பக்கவாத நோயைக் கட்டுக்குள் வைக்க சபதம் ஏற்போம்!

பிரதிநிதித்துவப்படம்.
பிரதிநிதித்துவப்படம்.
Updated on
3 min read

உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினம்

உலகம் முழுவதும் பக்கவாத நோய் விழிப்புணர்வு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பக்கவாத நோய் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் பக்கவாத நோயைப் பற்றிய பல்வேறு உண்மைகளை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக மிக அவசியமாகும்.

பக்கவாதம் என்றால் நம் உடலில் உள்ள ஒரு பாதி முகம், கால், கை செயல் இழந்து போதல். இந்த நிலை எப்படி வருகிறது என்றால் நம் மூளையின் ஒரு பாதிக்கோ அல்லது ஒரு பகுதிக்கோ ரத்த ஓட்டம் தடைப்பட்டால் அல்லது அந்தப் பகுதி மூளை அதன் செயலாற்றலை இழந்துவிடும். அதனால் கை, கால்கள் செயல் இழந்து நோயாளி படுத்த படுக்கையாகிவிடுவார்.

சிலருக்குப் பேசும் திறன் அற்றுப்போகும். ஆதலால் இந்த நோயை ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் மூளையைக் காப்பாற்றி நோயாளியை நிரந்தர ஊனத்திலிருந்து காப்பாற்றலாம்.

பக்கவாத நோய், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் அடைப்புகள் ஏற்பட்டாலும், அல்லது ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தப்போக்கு ஏற்பட்டாலும் இதயம் சரியாக வேலை செய்யாமையாலும், மற்றும் மூளையில் இருந்து வடியும் கெட்ட ரத்தம் அடைபட்டுப் போனாலும், மூளை அதன் இயல்பான ரத்த ஊற்றை இழந்து மூளை செல்கள் செயலற்று அல்லது செத்து விடுகின்றன. அதனால் பக்கவாதம் ஏற்படுகின்றது. பெரும்பாலும் ரத்தக் குழாய்கள் அடைப்புகளினால்தான் பக்கவாதம் வருகின்றது.

இந்த நோயை நாம் ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்து அந்த ரத்த நாள அடைப்பை அகற்றினால் மூளையை முற்றிலுமாக அழிவில் இருந்து காப்பாற்றிவிடலாம்.

<strong>டாக்டர் ஆர்.எம்.பூபதி</strong>
டாக்டர் ஆர்.எம்.பூபதி

ஆரம்பக்கட்டப் பக்கவாத (stroke)அறிகுறிகள் என்னென்ன? பேச்சு குழறுதல், ஒரு பாதி முகம் செயல் அற்றுப் போதல், கையின் பிடிப்பு ஆற்றல் குறைதல், நடக்கும்போது இடறுதல், ஒரு பாதி உடல் மரத்துப் போதல், திடீரென்று ஒரு கண்ணில் பார்வை குறைதல், மயக்கம் மற்றும் இரட்டை இரட்டையாகப் பொருள்கள் தெரிதல், நடக்கும்போது தள்ளாட்டம் வருதல் ஆகியனவாகும்.

ஆகவே, இந்த அறிகுறிகளை அனைவரும் அறிய வேண்டும். இது மாதிரியான அறிகுறிகள் தென்பட்ட உடன் நீங்கள் உடனே பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு (Emergency) பகுதிக்குச் சென்று மருத்துவரை அணுகினால் உடனேயே தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளியை ஆபத்திலிருந்து காப்பாற்றி விடுவார்கள். மாறாக வேறு எங்கு சென்றாலும் காலம் தாழ்ந்து மூளையின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிரந்தரமாக செல்கள் இறந்துவிடும்; பிறகு நோயாளி நிரந்தர ஊனத்தை அடைந்து சிரமத்திற்கு ஆளாவார்.

(Stroke) பக்கவாத நோய் ஆரம்பித்த உடனே மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. அந்த நேரத்தில் இருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று மணிகள் பொன்னான நேரம் (Golden period) என்று அழைக்கிறார்கள். இந்தக் காலத்திற்குள் நீங்கள் அரசு மருத்துவமனைகளை அணுகினால் த்ராம்போலைசிஸ் (Strokre Thrombolysis) செய்யப்படுகிறது. ஆக்டிலைஸ் (Actilyise) என்ற மருந்தை ரத்த நாளத்தில் செலுத்தி ரத்தக் கட்டி அடைப்பை அகற்றுவார்கள். முடியாமல் போனால் ரத்தக்குழாய்கள் உள்ள சிறுகுழாய்களை அனுப்பி ரத்த அடைப்பை அகற்றி விடுகின்றனர்.

