Published : 18 Dec 2021 12:02 pm

Updated : 18 Dec 2021 12:36 pm

 

Published : 18 Dec 2021 12:02 PM
Last Updated : 18 Dec 2021 12:36 PM

மாற்றுத்திறனாளிகள்: எந்த அளவுக்குப் புரிந்துகொண்டுள்ளோம்?

physically-challenged

சூ.ம.ஜெயசீலன்

1990களில் நான் பயின்ற பள்ளியின் ஆண்டு விழா நாடகத்தில் ஒருவரைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் செவித்திறன் அற்ற மாற்றுத் திறனாளிகளாக நடித்தார்கள். காது கேட்கும் திறனுள்ள ஒருவர் பேசுவதைப் புரிந்துகொள்ள இயலாமல், மற்ற மாற்றுத்திறனாளிகள் தடுமாறுவதையும், சைகை மொழியையும் கண்டு எல்லாரும் வயிறு வலிக்கச் சிரித்தோம். அடுத்த ஆண்டுவிழாவில் நாடகத்தை ‘திக்குவாய்’ கதாபாத்திரங்கள் கலகலப்பாக்கினார்கள்.

அந்த ஆண்டு நாடகம் முடிந்ததும் நாடகத்தை எழுதி இயக்கிய ஆசிரியர் ஜோல்னா ஜவஹரிடம் சென்ற மாணவன் பழனி, “நகைச்சுவைக்காகக்கூட இப்படிச் செய்யாதீங்க சார். ஊனமுற்றவருக்குத்தான் அதன் வலி தெரியும்” என்றான். ஆசிரியருக்குச் சுருக்கென்றிருந்தது. ‘இதுபோன்று இனி ஒருபோதும் செய்ய மாட்டேன்’ என உறுதி கொடுத்த ஆசிரியர், அதன்பிறகு பள்ளியில் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலரை ஊக்கப்படுத்தி, பயிற்றுவித்து, மேடையேற்றி அவர்களை விருதாளர்களாக மாற்றினார்.

தொடரும் அவலம்

இது நிகழ்ந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. திக்குவாயும், செவித்திறன் குறைவும் இன்றும் மலிவான நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்படும் அவலம் நம் சமூகத்தில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சகமனிதரைக் குறைசொல்லும்போது எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல், ‘நொண்டிக்குச் சறுக்குனதுதான் சாக்காம்’, ‘செவிடன் காதில் ஊதின சங்கு’, ‘ஊமைக்குசும்பு’, ‘பழைய குருடி கதவைத் திறடி’ என வெறுப்பு மொழிகளைச் சரளமாகப் பேசும் இயல்புநிலையை நம் நாகரிகச் சமூகம் இன்றும் கடக்கவில்லை.

மாற்றுத்திறனாளிகளை அந்நியப்படுத்திப் பார்க்கும் பார்வையிலிருந்து சமூகம் பெருமளவு மீளவில்லை. மாற்றுத்திறனாளி ஒருவரைக் குறித்து மற்றவரிடம் பேசுகையில் பெயரைச் சொல்லி, கூடவே “அவருக்குக் காது கொஞ்சம் கேட்காது”, “கைகூட இப்படி வளைந் திருக்குமே”, “அவருக்கு ரெண்டு பசங்க. அதில ஒருத்தனுக்கு மனவளர்ச்சி குறைவு” என அடிக்கோடிடாது பேசுகிறவர்கள் வெகுசிலரே.

மறுக்கப்படும் வாய்ப்பு

மனவளர்ச்சி குன்றிய, மனநலம் பாதித்துள்ள மகனையோ மகளையோ திருவிழாக்களுக்கும், குடும்ப நிகழ்வுகளுக்கும் அழைத்துச் செல்ல பெற்றோர் தயங்குவதற்கான காரணம் இதுதான். உறவினர்களின் பரிதாப வெளிப்பாடு, கேள்விகள், முகச்சுளிப்புகள் போன்றவற்றை எதிர்கொள்வதைவிட வீட்டில் அடைந்து கிடப்பதே நல்லது என்று அவர்கள் முடிவெடுத்துவிடுகிறார்கள்.

