

எனக்குத் தெரிந்த ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் கர்ப்பம் தரித்திருந்தார். அதிக உடல் எடைகொண்ட அவருக்கு, கர்ப்ப காலத்தில் உடல் எடை மேலும் அதிகரித்தது. 25ஆம் வாரம் ஸ்கேன் செய்து பார்த்தபோது, குழந்தை பெரிதாக (Big Baby) இருப்பது கண்டறியப்பட்டது. நீரிழிவு நோய்க்கான ரத்தப் பரிசோதனை செய்தபோது, சர்க்கரையின் அளவு லேசாகக் கூடியிருந்தது. மருத்துவர் ஒருவரிடம் அவர் ஆலோசனை பெற்றார். ரத்தப் பரிசோதனை அறிக்கையைப் பார்த்த அவர் “இலேசான கர்ப்ப கால நீரிழிவு (Mild GDM) பாதிப்புதான். பயப்படத் தேவையில்லை. உணவு, உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்திவிடலாம்” என்றார்.
நான்கு கிலோ எடையுடன் பிறந்த அந்தக் குழந் தைக்கு இன்று எட்டு வயது. அந்தக் குழந்தை அதிக உடல் எடையுடன், கொழுப்பு நிறைந்த சக்கை உணவை விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கிறது. ’கர்ப்பகால நீரிழிவு’ குறித்தும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் போதிய புரிதல் இருந்திருந்தால், அந்தக் குழந்தை மாறுபட்டு இருந்திருக்கலாம். அதே நேரம் அவருடைய இரண்டாம் குழந்தை சரியான உடல் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. காரணம், இரண்டாம் முறை கர்ப்பம் தரிப்பதற்கு முன்னரே உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் உடல் எடையைக் குறைத்த அவர், கருவுற்றபோது முன்னெச்சரிக்கையுடன் இருந்து உரியச் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார்.
கர்ப்பகால நீரிழிவு என்பது என்ன?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும் இன்சுலினைக் கணையத்திலிருக்கும் பீட்டா செல்கள் உற்பத்தி செய்கின்றன. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளால், உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலை ஏற்படுகிறது. இந்த எதிர்ப்பை மீறி ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்காக பீட்டா செல்கள் வழக்கத்தைவிடக் கூடுதலாக 2-3 மடங்கு இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. இந்தக் கூடுதல் உற்பத்தியால், பீட்டா செல்களுக்கு ஏற்படும் அழுத்தம் அவற்றைச் சோர்வடைய வைக்கிறது. இன்சுலின் சுரப்பதில் குறைபாட்டை உண்டாக்குகிறது. இந்தக் குறைபாட்டினால் ஏற்படும் சர்க்கரை அளவின் அதிகரிப்பே கர்ப்பகால நீரிழிவு.
நீரிழிவு நோயும் உடல்பருமனும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். அதிக உடல் எடை கொண்டவர் களுக்குக் குறிப்பாக வயிற்றுப்பகுதியில் அதிக கொழுப்பு (தொப்பை) கொண்டவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் சாத்தியம் அதிகம். அதிக உடல் எடைகொண்டவர்களின் உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலை எப்போதும் இருக்கும். இந்த எதிர்ப்பு நிலையின் அளவு கர்ப்பகாலத்தில் மேலும் அதிகரிக்கும். பொதுவாக பி.எம்.ஐ. 25 mg/m² என்கிற அளவுக்கு மேல் உள்ள பெண்களுக்கே இது ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பு கருத்தரித்து 20 வாரங்களுக்குப் பிறகே பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆரோக்கியமான கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சர்க்கரை அளவு வழக்கத்தைவிட சற்றே குறைவாக இருக்கும் (வெறும் வயிற்றில் குளுக்கோஸ் - 72 mg/dL, உணவு சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப் பிறகு குளுக்கோஸ் - 97 mg/dL) என்பது ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்படுள்ளது. இதை இங்கே கவனத்தில்கொள்ள வேண்டும்.
