Published : 26 Mar 2016 12:11 PM
Last Updated : 26 Mar 2016 12:11 PM

பதின் பருவம் புதிர் பருவமா? - இதுவும் ஒரு போதைதான்

காற்று புக முடியாத இடங்களில்கூட நுழைந்துவிடும் இணையதளம், அலைக்கற்றைகள் பெற்றோரின் கண்களை மறைத்துவிடுவதில் ஆச்சரியமில்லை. சில வருடங்களுக்கு முன்வரை வளர் இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளைப் பெற்றோர் நேரடியாகக் கண்காணிக்க முடிந்தது. “இவ்வளவு நேரம் ரோட்டில் நின்று என்ன கதை பேசுற” என்று பெற்றோரோ, ‘‘உங்க பையன் பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஒரு பொண்ணுகிட்ட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்ததைப் பார்த்தேனே’’என்று அப்பாவிடம் போட்டுக்கொடுக்கும் அண்ணாச்சியோ இணைய உலகத்தில் நடப்பதைக் கண்காணிக்க முடியாது. அதுவும் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டால் இணையதளம், மொபைல் போனை அவர்கள் பயன்படுத்துவதற்கு நேரம் காலம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இணைய போதை

இணைய அடிமைத்தனத்தை (Internet addiction) பற்றி மருத்துவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘என்ன பாஸ் நீங்க, எதை எடுத்தாலும் அடிமைத்தனம்னு சொல்றீங்க, மனநலப் பாதிப்புன்னு சொல்றீங்க. அதனால எத்தனை நல்ல விஷயங்கள் கிடைக்குது, நீங்க இப்படிச் சொன்னா நாங்க என்னதான் பண்றது?’என்று கேட்டார். அவர் கேட்டதில் நியாயம் இருக்கத்தான் செய்தது. வலைதளம் என்பது சமீபகாலமாக மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது உண்மைதான். ரயில், பஸ் டிக்கெட் புக் செய்வதிலிருந்து வரன் பார்ப்பதுவரை பல்வேறு அன்றாட தேவைகளுக்கு இணையதளம் மற்றும் மொபைல்போன் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.

ஆனால், நம் கண்களை மறைக்கும் விஷயமாக, பலருடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் ஒன்றாகவும் அது மாறிவருவதைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். பெரும்பாலோர் குடிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, ‘மது' ஒரு போதை வஸ்துவே இல்லை என்று சொல்லிவிட முடியாதில்லையா? (பார்க்க: பெட்டிச் செய்தி)

பிரச்சினையின் தீவிரம்

புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் 8-18 வயதுக்கு உட்பட்ட இளம்பருவத்தினரில் 23 சதவீதம் பேர் இணையதளம் அல்லது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். சீனாவில் 13 சதவீதம் வளர்இளம் பருவத்தினர் இணையதள அடிமைகளாக உள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்களில் மேற்கத்திய நாடுகளுக்குக் குறைச்சலில்லாமல் இந்தியாவும் இடம்பெற்றிருப்பது மட்டுமல்லாமல், இணையதளத்தைப் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடான சீனாவுக்கு அடுத்துப் பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துவருவது பெருமைக்குரிய விஷயமல்ல, முன்னெச்சரிக்கையோடு அணுகவேண்டிய விஷயமும்கூட.

தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி சுமார் இரண்டு சதவீதம் சிறார்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை பெறும் அளவுக்கு இணையதளம் மற்றும் கணினிகளுக்கு (ஸ்மார்ட் போன் உட்பட) அடிமையாக மாறியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி. இத்தனை விரிவாக இதைப் பரிசீலிக்க வேண்டியதற்கான காரணம் ‘மொபைல்போன், இணையதளம் போன்றவை அப்படி என்ன செய்துவிடும்?’ என்று நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

எளிதில் அடிமையாவது யார்?

