Published : 01 Jan 2022 12:22 pm

Updated : 01 Jan 2022 12:22 pm

 

Published : 01 Jan 2022 12:22 PM
Last Updated : 01 Jan 2022 12:22 PM

2021இல் மருத்துவம்: தொடரும் கரோனாவும் துளிர்க்கும் நம்பிக்கையும்

2021-medical

கரோனா இரண்டாம் அலை

தேர்தல் பரப்புரைகள், லட்சக்கணக்கில் மக்கள் கூடிய மத நிகழ்வுகள், அரசின் மெத்தனம், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் மக்களின் ஒழுங்கின்மை, தடுப்பூசி வதந்திகள் போன்றவை கரோனா இரண்டாம் அலைக்கு வித்திட்டன. மருத்துவ மனையில் இடம் கிடைப்பது சிக்கலானது. இடம் கிடைத்தாலும் ஆக்சிஜன் படுக்கைக்கு வழியில்லை. உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவியது. இடுகாட்டில் நீண்ட வரிசையில் சடலங்கள் காத்திருந்தன. புனித ஆறான கங்கையில் சடலங்கள் பெருமளவில் வீசப்படன. வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள் அவை.

மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை

இரண்டாம் அலையின் உச்சத்தில், ‘இன்னும் சில மணி நேரத்திற்குத் தேவை யான ஆக்சிஜன் இருப்பு மட்டுமே எங்க ளிடம் இருக்கிறது. நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து’ என்று டெல்லியிலிருக்கும் ஒரு மருத்துவமனை சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவு நாட்டை உலுக்கியது. விரைவில், அந்த நிலை நாடெங்கும் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் ஏற்பட்டது. நீதிமன்றங்கள் தலையிட்டு உத்தரவு பிறப்பித்த பின்னரும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஒன்றிய அரசு இருந்தது. ஆரம்பத்தில் சற்று தடுமாறிய தமிழக அரசு, பின்னர் இந்தப் பிரச்சினையைத் திறம்படக் கையாண்டது.

பூஞ்சை நோய்கள்

கரோனா இரண்டாம் அலையின் முடிவில், கறுப்புப் பூஞ்சை நோய்த் தொற்று (மியூகோமைகோசிஸ்) அதிகரிக்கத் தொடங்கி பேசுபொருளானது. இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,000க்கு மேல் சென்றது. சில வட மாநிலங்களில் ‘கறுப்புப் பூஞ்சை’யைப் போலவே ‘வெள்ளைப் பூஞ்சை’ (Candidiasis) நோயும் பரவத் தொடங்கியது. மத்தியப் பிரதேசத்தில் கரோனாவிலிருந்து மீண்டவருக்குப் பச்சை பூஞ்சை நோய்ப் பாதிப்பு ஏற்பட்டது. கரோனாவைவிட ஆபத்தான இந்த நோய்கள் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே ஓர் ஆறுதல்.

நீடிக்கும் கோவிட்

பொதுவாக, நோயின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு விட்டனர். நோய்த் தொற்றின் கடுமையான கட்டத்துக்குப் பிறகும் சிலருக்கு மட்டும் கரோனா பாதிப்புகள் தொடர்ந்தன. இது ‘நீடிக்கும் கோவிட்’ என அழைக்கப்பட்டது. கரோனாவின் தீவிர பாதிப்பிலி ருந்து மீண்ட பலரும், இதன் பாதிப்புக்கு ஆளாகினர். ‘நீடிக்கும் கோவிட்’டை மருத்துவ உலகம் கூடுதல் கவனத்துடன் கையாண்டது. தமிழக அரசும் சென்னை கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் ‘கோவிட்டுக்குப் பிந்தைய சிகிச்சை மைய’த்தை நிறுவியது.

