

உலகில் ‘சைலண்ட் கில்லர்’ என்று நீரிழிவு நோயைச் சொல்வார்கள். நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால் இதய நோய், பக்கவாதம், சிறு நீரகக் கோளாறு, பார்வையிழப்பு போன்ற நோய்களுக்கு நாமே வாசலைத் திறந்துவிட்டது போலாகிவிடும். உலக அளவில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் இது எக்குத்தப்பாகவே உள்ளது.
நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் உயர்ந்துவிடவில்லை. உடல் பருமன், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் மெல்லமெல்ல அதிகரித்து, இப்போது உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த உலகச் சுகாதார நாளின் (ஏப்ரல் 7) நோக்கம், ‘நீரிழிவை வெல்வோம்’.
இந்த நேரத்தில் நீரிழிவு நோய் பற்றி உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் இருந்து:
# உலக அளவில் 34.7 கோடிப் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது.
# 2030-ம் ஆண்டில் மக்கள் உயிரிழக்கும் முக்கியமான காரணிகளில் நீரிழிவு நோய் ஏழாவது இடத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும்.
# முதல் வகை நீரிழிவு நோயானது இன்சுலின் உற்பத்தி செய்வதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடியது. இரண்டாம் வகை நீரிழிவு நோய் என்பது இன்சுலினைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு உடல் திறனற்றதாக இருக்கும். முதல் வகை நீரிழிவு நோயைவிட இரண்டாம் வகை நீரிழிவு நோய் பரவலாகக் காணப்படுகிறது.
# உலக அளவில் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை 90 சதவீதமாக உள்ளது. குழந்தைகளுக்குக்கூட இரண்டாம் வகை நீரிழிவு நோய் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. முன்பு அரிதாக இருந்த இது, இப்போது பரவலாகிவிட்டது.
# நீரிழிவு நோயுடன் வாழும் மக்களில் 50 முதல் 80 % பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். பல நாடுகளில் இதய நோய் மூலம் மரணம் ஏற்படுத்துவதில், முக்கியக் காரணியாக நீரிழிவு நோய் உள்ளது.
# 2012-ம் ஆண்டு நிலவரப்படி 15 லட்சம் நேரடி மரணங்களுக்கு நீரிழிவு நோய் காரணமாக இருந்திருக்கிறது.
# சுமார் 80 சதவீத நீரிழிவு நோய் மரணங்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளிலேயே நிகழ்கின்றன.
# வளர்ந்த நாடுகளில் பெரும்பாலானோர் பணி ஓய்வுக்குப் பிறகே நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், வளரும் நாடுகளில் 35 முதல் 64-க்கு உட்பட்ட வயதினர் இந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
# பார்வையிழப்பு, உறுப்பு துண்டிப்பு, சிறுநீரகம் பழுதடைதல் போன்ற நோய்கள் ஏற்பட நீரிழிவு முக்கியக் காரணியாக உள்ளது. நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதே இதுபோன்ற சிக்கல்களுக்குக் காரணம்.
# இரண்டாம் வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும். தினமும் 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாடு போன்றவை இரண்டாம் வகை நீரிழிவு நோய் மோசமடையாமல் தடுக்கும். முதல் வகை நீரிழிவு நோயைத் தடுக்க முடியாது.