காக்க காக்க இதயம் காக்க!

காக்க காக்க இதயம் காக்க!
Updated on
2 min read

செப்டம்பர் 29: உலக இதய தினம்

உடலின் சில உறுப்புகள் இல்லாமல் நாம் வாழ்ந்துவிடமுடியும். ஆனால், இதயம் இல்லாமல் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழ இதயமே இன்றியமையாதது. மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் இதயம்தான் பாதுகாக்கிறது. நம்முடைய ஆரோக்கியமான வாழ்வுக்கு இதயத்தின் ஆரோக்கியமே அடிப்படை. இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இதய நோய் பாதிப்புகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மற்ற நாடுகளைவிட நம் நாட்டில்தான் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆபத்தை கரோனா பெருந்தொற்று மேலும் அதிகரித்து இருக்கிறது.

கரோனா பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் இதயம் சார்ந்த ஒரு அறிகுறியையாவது எதிர்கொள்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த பிறகும்கூட சிலருக்கு மூச்சுத்திணறல், இதயம் வேகமாகத் துடித்தல், நெஞ்சுவலி, கை கால்களில் வலி, சோர்வு எனப் பிரச்சினைகள் தொடர்கின்றன.

<strong>டாக்டர் ஜோதிர்மயா தாஷ்</strong>
டாக்டர் ஜோதிர்மயா தாஷ்

கரோனா நோயால் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள், மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள், நோய் பற்றிய அதீத கவலை போன்ற காரணங்களால் இதயத்துடிப்பு அதிகரிக்கின்றது. கரோனா குறித்த அச்சம் ஏற்படுத்தும் எதிர்மறை சிந்தனைகள், வேலையிழப்பு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் இழப்பு போன்ற காரணங்களால் ஏற்படும் மனச்சோர்வு இதயத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. கரோனா தொற்றால் ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடுகளுக்கும் இதய நோய்கள் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இதய பாதுகாப்பைப் பொறுத்தவரை, நோய் வந்தபின் அதற்கு சிகிச்சை எடுப்பதைவிட முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது பெரிய பாதிப்புகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும். 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், நாற்பது வயதைத் தாண்டியவர்கள் ஆண்டுதோறும் இதய பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. இதயத்தைப் பாதுகாக்க நடைப்பயிற்சி, கார்டியோ உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் உதவும். நாம் உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது இதய பாதிப்பைத் தவிர்க்க உதவும்.

ஒருவருக்கு திடீரென மூச்சுத்திணறலோ, சுவாசிப்பதில் ஏதேனும் பிரச்சினைகளோ ஏற்பட்டால் அவர்களுக்கு அவசியம் மருத்துவ உதவி தேவைப்படும். இதைக் கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தால் அடுத்துவரும் நாட்களில் மோசமான பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சிய மனோபாவத்துடன் இருந்தால் அது பேராபத்தில் முடியும் என்பதை அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும். இதயத்தின்மீது கவனம் செலுத்தவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.

கட்டுரையாளர்: டாக்டர் ஜோதிர்மயா தாஷ்,

மூத்த இதயவியல் நிபுணர்,

வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in