

ஒமைக்ரான் வேற்றுருவால் அச்சமான சூழல் உருவாகியிருந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலோர் நோயிலிருந்து குணமடைந்திருக்கின்றார்கள். மருத்துவ அணுகுமுறை, தடுப்பூசி போன்றவற்றால் இது சாத்தியமானது என்றாலும், இவற்றைவிட முக்கியப் பங்காற்றியது நமது உடலில் காணப்படும் ‘நோய் எதிர்ப்புத்திறன்’.
சாலையோரக் கடையின் விளம்பரப் பலகையில் ‘இங்கே நோய் எதிர்ப்பாற்றாலை அதிகரிக்கும் கம்புத் தோசை கிடைக்கும்’ என எழுதிவைக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நோய் எதிர்ப்புத்திறன் என்பது கம்புத் தோசையையும், உலகத் தரச்சான்றிதழ் பெற்ற சத்துமாவினையும் உண்பதால் மட்டுமே பெற்றுவிடக்கூடிய உடல் திறன் அல்ல. அது உடலின் பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு. நோய் எதிர்ப்புத்திறன் பற்றிய சரியான புரிதலே, திறன் வாய்ந்த நோய் எதிர்ப்புத்திறனைப் பெறுவதற்கு உதவும்.
நோய் எதிர்ப்புத்திறனின் வகைகள்
நமது உடலின் நோய் எதிர்ப்புத்திறன் இரண்டு வகைப்படும். முதலாவது, இயல்பாக நமது உடலில் அமைந்திருக்கும் ‘Innate Immunity’. ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களும், தோல், தொண்டை, குடல், கல்லீரல், மூளை ஆகியவற்றில் உள்ள நோய்த் தடுப்புத்திறன் பெற்ற திசுக்களும் பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போரிட்டு நோய்த் தொற்றினைத் தடுப்பது இந்த வகையில் அடங்கும்.
இரண்டாவது வகையானது, ‘Acquired or Adaptive immunity’ என்று அழைக்கப்படுகிறது. இதனை மேலும், Active and Passive immunity என இரண்டு வகையாகப் பிரிக்கின்றார்கள். நோய்த்தொற்றைத் தடுக்கும் நோக்கில் உடல் தன்னியல்பாக உற்பத்திசெய்யும் எதிரணுக்கள், டி-செல், பீட்டா செல் அல்லது தொற்றுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசிகள் ‘ஆக்டிவ் இம்யூனிட்டி’ என்று அழைக்கப்படுகின்றன. தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நோய் எதிர்ப்பாற்றல் அல்லது கரோனா நோய்த்தொற்றிற்கு வழங்கப்படும் ‘பிளாஸ்மா தெரபி’ போன்றவற்றால் கிடைக்கும் நோய் எதிர்ப்பாற்றல் ‘Passive Immunity’ என்று அழைக்கப்படுகிறது.
உணவும் நோய் எதிர்ப்புத்திறனும்
நம்முடைய நோய் எதிர்ப்புத்திறனானது உணவு முறை, மனநலம், உடற்பயிற்சி, உறக்கம் போன்ற வாழ்க்கை முறைகளால் பெருமளவு பாதிக்கப்படும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள சமூகத்தில் பெருமளவிலான மக்கள் காசநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். இவையல்லாது துத்தநாகம், வைட்டமின் - ஏ, சி, டி, போலிக் அமிலம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு நுண்ணூட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் தொற்று நோய்களால் எளிதாகப் பாதிக்கப்படும் சாத்தியம் உண்டு. முக்கியமாக, ஒருவரின் சிறுவயதில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு, அவரது நோய் எதிர்ப்புத்திறனைப் பெருமளவில் பாதிக்கும். உடல் பருமன் உடையோர், நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து சளி, இருமல், நிமோனியா போன்ற சுவாச நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். எனவே, முழுமையான நோய் எதிர்ப்புத்திறனைப் பெறுவதற்குச் சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த சீருணவு அவசியம்.
