோட்பாடுகளாக இருந்தாலும் சரி, மருத்துவக் கண்டுபிடிப்புகளாக இருந்தாலும் சரி, அவற்றின் பலனை முழுவதுமாக அனுபவிப்பவர்கள் மனிதர்கள் மட்டுமே. ஆனால், அதற்கான விலையை விலங்குகளே கொடுக்கின்றன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட / உறுதி செய்யப்பட்ட அனைத்து கோட்பாடுகளுக்கும் உயிர் கொடுப்பதற்காக, எண்ணிலடங்கா விலங்குகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன; அவற்றின் உயிர்கள் பறிக்கப்பட்டும் உள்ளன. உளவியலில் 'கையறு நிலை' (Helplessness) என்று வெகுவாக அறியப்படும் முக்கியக் கோட்பாடும்கூட, உதவியற்ற நிலையிருந்த விலங்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகளிலிருந்து உருவானதே.
பரிசோதனையின் நோக்கம்
1967ஆம் ஆண்டில், பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு சர்ச்சைக்குரிய உளவியல் பரிசோதனையை நடத்தியது.அதில் நாய்களுக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. பாதகமான அனுபவங்களிலிருந்து விலங்குகள் என்ன கற்றுக்கொள்கின்றன, எவ்வாறு தப்பிக்கின்றன என்பதைக் கண்டறிந்து, மனிதர்களுக்கு அந்த வழிமுறையைக் கற்றுத்தருவதே அந்த ஆராய்ச்சியின் நோக்கம்.
பரிசோதனையின் முதல் நிலை
பரிசோதனையின் முதல் நிலையில், நாய்கள் தனித்தனி கூண்டுகளில் அடைக்கப்பட்டன. அவற்றின் கால்கள் மட்டும் அந்த கூண்டின் நான்குத் துளைகள் வழியாகத் தொங்கின. ஆராய்ச்சியாளர்கள் நாய்களின் பின்னங்கால்களுக்கு வலிமிகுந்த மின்சார அதிர்ச்சியைத் தொடர்ச்சியாக வழங்கினர். அந்தப் பரிசோதனையில் சில நாய்கள் இருந்த கூண்டில், அவை மூக்கால் எட்டக்கூடிய உயரத்தில் ஒரு நெம்புகோல் இருந்தது. நெம்புகோலை அசைத்தால், அது அதிர்ச்சியை நிறுத்தும். பெரும்பாலான நாய்கள் அதிர்ச்சியை எவ்வாறு நிறுத்துவது என்பதை விரைவாகக் கண்டுபிடித்தன. ஆனால், சில கூண்டுகளில் நெம்புகோல் வேண்டுமென்றே வேலை செய்யவில்லை. என்ன செய்தாலும் அந்தக் கூண்டுகளில் மின் அதிர்ச்சிகள் நிற்காது.
பரிசோதனையின் இரண்டாம் நிலை
இருபத்தி நான்கு மணிநேரத்துக்குப் பிறகு, நாய்கள் அவற்றின் ஆரம்ப சுற்று அதிர்ச்சிகளைத் தாங்கிய பிறகு, அவை 'ஷட்டில் பாக்ஸ்' என்று அழைக்கப்படும் வேறுபட்ட சோதனைச் சூழலில் / பெட்டிக்குள் அடைக்கப்பட்டன. சற்று முயன்றால் நாய்களால் எளிதில் தாண்டிவிடக்கூடிய உயரம் குறைவான தடுப்புச்சுவர் மூலம் அந்தப் பெட்டி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பெட்டியின் ஒரு பக்கத்தில் அதிக மின்சார அதிர்ச்சிகளை வழங்கக்கூடிய உலோகத் தகடு இருந்தது; மறுபக்கம் பாதுகாப்பாக இருந்தது. முதல் ஐந்து நிமிடங்கள் நாய்கள் அந்தப் பெட்டியில் தடையின்றி, சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. பின்னர் அந்தப் பெட்டிகளுக்கு மின் அதிர்ச்சிகள் வழங்கப்பட்டன. இதிலிருந்து தப்பிக்க, நாய்கள் செய்ய வேண்டியதெல்லாம் பெட்டியின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் தாவுவதுதான்.
