Published : 05 Mar 2022 11:08 AM
Last Updated : 05 Mar 2022 11:08 AM

வரும் முன் காப்பதே எலும்புப்புரையைத் தவிர்க்கும் வழி

டாக்டர் சிவப்பிரகாஷ்

முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை வெகு வாகப் பாதிக்கும் எலும்புப்புரை நோய்க்கு வயது மூப்பும், மாதவிடாய் நிற்றலுக்குப் பிந்தைய நிலையுமே முக்கியக் காரணங்கள் என்று பொதுவாகச் சுருக்கிவிட முடியாது. சிறுநீரக நோய்கள், ரத்தக் கோளாறு, இரைப்பை குடல் நோய் கள், ஹார்மோன் பிரச்சினைகள், வைட்டமின் டி குறை பாடு, சில மருந்துகளின் பயன்பாடு உள்ளிட்ட பல கார ணங்களால் எலும்புப்புரை ஏற்படும் சாத்தியம் உண்டு.

முக்கியமாக, இன்று உயிர்காக்கும் மருந்தாகக் கருதப்படும் ஸ்டீராய்டுகளை நீண்ட காலத்துக்கோ, மருத்துவரின் பரிந்துரையின்றியோ எடுத்துக்கொள்வது இரண்டாம் நிலை எலும்புப் புரைக்கும், அதன் காரணமாக ஏற்படும் எலும்பு முறிவுகளுக்கும் முக்கியமான காரணியாகத் திகழ்கிறது. நீரிழிவு நோயின் நீண்ட கால பாதிப்பும், மோசமான சர்க்கரைக் கட்டுப்பாடும் எலும்பு முறிவுக்கான அபாயத்தைப் பன்மடங்கு அதிகரிக்கின்றன.

தடுப்பின் முதல் நிலை

மனிதர்களுக்கு உச்ச எலும்பு நிறை (எலும்புகள் அவற்றின் அதிகபட்ச வலிமை யையும் அடர்த்தியையும் அடையும் நிலை) 20 வயதுக்குள் ஏற்படும். எலும்பு நிறை இழப்பு வாழ்நாள் முழுவதும் ஏற்படும் என்றாலும், இளம் வயதில் ஏற்படும் எலும்பு நிறை இழப்பைப் புதிதாக உருவாகும் எலும்புகள் நிவர்த்தி செய்துவிடும். ஆனால், வயதாகும்போது, இழக்கப்படும் எலும்பு நிறை புதிய எலும்புகளால் முழுமையாக நிவர்த்தி செய்யப்படுவதில்லை.

உச்ச எலும்பு நிறையை அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில், நாம் ஆரோக்கிய மான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது பிற்காலத்தில் எலும்புப்புரை, எலும்பு முறிவு போன்றவை ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கும். எனவே, எலும்பை வலுவூட்டும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து, குழந்தை - இளமைப் பருவத்தில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி ஆகியவையே முதுமையில் எலும்புப்புரை நோயைத் தடுக்கும் முதல் படியும்கூட.

எலும்புப்புரை நோய் பொதுவாக வயதானவர்களைப் பாதிக்கும் நோயாக இருப்பதால், பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியம் குறித்துக் கவலைப்படுவதில்லை, அக்கறை காட்டுவதில்லை. குழந்தைப்பருவத்தில் நல்ல முறையில் பேணப்படும் எலும்பின் வலிமையே, பிற்கால எலும்பு ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

டாக்டர் சிவப்பிரகாஷ்

பழங்களும் காய்கறிகளும்

கால்சியம், வைட்டமின் டி, புரதம் போன்றவையே குழந்தைகளுக்கும் இளம் பருவத்தினருக்கும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பழங்களும் காய்கறிகளும் எலும்பின் ஆரோக்கியத்தைப் பேணுகின்றன. வைட்டமின் கே, மெக்னீசியம், துத்தநாகம், கரோட்டினாய்டுகள் போன்றவற்றை உடல் போதுமான அளவு பெறுவதற்கும் அவை உதவுகின்றன. நமது அன்றாட உணவில் பழங்களும் காய்கறிகளும் அதிகமாக இருப்பது போல் அமைத்துக்கொள்வது எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வைட்டமின் டி

எலும்பு வலிமையையும் தசை களின் செயல்பாட்டையும் பராமரிப்பதில் வைட்டமின் டி முக்கியப் பங்கு வகிக்கிறது. வைட்டமின் – டியைச் சூரிய ஒளியிலிருந்தும், நாம் உட்கொள்ளும் சீருணவிலிருந்தும் உடல் பெற்றுக்கொள்கிறது.