கற்றல் குறைபாடு உள்ள, மாற்றுத் திறனுள்ள குழந்தைகளுக்குப் பள்ளியின் முக்கிய விழாக்களில், விளையாட்டுக்களில் வாய்ப்பு மறுக்கப்படுவது இன்றும் வாடிக்கை யாக உள்ளது. மாற்றுத்திறனாளி தவறு செய்யும்போது, உடல் குறைகளோடு சேர்த்துப் பழிப்பதோடு, “இப்படி இருக்கும்போதே இந்தச் சேட்டை. இதுல காலு கை மட்டும் சரியா இருந்திருந்தா புடிக்க முடியாது” என நண்பர்களுடன் பேசி எள்ளலாகச் சிரிக்கிறவர்களும் உண்டு. மாற்றுத்திறனாளிகள் மீதான பரிதாபத்தைக் களைவதுடன், அவர்கள் தவறு செய்யவே கூடாது என்கிற கருத்தியலும் முதலில் கட்டுடைக்கப்பட வேண்டும்.

பள்ளியில் விதைக்கப்பட்ட நல்லெண்ணம்

மதுரை பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் நான் 11ஆம் வகுப்பில் சேர்ந்தபோது பார்வைத்திறன் குறைவான மூவர் என் சக மாணவர்களாக இருந்தார்கள். பள்ளியிலிருந்த மாற்றுத்திறன் மாணவர்கள் ஓய்வெடுக்கவும், படிக்கவும் அவர்களுக்கெனத் தனி அறை இருந்தது. தேவைகளை நிறைவேற்றவும், வழிகாட்டவும் பொறுப்பாசிரியர் ஒருவர் இருந்தார். கேள்வி பதில்களை நாங்கள் ஒலிப் பேழையில் பதிவுசெய்து கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கும் கனவுகள் உண்டு, கோபம் வரும், விடலைப் பருவ நகைச்சுவை துணுக்குகளைச் சொல்லிச் சிரிப்பார்கள், கெட்ட வார்த்தைகள் தெரியும் என்பதெல்லாம் வெகு இயல்பாக நாங்கள் அறிந்துகொண்ட காலம் அது. மாற்றுத் திறனாளிகளும் நம்மைப் போன்றவர்கள்தாம் என்கிற எண்ணத்தை எங்களுக்குள் அந்தப் பள்ளி விதைத்தது.

அரசின் முன்னெடுப்பு

மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்த இந்திய அரசு, ‘2030இல் நீடித்த வளர்ச்சி’ எனும் ஐக்கிய நாட்டுச் சபையின் தீர்மானத்தைப் பின்பற்றி, ‘2016-மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட’த்தை இயற்றியுள்ளது. இச்சட்டம், குறைவான வளர்ச்சி, தசைச்சிதைவு நோய், அமிலத் தாக்குலால் உருச்சிதைவுக்கு ஆளாக்கப்பட்டவர்கள், கற்றல் குறைபாடு உடையவர்கள், தண்டுவட மரப்பு நோய், பார்க்கின்சன் நோய், ஹீமோபீலியா, தலசீமியா உள்ளிட்ட 21 விதமான மாற்றுத்திறன் வகைகளை உள்ளடக்கி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கௌரவத்தோடும் பாகுபாடின்றியும் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தலைமைச் செயலக அளவிலும், துறைத் தலைமை அளவிலும் மாற்றுத்திறனாளிகளுக்கெனத் தனித்துறை செயல்படுகிறது.