பரிசோதனையின் முடிவு
முதல் பரிசோதனையில் நெம்புகோலை அசைத்து மின் அதிர்ச்சியிலிருந்து தப்பித்த நாய்கள் அனைத்தும், ஷட்டில் பெட்டியின் தடுப்புச் சுவரை எளிதில் தாண்டி மின் அதிர்ச்சியிலிருந்து தப்பிக்கும் வழிமுறையாகக் கண்டுபிடித்தன. ஆனால், முதல் பரிசோதனையில் அதிர்ச்சிகளைத் தடுக்க வழியற்று, வேதனையை அனுபவித்த நாய்கள் அனைத்தும், ஷட்டில் பெட்டியின் மின் அதிர்ச்சியிலிருந்து தப்பிக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனையை முடிக்கும் வரை, அந்த நாய்கள் வெறுமனே படுத்து மின் அதிர்ச்சியின் வேதனையைச் சகித்துக்கொண்டன. கொடூரமான இந்தச் சித்திரவதையே நமக்கு உளவியலின் புகழ்பெற்ற 'கையறு நிலை' எனும் கோட்பாட்டை வழங்கியது. இந்தக் கோட்பாடு விலங்கு, மனித உளவியலின் முக்கிய மைல்கல்லாக இன்றும் திகழ்கிறது.
கையறு நிலை கோட்பாடு
இந்தக் கோட்பாட்டின் படி, நாம் எதிர்கொள்ளும் பாதகமான சூழல்களையும், இன்னல் அளிக்கும் அதன் விளைவுகளையும் நம்முடைய செயல்பாடுகளால் மாற்ற முடியாது என்பதை நாம் அறிந்தால், நமக்கு எதுவும், எந்த முயற்சியும் முக்கியமற்று போய்விடும்; பாதகமான சூழல் அளிக்கும் வேதனைகளிலிருந்து மீள முயலாமல், அந்த வலிகளை அதன் போக்கிலேயே எவ்விதக் கேள்வியுமற்று முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழப் பழகிவிடுவோம். அந்தச் சூழலிருந்து வெளியேறும் வழி அருகிலேயே இருந்தாலும், நம்மைச் சுற்றியே உதவிகள் இருந்தாலும்கூட, நம்மை நாம் உதவியற்றவர் என்றே உணர்வோம். இதன் காரணமாக, எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், அந்தச் சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
இந்த விளக்கமே பல தசாப்தங்களாக மனச்சோர்வுக்கு அதிக அளவில் மேற்கோள் காட்டப்படும் ஒன்றாக இருக்கிறது. நம் வாழ்வின் பல சந்தர்ப்பங்களில், வீட்டில், பள்ளியில், வேலையில், நமது ஆரோக்கியத்தில், நிதி நெருக்கடியில், காதல் வாழ்க்கையில் – பாதகமான விளைவுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் போனால், நாம் அதிலிருந்து மீளும் முயற்சியை நிறுத்த கற்றுக்கொள்கிறோம். 'கவலைப்படாதே' என்று நம் மூளை சொல்கிறது; நம் மனமோ சோர்வடைந்து உள்நோக்கித் திரும்பிக்கொள்கிறது. ஷட்டில் பெட்டியிலிருந்த நாய்களைப் போல நாமும் செயலற்றவர்களாக மாறிவிடுகிறோம்.
எதிர்பாராத திருப்பம்
ஆனால், உளவியல் துறையில் எதிர்பாராத ஒன்று நடந்தது. பென்சில்வேனியா பல்கலைக்கழக பரிசோதனையின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஸ்டீவன் எஃப். மேயர், அப்போது பட்டதாரி மாணவர். பின்னர் அவர் தன்னுடைய துறையை மாற்றி நரம்பியல் விஞ்ஞானி ஆனார். உதவியற்ற நிலை குறித்து அவர் நிறுவ உதவிய கோட்பாட்டை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தார், இந்த முறை அதை நரம்பியல் கண்ணோட்டத்தில் அவர் ஆராயத் தொடங்கினார்.
