

எனக்கு வயது 52. இடது கால் முட்டிக்கு மேல் வீக்கம் உள்ளது. நீட்டவும் மடக்கவும் முடியவில்லை. நீர்கோத்து வலிக்கிறது. நீரை ஊசியின் மூலம் எடுத்துவிட்டால், மறுபடியும் நீர்கோக்குமா? என்ன செய்தால் நோய் தீரும்?
- எஸ். சங்கரநாராயணன், சென்னை - 78
இந்தக் கேள்விக்குப் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் பதிலளிக்கிறார்:
மூட்டு வலி வருவதற்குப் பொதுவான காரணங்கள்: உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவது, தெரிந்தோ, தெரியாமலோ அடிபடுவது, தொற்றுநோய்க் கிருமிகளால், வைரஸ் கிருமி தாக்குதவது, நாளமில்லா சுரப்பிகளின் வேறுபாடுகளால், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துகள் குறைவால், அதிகக் குளிர்ச்சியால், இதயக் கோளாறு, அதிகக் கொழுப்பு, அதிக ரத்தக் கொதிப்பு, தீவிரச் சர்க்கரை நோய் பாதிப்பு, பரம்பரையாகவும், வயது முதிர்வு, தீராத மலக்கட்டு போன்றவற்றால் எலும்பு மூட்டு தேய்தல், வலி, வீக்கம், நீர்கோத்தல் போன்றவை ஏற்படலாம்.
மூட்டு வலிகளை வீக்கத்துடன்கூடிய மூட்டு வலிகள், வீக்கம் இல்லாத மூட்டு வலிகள், இணைப்புத் தசை மூட்டு வலிகள் என இதை மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள்.
வீக்கத்துடன் கூடிய மூட்டு வலிகளுக்கு உதாரணம் ருமாட்டிக் ஆர்த்ரட்டிஸ், ருமட்டாய்டு ஆர்த்ரடிஸ், சைனோவைட்டிஸ், ஆன்கியோலைசிங் ஸ்பான்டைலைடிஸ், கௌட் போன்றவற்றைக் கூறலாம்.
இணைப்புத் தசை தாபித மூட்டு வலிகளுக்கு லூபஸ் ஸ்கிளிரோசிஸ் (நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவை) காரணமாகக் கூறலாம்.
உங்களுக்கு ஏற்பட்டிருப்பது வீக்கத்துடன் கூடிய சைனோவைட்டிஸ் மூட்டு வலி. இதில் நீர்கோத்து வீங்கி வேதனையை உண்டு பண்ணும். இதற்குத் திரிகடுகு சூரணம், அமுக்கரா சூரணம், நிலவேம்பு குடிநீர் சூரணம், ரசம், கந்தகம், காக்தம், இரும்பு, இந்துப்பு, வெங்காரம் சேர்ந்த உலோக, உபரச பாடாண வகை மருந்துகள், எண்ணற்ற பேடண்ட் வகை மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. உள் மருந்து, வெளிப்பூச்சு மருந்து, ஒத்தடம், பற்று போன்ற சிகிச்சைகள் மூலம் இந்நோயைத் தீர்க்கமுடியும்.