முடிவில்லா எள்ளல்

ஆனால், மாற்றுத்திறனாளிகளின் கௌரவம் பாதுகாக்கப்படுகிறதா? எத்தனை திரைப்படங் கள் உருவக்கேலி செய்து வந்துள்ளன. கற்றறிந்த நாகரிக மனிதர் என்கிற அடையாளத்தைத் தூர வைத்துவிட்டுத்தானே தணிக்கைத்துறையினர் அத்திரைப்படங்களையெல்லாம் அனுமதிக்கி றார்கள். சமீபத்திய உதாரணம் சந்தானம் நடிப்பில் வெளியான ‘சபாபதி’ திரைப்படம். சந்தானத்தின் முந்தைய படங்களிலும் மாற்றுத்திறனாளிகளை எள்ளலுக்கு உள்ளாக்கும் போக்கு பரவலாக இருந்தது. கல்வி, வேலை, உபகரணங்கள் மட்டுமே மாற்றுத்திறனாளர்களின் தன்மானத்தை உறுதிப்படுத்த போதுமானதா? பணித்தளத்திலும், சமூகக் கூடுகைகளிலும், பொழுதுபோக்கு மையங்களிலும் கிடைக்கும் மதிப்புதானே அவர்களின் கௌரவத்தை உண்மையாக மீட்டெடுக்கும்.

கரோனா காலத்தில் அதிகரித்த துயர்

இணைநோய் உள்ளவர்களுக்கு கரோனா பரவும் சாத்தியம் அதிகமாக இருந்ததால், கரோனா காலத்தில் உலகம் முழுவதுமே மாற்றுத்திறனாளிகள் அளப்பரிய துயரம் அடைந்தார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு வழக்கமான சிகிச்சைகள் கிடைக்கவில்லை. நோயின் தீவிரத்தைக் குறைக்க வழங்கப்படும் மாத்திரைகளை வாங்க முடியவில்லை. கரோனாவுக்கு முன்பு உடையணிய, சக்கர நாற்காலியில் அமர, கழிப்பறை பயன்படுத்த என உடனிருந்து கவனித்துக்கொண்ட உதவியாளர்கள் வருவதை நிறுத்தியதால் தனியாக அனைத்து வேலைகளையும் செய்து தவித்தார்கள். வீடடங்கி இருந்த நாட்களில் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளானார்கள்.

மாற்றுத்திறனாளியான மகனுக்கோ மகளுக்கோ தன் வழியாக கரோனா பரவிடுமோ என்னும் பயத்தில், அரவணைக்கவும் முடியாமல் சமூக இடைவெளியில் அவர்களைத் தள்ளிவைக்கவும் இயலாமல் பெற்றோர் திணறினார்கள். அதைப் புரிந்துகொள்ள முடியாத மாற்றுத்திறனாளியின் துன்பம் மேலும் அதிகரித்தது. கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற மாற்றுத்திறனாளி களுக்கு, அவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான கட்டிலோ, சக்கர நாற்காலியில் சென்று, பயன்படுத்தி, சுகாதாரமாகத் திரும்பு வதற்கான கழிவறையோ இல்லாத சூழல் நிலவியது.

மறுக்கப்படும் அடிப்படைத் தேவைகள்

கரோனா காலத்தில் மட்டுமல்ல, எப்போதுமே இச்சமூகத்தில் வாழ்வதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமான வசதிகள் இல்லை என்பதே உண்மை. பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து விழிப்புணர்வு பெறவும், அவர்களுக்குரிய மரியாதையை வழங்கவும் நாம் நிறையவே புரிந்துகொள்ளவும் பக்குவப்படவும் வேண்டி யுள்ளது. நாம் அனைவரும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஏதோ சில குறைகளுடன்தான் வாழ்கிறோம். எனவே, இந்த உலகில் வாழத் தகுதியில்லை எனப் பிறர் நம்மிடம் சொல்வதற்குள் எல்லாருக்குமான உலகமாக இதை மாற்ற முனைவோம்.

கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்

தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

மாற்றுத்திறனாளிகள்Physically challenged

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

kollywood-junction

கோலிவுட் ஜங்ஷன்

இணைப்பிதழ்கள்

More From this Author

x