இந்தியாவில் தடுப்பூசி

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு முதலில் அனுமதி அளிக்கப்பட்டது. தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16இல் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் தடுப்பூசி குறித்துப் பரவிய சந்தேகங்களும் வதந்திகளும் தடுப்பூசித் திட்டத்துக்குப் பெரும் சவாலாக இருந்தன. இருப்பினும் கரோனா உயிரிழப்புகளால் மக்களிடையே ஏற்பட்ட அச்சம், அரசின் முன்னெடுப்புகள் போன்றவை தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் வகையில் நிலைமையை மாற்றியமைத்தன. தற்போது இந்தியாவில் 84 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, 60 கோடி பேருக்கு இரண்டு டோஸ் போடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸுக்கு மாத்திரைகள்

கரோனாவுக்கான சிகிச்சையில் புதிதாக இரண்டு மாத்திரைகள் வெளியாகியுள்ளன. அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழக ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட ‘மோல்னுபிரவிர்’ (Molnupiravir). மெர்க் நிறுவனம், ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த இந்த மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது. இரண்டாவது, பைசர் நிறுவனம் தயாரித்த ‘பேக்ஸ்லோவிட்’ (Paxlovid). இவை கரோனா தொற்றை ஆரம்பநிலையிலேயே தடுத்து, தொற்றாளருக்கு இறப்பு ஏற்படுவதைப் பெருமளவு தவிர்த்துவிடும் ஆற்றல் கொண்டவை.

ஒமைக்ரான் கரோனா

இந்தியாவில் கண்டறியப்பட்ட, இரண்டாம் அலைக் குக் காரணமான டெல்டா அல்லது பி.1.617.2 வேற்றுரு வில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக உருவான புதிய டெல்டா பிளஸ் வேற்றுரு கண்டறியப்பட்டது. இதனால் அக்டோபரில் மூன்றாம் அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், டெல்டா பிளஸ் வேற்றுருவின் பரவல் இந்தியாவில் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், நவம்பர் மாத இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ‘ஒமைக்ரான்’ (Omicron) எனும் புதிய கரோனா வேற்றுருவம் (Variant) மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவ நோபல் 2021

வெப்பநிலை, தொடுதல் ஆகியவற்றினால் உடலில் நடக்கும் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் உணரிகளைக் கண்டறிந்த தற்காக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆர்டெம் பாட்டபூட்டியான், டேவிட் ஜுலியஸ் ஆகிய இருவரும் இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்கள். வெப்பம், குளிர், இயந்திர சக்தி போன்றவை, நம் உடலின் நரம்பு மண்டலத்தில் உணர்ச்சித் தூண்டலை எவ்வாறு ஏற்படுத்துகின்றன என்பது குறித்த இவர்களின் ஆராய்ச்சி, வலி நிவாரணி மருந்துகள் உருவாக்கத்தில் புதிய பாதையைக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்சுலின், பி.சி.ஜி. தடுப்பூசிக்கு 100 வயது

நீரிழிவு நோயை எதிர்கொள் வதில் இன்சுலினின் பங்களிப்பு அளப்பரியது. முதலாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின்தான் ஒரே மருந்து. ஆயுள் முழுவதும் இன்சுலின் போட்டுக் கொண்டவர்கள் 90 வயது வரை வாழ்ந்துள்ளனர். பி.சி.ஜி. தடுப்பூசி குழந்தைகளுக்கு ஏற்படும் காசநோயை மட்டுமல்லாமல் பலதரப்பட்ட வைரஸ் நோய்கள், சுவாசக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்றவற்றையும் தடுக்கும். நெஞ்சகக் காசநோயைத் தடுப்பதைவிட மூளைக் காசநோய் போன்ற மோசமான காசநோய் வகைகளைப் பெரிதும் தடுக்கும். இது ஏற்கெனவே செலுத்தப்பட்ட நாடுகளில் கரோனா சார்ந்த இறப்பும் குறைவாக உள்ளது.

நோரோ, ஜிகா, பறவைக் காய்ச்சல்

2021இன் தொடக்கத்தில், வட இந்திய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பறவைக் காய்ச்சல் திடீரென வீரியத்துடன் பரவியது. பெரும் எண்ணிக்கையிலான பண்ணைக் கோழிகள் கொல்லப்பட்டன. ஏடிஸ் எஜிப்தி கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஜிகா வைரஸால், கேரளத்தில் 20-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். வயநாடு மாவட்டத்தில் பூக்கோடு கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களில் 13 பேருக்குத் திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஆகியவை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதியானது. கரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்த வைரஸ்களும் பரவியது அச்சத்தை அதிகரித்தது.

2021இல் மருத்துவம்2021Covid 19Health workersDoctors

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x