உடற்பயிற்சியும் நோய் எதிர்ப்புத்திறனும்
உடற்பயிற்சி செய்வது என்பது ஏதோ ‘சிக்ஸ் பேக்’ வைப்பதற்கும், நீரிழிவு - ரத்த அழுத்த நோயாளர்களுக்கு மட்டும் உரியதும் அல்ல. தினம்தோறும் உடற்பயிற்சி செய்வது ‘ஆக்டிவ் இம்யூனிட்டி’யை அதிகரிக்கும். மேலும், ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் காரணிகளின் (Immunoglobulins, Anti-inflammatory cytokines, Neutrophils, NK cells, Cytotoxic T cells, B cell) அளவையும் அதிகரிக்கிறது. இந்தக் காரணிகளே நோய்க்குக் காரணமான பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றைக் கண்டறிந்து உடலிலிருந்து அகற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றன. எனவேதான், எளிய உடற்பயிற்சி - யோகாசனப் பயிற்சி போன்றவை கரோனா நோய்த் தொற்றிலிருந்து மீள்வதற்குப் பயனுடையதாக அறியப்படுகின்றன.
மனநலமும் நோய் எதிர்ப்புத்திறனும்
மன உளைச்சல், மனச் சோர்வு, மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சினைகள் தொற்றுநோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறனைக் குறைப்பதோடல்லாமல் பாக்டீரியாக்கள், கரோனா வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் உடலை எளிதாகப் பாதிக்கவும் ஏதுவாகின்றது. மனமும் உடலும் இணைந்து இயங்குபவை. எனவே, மனநலனுக்குப் போதிய முக்கியத்துவம் அளிப்பது, நோய் எதிர்புத்திறனையும் அதிகரிக்கும்.
நல்ல தூக்கம் அவசியம்
தூக்கமின்மையால் புரோ-இன்ஃபிளமேட்டரி சைட்டோகைன்கள் எனப்படும் CRP, IL-6 - TNF-alpha போன்றவற்றில் ஏற்படும் அதிகரிப்பு, நோய் வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது.மேலும், நோய் எதிர்ப்புக் காரணிகளான CD4, CD8 - NK செல்கள் போன்றவற்றின் செயல்பாடுகள் குறைக்கப்படுகின்றன. எனவே, முறையான தூக்கம் மிக அவசியம். தூக்கம் உடலுக்குப் புத்துணர்வு கொடுப்பதோடு, மெலடோனின் என்கின்ற ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். இது நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்த உதவும்.
புகையும் மதுவும் பெருங்கேடு
பொதுவாகவே, மேல் சுவாசப்பாதையில் காணப்படும் மியூகோசில்லரி செல்களின் செயல்பாட்டைக் குறைத்து, கரோனா தொற்று மட்டுமல்லாமல் பல்வேறு சுவாச நோய்கள் வருவதற்குப் புகைப் பழக்கம் சிவப்புக் கம்பளம் விரிக்கும். புகைப்பழக்கம் உள்ளோரிடம் நோய் எதிர்ப்புத்திறன் தரவல்ல மரபணுக்கள் அளவில் குறைந்து காணப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மதுவின் அராஜகம் இரைப்பையில் தொடங்குகிறது. மது, இரைப்பையின் வழியாகத்தான் ரத்தத்தில் கலக்கிறது. முன்னதாக, இரைப்பையிலும் குடலிலும் காணப்படும் பல்வேறு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை (Gut microbe) இது அழிப்பதுடன், நோய் எதிர்ப்புத்திறன் காரணிகளின் செயல்பாட்டையும் முடக்கி விடுகிறது.
ஆரோக்கிய வாழ்வே முக்கியம்
சமூகத்தில் ஒருவரின் மதிப்பை, எப்படி அவர் வாழ்ந்த வாழ்க்கை நிர்ணயிக்கின்றதோ, அதுபோல ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி (அ) உடல் உழைப்பு, மன அமைதி, ஆழ்ந்த உறக்கம் ஆகிய காரணிகள் ஒருவருக்கு வலுவான நோய் எதிர்ப்புத்திறனை அளிக்கின்றன. நோய் எதிர்ப்புத்திறனால் மட்டுமே கரோனா ஒமைக்ரான் வைரஸ் போன்றவை மட்டுமல்ல; வருங்காலத்தில் வரப்போகிற இன்னும் பல வைரஸ்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வழியமைக்கும். நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்தும் விதமாக வாழ்க்கைமுறையை ஆரோக்கியமாக மாற்றிக்கொள்வது காலத்தின் கட்டாயம்.
கட்டுரையாளர், தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவன மருத்துவர், தொடர்புக்கு: senthilkumarbr@gmail.com