Published : 08 Jan 2022 12:40 pm

Updated : 08 Jan 2022 12:41 pm

 

Published : 08 Jan 2022 12:40 PM
Last Updated : 08 Jan 2022 12:41 PM

ஒமைக்ரான் பாதிப்பு குறைவா? - கூடுதல் எச்சரிக்கை அவசியமில்லையா?

omicron-virus

2021ஆம் ஆண்டுடன் கரோனா விடை பெற்றுவிடும் என்று நினைத் திருந்த நிலையில், கரோனாவின் தாக்கம் மீண்டும் உச்சமடைந்துவருகிறது. 2021 டிசம்பர் பிற்பகுதியில் ஒமைக்ரான் (Omicron) சென்னையில் நுழைந்ததால், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. பத்தாம் வகுப்புக்குக் கீழுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் மூடப்பட்டன. பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இரண்டாம் அலையின் உச்சத்தைச் சரியாகக் கணித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பால் கட்டுமன், ஒமைக்ரான் பரவலின் வளர்ச்சிப் போக்கை ‘அதிவேகம்’ என்கிறார். தினசரி கரோனா பாதிப்பு பத்துநாட்களுக்குள் நான்கு மடங்காக, அதாவது நாற்பதாயிரமாக உயர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்தபோதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஒமைக்ரான் வேற்றுருவால் கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறைவு என்பதை இது உணர்த்தினாலும், இதில் நிறைய ஆபத்துகள் மறைந்தும் இருக்கலாம். ஒமைக்ரானின் வீரியத்தை இந்த நேரத்தில் குறைத்து மதிப்பிடுவது பேராபத்தில் முடியக்கூடும்.

ஒமைக்ரான் பாதிப்பு

பொதுவாக, வைரஸ் எப்படிப்பட்ட தாக்கத்தை இனிமேல் ஏற்படுத்தும் என்பதை முழுமையாகக் கணிக்க முடியாது. இருப்பினும், ஆய்வக விலங்குகள் மீதும் மனித திசுக்களின் மீதும் நடத்தப்பட்ட புதிய ஆய்வுகள், மற்ற வேற்றுருக்களைப் போல் ‘ஒமைக்ரான்’ வேற்றுரு நுரையீரலுக்குள் தீவிரமாகப் பரவாது என்று கணித்துள்ளன. எலிகள், வெள்ளெலிகள் ஆகியவற்றின் மீதான ஆய்வுகளில், ஒமைக்ரான் தொற்று குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தியது. அந்தப் பாதிப்பும் மேல் சுவாசக்குழாய், மூக்கு, தொண்டை, மூச்சுக்குமாய் ஆகியவற்றில் மட்டும் பெரும்பாலும் இருந்துள்ளது. நுரையீரலுக்குக் குறைவான தீங்கையே விளைவித்திருந்தது. சுவாச மண்டலத்தின் மேல்பகுதியையே ஒமைக்ரான் பாதிக்கும் என்கிற கருத்துக்கான தொடக்கப்புள்ளி இது.

கரோனா பாதிப்பைப் பொறுத்தவரை, அது மூக்கு, வாய், தொண்டை ஆகியவற்றில் ஏற்படுத்தும் பாதிப்பினால் பெரிய ஆபத்து ஏற்படுவதில்லை. நுரையீரலுக்குள் நுழையும்போதுதான் உயிருக்கு ஆபத்தானதாக மாறுகிறது. கடந்த புதன் அன்று, ஓமைக்ரான் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட எலிகள், வெள்ளெலிகள் குறித்து ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை, ஒமைக்ரானால் அவற்றின் நுரையீரல் லேசாகப் பாதிக்கப்பட்டுள்ளது, அவற்றின் எடை குறையவில்லை, மரணத்துக்கான சாத்தியம் மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கிறது.

ஒமைக்ரான் பாதிப்பு நுரையீரலில் ஏன் குறைவு?

நுரையீரல் செல்களின் மேற்பரப்பில் TMPRSS2 எனும் புரதம் இருக்கிறது. இந்தப் புரதமே நுரையீரலுக்குள் கரோனா வைரஸ் நுழைவதற்கு வழிவகுக்கிறது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் இந்தப் புரதத்தை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளவில்லை. இதன் விளைவாக, டெல்டா வேற்றுருவைப் போல், ஒமைக்ரான் வேற்றுருவால் நுரையீரலுக்குள் ஊடுருவிப் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. நுரையீரலுக்குள் நுழைந்தால் வைரஸ் அழிக்கப்படும் என்பதாலோ என்னவோ, ஒமைக்ரான் இந்தப் புரதத்தைப் பற்றிக்கொள்ளும் இயல்பற்றதாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டிருக்கலாம்.