நாம் கற்றுக்கொண்ட 'கையறு நிலை'யுடன் மூளையின் எந்த ஏற்பிகள், நரம்பியல் கடத்திகள் ஈடுபட்டுள்ளன என்பதை அவர் தீவிரமாக ஆராய்ந்தார். மூளையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அவர் கவனித்தபோது, 'கையறு நிலை' கோட்பாடு பின்னோக்கிச் செல்வதை அவர் கண்டுபிடித்தார். அதாவது, கையறு நிலையை நாம் கற்றுக்கொள்ளவில்லை. பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, மூளையே நம்மை உதவியற்றதாக கருதச் செய்கிறது. பாதகமான சூழலை நாம் கட்டுப்படுத்த விரும்பினால், முதலில் அதற்கான ஆற்றல் நம்முள் பொதிந்து இருக்கிறது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மனத்தின் தற்காப்பு நடவடிக்கை
இந்தப் புதிய ஆராய்ச்சி கொஞ்சம் சிக்கலானது என்றாலும் மிகவும் முக்கியமானது. பாதகமான சூழலில் கூட்டுக்குள் முடங்கிச் செயலற்ற நிலைக்குச் செல்வது என்பது, உள்ளுணர்வின் மூலம் உந்தப்படும் ஒரு தற்காப்புச் செயல் அல்லது உயிரியல் எதிர்வினை. இன்றைய உளவியலாளர்கள் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். மன அழுத்தத்துக்கு 'எதிர்த்து நில் அல்லது விலகி ஓடு' என நம் மனம் எதிர்வினையாற்றும். இந்தக் கோட்பாடு இன்று பலருக்கும் தெரியும். இந்தக் கோட்பாட்டில் இன்றைய உளவியலாளர்கள் தற்போது 'கவனி அல்லது நட்பு பாராட்டு' என்பதை இணைத்துள்ளனர். இதன் அர்த்தம், நாங்கள் சமூகத்தின் ஆதரவைத் தேடுகிறோம் அல்லது சமூகத்துக்கு ஆதரவை வழங்குகிறோம் என்பதே. மன அழுத்தத்தின்போது, அதை எதிர்த்து நிற்காமல் அல்லது விலகிச் செல்லாமல் அல்லது ஆதரவைத் தேடாமல் முழுவதுமாகச் செயலற்ற நிலைக்குச் செல்லும் போக்கே அதிகமாக உள்ளது.
முயற்சியே நம்மைப் பாதுகாக்கும்
செயலற்ற நிலை என்பது மனித பரிணாம வளர்ச்சியின் தொடக்க நிலையில் நமக்குப் பயனளித்த ஒன்று. இன்று நாம் அவ்வாறு செயலற்ற நிலைக்குச் செல்ல விரும்பவில்லை என்றால், நம்மால் எந்தச் சூழலிலிருந்தும் விலகிச் செல்ல முடியும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக, பிறரிடமிருந்து நாம் உதவியைப் பெறலாம் அல்லது பிறருக்கு உதவி அளிக்கலாம் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வலிமிகுந்த உரத்த சத்தம் நம்முடைய செவிப்பறையைக் கிழித்தால், நம்மால் அந்தச் சத்தத்தின் அளவைக் குறைக்க முடியும்; பிரகாசமான விளக்குகள் நம் கண்களைக் கூசச் செய்தால், அந்த விளக்குகளை நம்மால் அணைக்க முடியும். பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பரிசோதனையில் மின் அதிர்ச்சியையும் எதிர்கொண்டு அதிலிருந்து தப்பிக்க முடியும் என்பதைக் கண்டறிந்த விலங்குகளைப் போல நாம் இருக்க வேண்டும்.
எந்த நிர்ப்பந்தத்தின் கீழ் இருந்தாலும், நம் விருப்பத்தைச் செயல்படுத்தி, நம் சொந்த வாழ்க்கையிலும், மற்றவர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த அனுமதிக்கும் அனைத்து நெம்புகோல்களையும், அவை எதுவாக இருந்தாலும் நாம் கண்டறிய வேண்டும். அவற்றைச் செயல்படுத்த வேண்டும். அதுவே நம் வாழ்வை மேம்படுத்தும், பாதுகாக்கும்.
> தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in