முகம், கைகள் உள்ளிட்ட சருமத்தை முழுமை யாகச் சூரிய ஒளியில் படச் செய்வது உடலுக்குத் தேவையான வைட்டமின் – டியைப் பெற்றுத் தரும். சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் – டியைப் பெறுவதற்குக் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதே போதுமானது. எண்ணெய் மீன், முட்டை, காளான், பால் உணவு, வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவு, வைட்ட மின் டி துணைப் பொருள்கள் போன்றவற்றின் மூலமும் உடலில் வைட்டமின் டி அளவை நாம் அதிகரிக்க முடியும்.

கால்சியம்: ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்குக் கால்சியம் அவசியம். குறிப்பாகப் பதின்ம வயதினரின் அதிவேக உடல் வளர்ச்சியின்போது கால்சியத்தின் தேவை அதிகமாக இருக்கும். பால், தயிர், பாலாடைக்கட்டி போன்றவை கால்சியத்தை எளிதில் வழங்கக்கூடியவை. பால் தவிர்த்து, பச்சைக் காய்கறிகளும் உலர் பழங்களும் கால்சியத்துக்கு ஆதாரங்களாக உள்ளன. வயதான காலத்தில், கால்சியத்தை உறிஞ்சும் உடலின் திறன் குறைவதால், கால்சியம் நிறைந்த உணவை வயதான வர்கள் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

புரதம்: வலுவான எலும்புகளுக்கும் தசை களுக்கும் புரதமே அடித்தளம். புரதங்களின் போதாமை தசைகளின் வலுவைக் களவாடும்; நோயாளிகள் அடிக்கடி கீழே விழும் அபாயத்தை அதிகரிக்கும்; எலும்பு முறிவிலிருந்து நோயாளிகள் மீளும் திறனையும் அது குறைக்கும். போதுமான புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது, எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மேம்பட்ட வலிமைக்கும் உகந்தது.

சிவப்பு இறைச்சி, கோழி, மீன், முட்டை, பால் உணவு வகைகள் போன்றவை புரதத்துக்கான சிறந்த ஆதாரங்கள். காய்கறி புரத ஆதாரங்கள் என்று எடுத்துக்கொண்டால் பருப்பு வகைகள், பீன்ஸ், சோயா, தானியங்கள், உலர் பழங்கள் போன்றவை அடங்கும்.

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

இன்றைய தலைமுறை குழந்தைகள், இளம் வயதினர் பாலுக்குப் பதிலாக சோடாக்களையும், கோலா உள்ளிட்ட குளிர்பானங்களையும் அதிகம் அருந்துவதால், எலும்பின் வளர்ச்சியும் வலிமையும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே, அவற்றைத் தவிர்ப்பது எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். காபியும், உப்பும் உடலில் கால்சியம் இழப்பை அதிகரிக்கும் என்பதால், அவற்றை கூடியமட்டும் தவிர்க்க வேண்டும். அதிகப்படியாக மது அருந்துவது எலும்புப்புரைக்குப் பெரும் ஆபத்தான காரணி. சிறிதளவே என்றாலும் தினமும் மது அருந்துவது எலும்பு நொறுங்கி உடையும் அபாயத்தைப் பன்மடங்கு அதிகரிக்கும்.

