பசுமை தீபாவளி: பட்டாசு வெடிகளிலிருந்து கண்களைப் பாதுகாப்போம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி கொண்டாட்டங்களின்போது விபத்துகள் ஏற்படுவதும், அதன் காரணமாகத் தீக்காயங்கள், பார்வையிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடந்துவருகின்றன. கவனக்குறைவாகப் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அத்தகைய விபத்துகளில், வெடிப்பவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். காயம் ஏற்படுபவர்களில் நாற்பது சதவீதத்துக்கு அதிகமாக அதாவது ஐந்து பேரில் இருவருக்குக் கண்களில் காயம் ஏற்படுவதால் பார்வை பாதிப்பு ஏற்படுகிறது.

சிறு பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள் கண்ணின் மேல்பகுதியிலோ இமைகளிலோ சிறு காயங்களை ஏற்படுத்துகின்றன. ராக்கெட், அணுகுண்டு போன்ற பெரிய வெடிகளால் ஏற்படும் விபத்துகள் கண்ணின் கருவிழியில் தீக்காயத்தையோ (corneal Burns-Thermochemical injury), கண் விழி கிழிதலையோ (Rupture Globe), விழித்திரை பிரிதலையோ (Retinal Detachment), கண் நரம்பு பாதிப்பையோ (Optic nerve Injury) உண்டாக்கிப் பார்வை இழப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ராக்கெட் போன்ற வானத்தில் சென்று வெடிக்கும் வெடிகளைக் கண்ணாடி பாட்டிலிலோ தகர பாட்டிலிலோ வைத்து வெடிக்கும்போது, வெடியுடன் சேர்ந்து வெடித்துச் சிதறும் கண்ணாடி பாட்டில் அல்லது இரும்பு பாட்டில் துண்டுகள் நம் கண்களைத் தாக்கி கண் விழி கிழிதல் (Rupture Globe) பாதிப்பை உண்டாக்கலாம். இதனால், ஒரு கண்ணை இழந்தவர்கள் அதிகம். குறிப்பாக எட்டு வயது முதல் பதினாறு வயதுக் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

போதுமான விழிப்புணர்வுடன் பாதுகாப்பாகத் தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் பார்வை இழப்பைத் தடுக்க முடியும். ஒருவேளை விபத்து நிகழ்ந்துவிட்டால் முதல் உதவி, தாமதமில்லா முறையான சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பார்வை இழப்பையும் தடுக்க முடியும்.

தடுக்கும் வழிகள்

1. பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் இடங்களான சமையல் அறையிலோ பூஜை அறையிலோ வைக்கக் கூடாது.
2. குழந்தைகள் பெற்றோரின் உதவியுடன் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
3. பட்டாசுக்கும் நமக்கும் ஒரு கை நீளம் இடைவெளி இருக்க வேண்டும் .
4. பட்டாசு விபத்தினால் ஏற்படும் தீயை அணைப்பதற்கு எப்போதும் அருகில் ஒரு முழு பக்கெட் தண்ணீரை வைத்திருக்க வேண்டும்.
5. ராக்கெட் போன்ற வானத்தில் சென்று வெடிக்கும் வெடிகளைக் கண்ணாடி பாட்டில் அல்லது தகர பாட்டிலில் வைத்து வெடிக்கக் கூடாது.
6. ராக்கெட், அணுகுண்டு போன்ற பட்டாசுகளைக் குழந்தைகளுக்கு வாங்கித் தருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
7. பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்புக் கண்ணாடி, அதாவது பாலிகார்பனேட்டால் (POLYCARBONATE) ஆன உடையாத கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.
8. வெடிக்காத பட்டாசுகளைத் தொடக் கூடாது. மீண்டும் வெடிக்க வைக்க முயலக் கூடாது. அவற்றைத் தண்ணீர் ஊற்றி நனைத்துவிட வேண்டும்.
9. சாலைகள், தெருக்கள் போன்ற குடியிருப்பு நிறைந்த பகுதிகளைத் தவிர்த்துத் திறந்த வெளியில் வெடிப்பது நன்று.

பட்டாசு வெடித்து கண்ணில் அடிபட்டால் முதலில் செய்ய வேண்டியது என்ன?

1. கண்ணைத் தேய்க்கக் கூடாது
2. கண்ணை அழுத்தக் கூடாது
3. உடனடியாகக் கண்ணிலும் உடலிலும் உள்ள அனைத்துத் தீக்காயப் பகுதிகளையும் சுத்தமான குடிநீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.
4. நேரம் தாமதமில்லாமல் அருகில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று கண் மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டும். இதனால், கண் உள்ளிட்ட உடல் பகுதிகளில் வெப்பம், வேதிப்பொருள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பு (THERMAL AND CHEMICAL INJURY) குறைக்கப்படும்.
5. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவை அணுகலாம்.
6. அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கலாம்.
7. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் காயத்தின் மேல் ஊற்றக் கூடாது.
8. மருத்துவரை அணுகாமல் மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி ஊற்றி விட்டு, கிருமி பாதிப்பு அதிகமான நிலையில் மருத்துவரின் உதவியை நாடினால், சிகிச்சைப் பலனின்றி பார்வையிழப்பு ஏற்படக்கூடும்.

குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது?

குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது அவர்கள் பட்டாசைத் தொட்டுவிட்டுக் கண்ணைத் தேய்த்தால், அதில் உள்ள வெடிமருந்து கண்ணில் பட்டு கண் உறுத்தல் ஏற்படும். அப்படி உறுத்தல் ஏற்பட்டால் சுத்தமான குடிநீரால் கழுவலாம். இதைத் தவிர்க்கப் பட்டாசு வெடித்து முடித்தவுடன் குழந்தைகளைக் கை கழுவ அறிவுறுத்த வேண்டும்.

மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்ற புகை வரக்கூடிய பட்டாசிலிருந்து வரும் புகை கண்களை பாதிக்கும். இதனால், கண்ணாடி அணிந்துகொள்வது நல்லது.

பசுமை தீபாவளி

பட்டாசில் உள்ள வெடி மருந்துப் பொருள்கள் உண்டாக்கும் புகை சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும். முதியோர்கள், கர்ப்பிணிகள் ,குழந்தைகள், ஆஸதுமா தொந்தரவு உள்ளவர்கள் ஆகியோருக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். அதில் உள்ள பாஸ்பரஸ், நைட்ரேட் போன்றவை கண்களை பாதிக்கும். அதில் உள்ள காரீயம் மூளை பதிப்பையும், தாமிரம், கந்தகம் ஆகியவை சுவாசப் பதிப்பையும் காட்மியம் சிறுநீரகப் பதிப்பையும் ஏற்படுத்தும்.

மனித குலத்துக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு உடல்நலக் கேட்டையும் பார்வையிழப்பையும் ஏற்படுத்தும் பட்டாசுப் பொருட்களைத் தவிர்த்து, காயம் இல்லாத பசுமை தீபாவளியைக் கொண்டாடுவது நமக்கும். சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அது முடியாது என்றால், குறைந்தபட்சம், தீபாவளி திருநாளைத் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாகக் கொண்டாடுவது, நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்கும். பார்வையிழப்பையும் தவிர்க்கும்.

கட்டுரையாளர்: மருத்துவர் பெ.ரங்கநாதன்,

கண் மருத்துவ நிபுணர்.
தொடர்புக்கு: drranganathansocial@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in