மேற்சொன்ன பக்கவாதம் ஏற்பட்ட உடன் காலம் தாழ்த்தாமல் மூளையைக் காப்பாற்றி பேரழிவில் இருந்து நோயாளிகளைக் காப்பாற்றும் முறைகளாகும்.

பக்கவாத நோய் எப்படி வருகிறது என்பதை விரிவாகப் பார்த்தோம். இந்த நோய்க்கு என்ன காரணிகள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

1) அதிக ரத்த அழுத்தம்
2) சர்க்கரை வியாதி
3) இதயக் கோளாறுகள்
4) ரத்தத்தில் அதிகமான கொழுப்பு (கெட்ட)
5) ஒவ்வாமை நோய்கள்
6) ரத்த அணுக்களில் ஏற்படும் மாற்றங்கள்
7) தொற்று நோய்கள் (காசநோய் (TB), பாக்டீரியா பங்கஸ், கோவிட் தொற்று ) வயதாகுதல்
9) மது அருந்துதல்
10) புகைப்பிடித்தல்
11) போதை மருந்துகளைப் பயன்படுத்துதல் ஆகும்.

உலகிலேயே அதிகமான பக்கவாத நோய் உள்ளவர்கள் பட்டியலில் நாமும் உள்ளோம். நாம் அதை உடனடியாகக் குறைக்க வேண்டும்.

கடந்த மூன்று மாதங்களில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையில் ஐந்து நோயாளர்கள் பக்கவாதம் வந்து 'கோல்டன் பீரியட்' என்ற தருணத்தில் வந்து திராம்போலைசிஸ் செய்து முற்றிலும் குணமடைந்து சென்றுள்ளனர்.

ஆனால், இது மிகவும் குறைவான விழுக்காடு. பக்கவாதம் வந்து ஊனத்துடன் வருபவர்களின் விழுக்காடு 90க்குமேல். இது சரியான ஒரு சிகிச்சை வளர்ச்சி இல்லை. இது மேலும் மேலும் உயர வேண்டும்.நம்மிடம் மருந்து இருக்கிறது. மருத்துவர்கள் இருக்கிறார்கள். மருத்துவமனையில் வசதி இருக்கிறது.

துரிதமாக ரத்தப் பரிசோதனை, மருத்துவர் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை நடத்தப்படுகிறது. அடுத்த 30 நிமிடத்தில் Actilyse மருந்து செலுத்தப்பட்டு மூளையில் ரத்த ஓட்டம் சரிசெய்யப்படுகிறது. ஆகவே இது ஏன் இன்னும் சாத்தியப்படவில்லை?

ஏனென்றால், மக்களுடைய புரிதலின்மை. குடும்ப மருத்துவர்கள் குறித்த நேரத்தில் நோயாளர்களை ஸ்ட்ரோக் சென்டருக்கு அனுப்பாமை, பக்கவாதம் சரியாக கண்டறியப்படாமல் போதல், நாட்டு மருந்து எடுத்துக்கொள்ளுதல், ஸ்கேன் செய்யும் இடத்தில் அதிக நேரம் கழித்தல், நாள் கடந்து, நேரம் கடந்து மருத்துவரை அணுகுதல் ஆகியவற்றால்தான் நாம் இன்னமும் ஸ்ட்ரோக் திராம்போலைசிஸில் பின்தங்கி இருக்கிறோம்.

ஆகவே இந்த நிலை மாற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அசுர வேகத்தில் இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆகவே பொதுமக்களும், மருத்துவ உடன் பிறப்புகளும், கூடி உழைத்து பக்கவாத நோயைக் கட்டுக்குள் வைத்து ஊனமில்லா சமுதாயத்தை உருவாக்க இந்நாளில் எல்லோரும் சபதமேற்போம்.

கட்டுரையாசிரயர்: டாக்டர் ஆர்.எம். பூபதி,

துறைத் தலைவர், நரம்பியல் சிகிச்சைப் பிரிவு,

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை.

சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in