உடற்பயிற்சி: அன்றாட உடற்பயிற்சியை வழக்க மாக்கிக் கொள்வது எலும்பு, தசை ஆகியவற்றை வலிமைப்படுத்தும். கீழே விழுவதைத் தவிர்க்கும் சமநிலையையும் உடலுக்கு அது அளிக்கும். நோயாளியின் தேவைகளுக்கும் திறன்களுக்கும் ஏற்ற உடற்பயிற்சி, எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு இயக்கத்தையும் வலிமையையும் மீண்டும் பெற உதவும்.

5 முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தினமும் குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிரமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். பெரியவர்கள் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

நடனம், ஏரோபிக்ஸ், ஜாகிங், நடைப்பயிற்சி, விளையாட்டு, பளு தூக்குதல், மீள் எதிர்ப்புப் பட்டைகள், நேராக நின்று கால்விரல்களை மட்டும் உயர்த்துதல், தாய் சி, யோகா, பைலேட்ஸ் போன்றவை உடலின் வலிமை, சமநிலை, நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவும். எலும்புப்புரையின் காரணமாக உங்களுக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால், மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கீழே விழுவதைத் தடுத்தல்:

எலும்புப்புரை உள்ளவர்களுக்கு, கீழே விழுவதாலேயே அடிக்கடி எலும்பு முறிவுகள் ஏற்படும். வழுக்கும் தளங்கள் / தரைகள், தடுமாறச் செய்யும் பொருள்கள், குறைந்த வெளிச்சம், நிலையற்ற ஃபர்னிச்சர்கள், கைப்பிடிகள் இல்லாத குளியலறைகள் அல்லது படிக்கட்டுகள், பார்வைக் குறைபாடு, மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளின் பயன்பாடு போன்ற ஆபத்தான காரணிகளில் கவனம் செலுத்துவது கீழே விழும் ஆபத்தை வெகுவாகக் குறைக்கும். மேலும், சிறந்த உடல் சமநிலையும், அதிகத் தசை வலுவும் கொண்டவர்கள் கீழே விழும் சாத்தியம் குறைவு. இதற்குத் தசைகளை வலுப்படுத்துதல், சமநிலைக்கான பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய உடற்பயிற்சித் திட்டம் உதவும்.

அச்சம் வேண்டாம்: தற்போது எலும்புப்புரைக்குப் பல்வேறு வகையான சிகிச்சைமுறைகள் உள்ளன. நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்ட எலும்பு முறிவின் வகை (முதுகெலும்பு மற்றும் இடுப்பு), பிற மருத்துவ நிலைமைகள், எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றைச் சார்ந்து மாறுபடக்கூடியவை. சிகிச்சையில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. முதல் வகை எலும்புத் தேய்மானத்தைக் குறைத்து, எலும்புத் தாது அடர்த்தியைப் பாதுகாக்கும். இரண்டாம் வகை, எலும்பு உருவாவதைத் தூண்டி எலும்புத் தாது அடர்த்தியை அதிகரிக்கும்.

எலும்புப்புரையைப் பொறுத்தவரை வரும் முன் காப்பதே அதை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி. புரதம், கால்சியம், வைட்டமின் டி போன்றவை நிறைந்த சமச்சீர் உணவைச் சிறுவயதிலிருந்தே உட்கொள்வது, போதுமான உடற்பயிற்சியைத் தினசரி மேற்கொள்வது, சூரிய ஒளியில் நிற்பது போன்றவை பெருமளவு உதவும். மீறி எலும்புப்புரை வந்தால், தகுந்த சிகிச்சை மூலம் நிர்வகிக்கவும், எலும்பு முறிவு அபாயத்தை 30 முதல் 70 சதவீதம் வரை குறைக்கவும் முடியும். மேற்கண்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் எலும்புப்புரையைத் தடுக்கலாம்.

கட்டுரையாளர், மருத்துவர், நாளமில்லாச் சுரப்பியியல் நிபுணர், நீரிழிவு சிகிச்சை சிறப்பு நிபுணர். தொடர்புக்கு: sivaprakash.endo@gmail.com

கூடுதல் தகவல்களுக்கு: https://bit.ly/35M63DL

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x