சீனா போற்றும் இந்திய ‘மக்கள் மருத்துவர்

சீனா போற்றும் இந்திய ‘மக்கள் மருத்துவர்
Updated on
2 min read

டாக்டர் கோட்னிஸ்.

இந்த மருத்துவரின் பெயர், இந்தியாவில் அதிகப் பிரபலம் இல்லை. ஆனால், இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு சீன அதிபரும் கோட்னிஸின் பெயரை உச்சரிக்கத் தவறுவதில்லை. இரு நாட்டு எல்லைப் பிரச்சினைகளைத் தாண்டி, சீனாவில் இன்றைக்கும் பெரிதாக மதிக்கப்பட்டு, கொண்டாடப் படுபவர் இந்திய டாக்டர் கோட்னிஸ்.

இவ்வளவுக்கும் சீனாவில் அவர் மருத்துவ சேவையாற்றிய காலம் வெறும் ஐந்து ஆண்டுகள்தான். அந்த ஐந்து ஆண்டுகளும் நவீன சீனாவின் வரலாற்றில் மிக மிக முக்கியமானவை. அப்போதுதான் ஜப்பானுக்கு எதிராக சீன மக்கள் படை போரிட்டுக் கொண்டிருந்தது. போர்க் களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்தது மட்டுமில்லாமல், ராணுவ மருத்துவப் பணியில் இருந்தவர்களுக்கு சீன மொழியிலேயே மருத்துவமும் பயிற்றுவித்தார் டாக்டர் கோட்னிஸ். சீன மக்கள் இன்றுவரை அவரைப் போற்றி வருவதற்கு இதுதான் காரணம்.

போர்க்களத்தில் சிகிச்சை

மகாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூரில் பிறந்தவர் கோட்னிஸ். டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் என்ற முழு பெயர் கொண்ட அவர் 1938-ல் சீனாவுக்குப் போன இந்திய மருத்துவக் குழுவில் இணைந்துகொண்டார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்கள் நேருவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சுபாஷ் சந்திர போஸும். அப்போது கோட்னிஸின் வயது 28தான். போர்க்களத்தில் காயமடையும் வீரர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனையில் அவர் பணிபுரிந்தார். போரில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில், அறுவைசிகிச்சைப் பிரிவுக்கு அவர் பொறுப்பேற்றிருந்தார்.

அவருடன் சென்ற மற்ற நான்கு இந்திய மருத்துவர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக நாடு திரும்பிவிட்ட நிலையில், அவர் மட்டுமே சீனாவில் தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு முன்னதாக கனடாவிலிருந்து உதவ வந்திருந்த டாக்டர் நார்மன் பெத்தூனும், போர் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே இறந்து போயிருந்தார். அவருடைய நினைவாக பெத்தூன் பன்னாட்டு அமைதி மருத்துவமனை, போர்ச் சூழலில் மிகக் குறைந்த வசதிகளுடன் உருவாக்கப்பட்டது. அந்த மருத்துவமனையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் கோட்னிஸ். போர்க்கள மருத்துவக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பும் கோட்னிஸிடமே வந்தது.

இந்தப் பின்னணியில் காலத்தையும் தன் உடலையும் பொருட்படுத்தாமல் சீன மக்களுக்கு அவசியம் தேவைப்பட்ட மருத்துவ உதவியை டாக்டர் கோட்னிஸ் வழங்கினார். அந்தக் காலத்தி்ல் ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கும் மக்களுக்கும் போர்க்களத்துக்கு அருகிலேயே அவர் அறுவைசிகிச்சை செய்தது சாதாரணமானதல்ல.