TMPRSS2 புரதம் இல்லாத செல்களைக் கொண்டிருக்கும், சுவாசக் குழாய், மூக்கு, தொண்டை ஆகியவற்றில் மட்டும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அது எளிதாகவும் அதிவேகமாகவும் பரவுகிறது. ஆனால், இது ஆரம்பக்கட்ட சிந்தனையே, இந்தக் கருதுகோளை அங்கீகரிப்பதற்கு இன்னும் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கள உண்மை நிலவரம்

இரண்டாம் அலையின் உச்சத்தில் தினசரி பாதிப்பு நான்கு லட்சமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, தற்போதைய தினசரி பாதிப்பு குறைவாக இருப்பதைப் போலத் தோன்றலாம். குறைவான அரசுப் பதிவுகள், பெரிய நகரங்களில் அதிகமாகப் பரவும் முறை உள்ளிட்ட காரணங்களால், தினசரி பாதிப்பு எண்ணிக்கை உண்மையான களநிலவரத்தைப் பிரதிபலிக்காது.

பிசிஆர் பரிசோதனை விகிதமே உண்மையான ஆபத்தை உணர்த்தும். இரண்டாம் அலையின் உச்சத்தில் பிசிஆர் பரிசோதனையின் நேர்மறை முடிவுகளின் விகிதம் 25 சதவீதம் என்றிருந்தது. டிசம்பர் 27 அன்று 0.5 சதவீதத்துக்கும் கீழே சென்றிருந்த அது, தற்போது மும்பையில் 17 சதவீதத்தை நெருங்கிவிட்டது. மற்ற நகரங்களிலும் அதிவேகமாக உயர்ந்துவருகிறது. ஒமைக்ரான் எவ்வளவு வீரியத்துடன் பரவுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

தடுப்பாற்றலும் தயார்நிலையும்

புதிய அலை அச்சுறுத்தலாக விளங்கினாலும், அதை எதிர்கொள்வதற்குத் தற்போது நாடு தயார் நிலையில் இருப்பது நம்பிக்கையளிக்கிறது. இந்தியாவில் 44 சதவீத மக்களுக்கு இரண்டு தவணைத் தடுப்பூசியும் போடப்பட்டிருக்கிறது. இத்துடன் கோடிக்கணக்கானோர் முந்தைய தொற்றினால் பெறப்பட்ட நோயெதிர்ப்பாற்றலையும் கொண்டிருக்கின்றனர். முக்கியமாக ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் நடத்தப்பட்ட தேசிய செரோ-சர்வேயில் 68 சதவீதத்தினர் ஏற்கெனவே கோவிட் ஆன்டிபாடிகளைக் கொண்டிருந்தனர். சமீபத்திய சர்வேயில், அது இன்னும் அதிகரித்திருக்கிறது.

ஒப்பீட்டளவில் நாட்டின் மருத்துவக் கட்டமைப்பும் தயார் நிலையில் உள்ளது. இரண்டாம் அலையில் கற்ற பாடங்கள், மருத்துவர்களையும் சுகாதாரக் கட்டமைப்பையும் கூடுதல் திறன்மிக்கவையாக மாற்றியுள்ளன. தமிழ்நாடு அரசும் கோவிட் சிறப்பு மருத்துவமனைகளைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது.

எச்சரிக்கை தேவை

ஒமைக்ரான் தொற்றால் கடுமையான பாதிப்போ மரணமோ ஏற்படும் சாத்தியம் குறைவாக இருப்பது போல் தோன்றினாலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

ஒமைக்ரான் வேற்றுருவின் ஆரம்ப கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் இளம்வயதினர், அவர்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியம் முந்தைய வேற்றுருக்களிலும் குறைவாக இருந்தது. மேலும், முந்தைய கரோனா தொற்றாலோ தடுப்பூசியாலோ நோயெதிர்ப்பாற்றல் பெற்றவர்களையே ஒமைக்ரான் பெருமளவில் பாதித்திருக்கிறது. எனவே, தடுப்பூசி போடப்படாத வயதானவர்களை ஒமைக்ரான் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த தெளிவு இல்லை. குறிப்பாக இந்திய மக்கள்தொகை, நெரிசலான வாழ்க்கை முறை, அதிக ஊட்டச்சத்துக் குறைபாடு, நீரிழிவு, காசநோய் போன்ற காரணிகள் மக்களை அதிக ஆபத்தில் தள்ளக்கூடும்.

சமூகப் பொறுப்புணர்வு அவசியம்

கரோனா இரண்டாம் அலை, அதிகார வர்க்கத்தின் போதாமையையும் அரசியல்வாதிகளின் இயலாமையையும் வெட்ட வெளிச்சமாக்கியது. தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காத நிலையிலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்கிற பெருமிதம் எஞ்சியிருந்தது. மிகப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடிய மதநிகழ்வுகளும், தேர்தல் பரப்புரைகளும் ஊக்குவிக்கப்பட்டன.

புதிய ஆண்டில் உருவாகிவரும் புதிய அலையின் காலகட்டம் இரண்டாம் அலையின் காலகட்டத்துடன் ஒத்துப்போகிறது. தற்போதும், பல மாநிலங்கள் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் நாம் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயலாற்ற வேண்டும். தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சோப்பால் கழுவுதல், கூட்டங்களைத் தவிர்த்தல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

Omicron VirusOmicronகூடுதல் எச்சரிக்கைஒமைக்ரான் பாதிப்புஒமைக்ரான்கள உண்மை நிலவரம்எச்சரிக்கை தேவை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x