இணையதளத்தைப் பயன்படுத்தும் எல்லோரும் அதற்கு அடிமையாகிவிடுவதில்லை. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை எவ்வாறு கிருமிகள் எளிதில் தாக்குகின்றனவோ, அதுபோலச் சில குறிப்பிட்ட பிரச்சினையுள்ள வளர்இளம் பருவத்தினர் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பின்வரும் வகையினர் அதிகம் பாதிக்கப்படக் கூடும்.

>> மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

>> இயற்கையாகவே அதிகப் பதற்றத் தன்மை உள்ளவர்கள்.

>> கூச்ச சுபாவம் உள்ளவர்கள்.

>> படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள்.

>> கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள்.

>> சமூகப் பழக்கங்கள் குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கும் குழந்தைகள்.

>> அதிகத் துறுதுறுப்பு மற்றும் கவனக் குறைவு நோயால் பாதிக்கப்படும் சிறார்கள் (ADHD).

>> மிதமான அளவு ஆட்டிசம் (Autism) பாதிப்புக்கு உள்ளானவர்கள்.

>> தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.

>> அதிக வேலைப்பளு மற்றும் படிப்பு திணிக்கப்படும் சிறார்கள்.

>> சிறு வயதிலேயே சமூக விரோதச் செயல்கள் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகும் வளர்இளம் பருவத்தினர்.



எது இணைய அடிமைத்தனம்?

இணையதளம் மற்றும் ஸ்மார்ட் போனைக் கல்வி, தொழில் பொழுதுபோக்கு போன்ற காரணங்களுக்காக அன்றாடம் பயன்படுத்துவது அடிமைத்தனம் அல்ல. ஆனால், அதைத் தவிர மற்ற நேரங்களில் பின்வரும் காரணங்களுக்காக ஒருவர் அதிகம் பயன்படுத்தினால், அவர் இணையத்துக்கு அடிமையானதாக எடுத்துக்கொள்ளலாம்:

>> நாளுக்கு நாள் இணையதளம் (பேஸ்புக், வாட்ஸ்அப் உட்பட) பயன்படுத்தும் நேரம் அதிகரித்துக்கொண்டே செல்லுதல்.

>> ஆரம்பத்தில் தீர்மானித்த நேரத்தை விட அதிக நேரம் சென்ற பின்னும் கட்டுப்படுத்த முடியாத தன்மை.

>> அதிக நேரம் செலவழித்தால்தான் திருப்தி என்ற தன்மை அல்லது இணையதளப் பயன்பாட்டுக்காக ஒரு அப்ளிகேஷனையோ, மொபைல் போன், லேப்டாப், டேப்களில் திருப்தியில்லாமல் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பது.

>> வலைதளத்தில் நேரம் விரயமாவதால் படிப்பு, விளையாட்டு, பிறருடன் நேரடியாகச் செலவிடும் நேரம் உட்பட மற்ற முக்கிய வேலைகளைப் புறக்கணிக்க ஆரம்பிப்பது.

>> வலைதளத்தில் நேரம் விரயமாவதால் படிப்பு, விளையாட்டு, பிறருடன் நேரடியாகச் செலவிடும் நேரம் உட்பட மற்ற முக்கிய வேலைகளைப் புறக்கணிக்க ஆரம்பிப்பது.

>> பெற்றோரிடம் இணையப் பயன்பாட்டைப் பற்றிய தகவல்களை மறைப்பது அல்லது பொய் சொல்வது.

>> அன்றாட வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்துவது தெரிந்தும், விட முடியாத நிலை.

>> இணையதளத் தொடர்பு மற்றும் மொபைல் போன் இல்லாமல் ஒருநாள் இருந்தாலும் எதையோ பறிகொடுத்த உணர்வு, எரிச்சல், கோபம், மன உளைச்சல், தூக்கமின்மை, பதற்ற உணர்வு, உடல் மற்றும் மனச்சோர்வு ஆகியவை ஏற்படுவது.

>>படிப்பு உட்பட வாழ்க்கையின் மற்றப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு வடிகாலாக, இணையதளச் செயல்பாடுகளை அணுகுவது.

(அடுத்த வாரம்: உங்களுக்குச் சிரிக்கத் தெரியுமா?)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x