தாய்க்கு ஏற்படும் பாதிப்புகள்
கர்ப்பகால உயர் ரத்தஅழுத்தம், பனிக்குட நீர் அதிகரிப்பு, எடை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். பிரசவத்தின்போது: குறைப்பிரசவம், பிறப்புவழியில் சிதைவுகள், பிறப்புறுப்பு சிதைவு, பிரசவத்தில் சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
நீண்ட கால ஆபத்து: பிரசவத்திற்குப் பின் எடை அதிகரிப்பு, டைப்-2 நீரிழிவு, இதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படலாம்
குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள்
அதிக உடல் எடை (பிக் பேபி), பிறந்த குழந்தைகளில் ரத்தச் சர்க்கரைக் குறைவு, மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு, ரத்தச்சிவப்பணு மிகுதல், இதயத் தசைநோய், கால்சியம் குறைபாடு போன்றவை ஏற்படலாம். இது போன்ற குழந்தைகள் பிறந்தவுடன் சிறப்பு பராமரிப்புப் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டும். சில வேளை கருவிலேயே மரணமோ பிறவிக் கோளாறுகளோ நிகழலாம்.
கருவின் மூளையில் ஏற்படும் பாதிப்புகள்:
மரபணுக்களில் ஏற்படும் செயல்பாட்டு மாற்றங்கள் (Epigenetics), பசி, ருசி, உணவு போதும் என்கிற உணர்வு ஆகியவற்றை உருவாக்கும் மூளையின் ஹைபோதாலமிக் கட்டுப்பாட்டை மாற்றியமைக்கின்றன. இதன் காரணமாக ஏற்படும் அசாதாரணப் பசி, போதாமை உணர்வு, அதிக கொழுப்புள்ள உணவின் மீது விருப்பம் போன்றவை குழந்தையின் உடல் எடையை அபரிமிதமாக அதிகரிக்கும்.
கர்ப்பகால நீரிழிவுக்கான சிகிச்சை
l அதிக எடை, பிரசவ சிக்கல்கள் ஆகிய வற்றைத் தடுப்பதே கர்ப்பகால நீரிழிவுக்கான சிகிச்சையின் முதன்மை நோக்கம். உணவு முறையில் மாற்றம், உடற்பயிற்சி, மருந்து போன்றவை இதனை அடைய உதவும்.
l மூன்று வேளை மிதமான அளவிலான உணவு நல்லது.
l முழு தானிய கார்போஹைட்ரேட், காய்கறி கள், பழங்கள், புரதம், செறிவூட்டப்படாத கொழுப்பு ஆகியவை சமச்சீரான அளவில் அடங்கிய 2 முதல் 3 சிற்றுண்டிகளை உட்கொள்வது நல்லது.
l இனிப்பு பானங்கள், பழச்சாறுகள், துரித உணவு / சக்கை உணவு, வறுத்த உணவு, சுத்திகரிக்கப்பட்ட தானிய பொருட்கள், இனிப்பு ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
l உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு மருத்துவரின் ஆலோசனை பெற்றுச் சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்
உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு (1-2 வாரங்கள்) பிறகும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருந்தால், தினசரி குளுக்கோஸ் சோதனையைத் தொடர வேண்டும். இன்சுலின் சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். சிலருக்கு ஆரம்பத்திலிருந்தே இன்சுலின் வழங்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படலாம். பிரசவிக்கும்வரை வெறும் வயிற்றில், மூன்று வேளை உணவுக்குப் பின்னர் எனத் தினமும் நான்கு முறை சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியம்.
பிரசவத்துக்குப் பின்
உணவு முறையில் மாற்றம், உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைத் தொடர வேண்டும்; தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும்; டைப்-2 நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகளைத் தொடர வேண்டும்.
பொறுப்பை உணர்வோம்
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயே, உலகெங்கும் நிகழும் உடல் எடை அதிகரிப்புக்கும் நீரிழிவு நோய்ப் பாதிப்புக் கும் முக்கியக் காரணியாக இருக்கிறது. எனவே, கருவுறுவதற்கு முன்னரே நீரிழிவு நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்வது, ஒருவேளை நீரிழிவு நோய் இருந்தால் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி செய்து உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை அடைவது போன்றவை அவசியம். அது நம் குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தை உறுதிசெய்யும். நீரிழிவு பாதிப்பிலிருந்தும் குழந்தையைப் பாதுகாக்க உதவும்.
கட்டுரையாளர், மருத்துவர், நாளமில்லா சுரப்பியியல் நிபுணர், நீரிழிவு சிறப்புச் சிகிச்சை நிபுணர். தொடர்புக்கு: sivaprakash.endo@gmail.com