தூங்கா மருத்துவர்

முழுமையான வசதிகள் இல்லாத சூழல், கடுமையான தட்பவெப்பத்துக்கு இடையில் சில நேரம் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்குத் தூங்காமலும் இடைவெளி இன்றியும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் கோட்னிஸுக்கு ஏற்பட்டது. 1940-ல் போர் கடுமையாக நடந்துகொண்டிருந்தபோது, தொடர்ச்சியாக 13 நாட்களுக்கு இடையில் 72 மணி நேரம் தூக்கம் இல்லாமல் 588 அறுவை சிகிச்சைகளை கோட்னிஸ் மேற்கொண்டிருக்கிறார். இன்றைக்கு ஒரு எளிய அறுவைசிகிச்சைக்குக்கூடப் பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், போர் முனையில் படைவீரர்களுக்குச் சிக்கலான அறுவை சிகிச்சைகளை உடனுக்குடன் செய்து, உயிரைக் காப்பாற்றிய அவருடைய பணியை என்னவென்று சொல்வது?

இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் உடல்நலம் குன்றிய அவர், 1942 டிசம்பர் 9-ம் தேதி 32 வயதிலேயே காலமானார். சீன மக்கள் படை செவிலியரான கோ சிங்லான் என்ற பெண்ணை மணந்திருந்த கோட்னிஸ், இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய தந்தை இறந்தபோதுகூட இந்தியாவுக்குச் செல்லவில்லை. கோட்னிஸ் இறந்தபோது அவருடைய மகன் யின் ஹுஆ மூன்றரை மாதக் கைக் குழந்தை. யின் ஹுஆ மருத்துவப் படிப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில், தவறான மருத்துவச் சிகிச்சையால் 24-வது வயதிலேயே துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டார்.

சீனாவில் மூதாதையருக்கு ஆண்டுதோறும் மரியாதை செய்யும் சிங்மிங் பண்டிகையின்போது, இன்றைக்கும் கோட்னிஸின் கல்லறையில் மலர்கள் குவிந்துவிடுகின்றன. சீனாவுக்குப் பங்களித்த அயல்நாட்டவர்களின் வரிசையில் முதல் 10 பேரில் கோட்னிஸுக்கு சீன மக்கள் இடமளித்துள்ளனர். அவருடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு புகழ்பெற்ற இந்தி இயக்குநர் சாந்தாராம், ‘டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி' என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். தமிழில் அவரைக் கொண்டாடும் வகையில் 'டாக்டர் கோட்னிஸ்' என்ற ஓவியப் புத்தகம் வந்திருக்கிறது.

டாக்டர் கோட்னிஸ் - சீனத்தில் உறங்கும் இந்திய வித்து, ஷங் ஷியன்குங், தமிழில்: எம். பாண்டியராஜன், வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ், தொலைபேசி 044 - 2624 1288

கோட்னிஸுக்கு ஓவிய அஞ்சலி

'டாக்டர் கோட்னிஸ்' என்ற சிறந்த ஓவிய வாழ்க்கை வரலாற்று நூலை என்.சி.பி.எச். வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை எழுதி வரைந்துள்ளவர் சீன ஓவிய - எழுத்தாளர் ஷங் ஷியன்குங். தமிழில் மொழிபெயர்த்தவர் ஊடகவியலாளர் எம். பாண்டியராஜன். இந்தப் புத்தகம் பெரியவர் களை மட்டுமில்லாமல், குழந்தைகளையும் கவரும் வகையில் அழகு நிறைந்த 101 முழு பக்கக் கறுப்பு-வெள்ளை ஓவியங்களுடன், கோட்னிஸின் வாழ்க்கையை ஒரு நழுவுபடக் காட்சியைப் போல எளிமையாகச் சொல்லிச் செல்கிறது. சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களின் வாழ்க்கையை இதுபோன்ற முறையில் சொல்வது குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை உருவாக்கும்.

டாக்டர் கோட்னிஸ் பற்றி 'டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை' என்ற சிறிய புத்தகத்தையும், அவருக்கு முன்னதாக சீனர்களுக்கு உதவிய கனடா டாக்டர் நார்மன் பெத்தூன் பற்றி ‘டாக்டர் நார்மன் பெத்யூன் கதை: ஒரு சர்வதேசிய போராளியின் உயிர்ப்பும் அர்ப்பணிப்பும்' என்ற விரிவான மொழிபெயர்ப்புப் புத்தகத்தையும் சவுத் விஷன் புக்ஸ் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in