Last Updated : 18 Sep, 2021 03:11 AM

 

Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

‘நெற்றிக்கண்’ இழைத்த குற்றம்

அண்மையில் வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் பார்வையிழப்பும், பார்வையைத் திரும்பப் பெறுதலும் படத்தின் திருப்பு முனைகளாக வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து நண்பர்கள் சுட்டிக்காட்டியதால், படத்தைப் பார்த்தேன். தேசிய கண்தான இரு வார விழா (ஆகஸ்ட் 25 – செப்டம்பர் 8) கடைப்பிடிக்கப்பட்ட சூழலில் இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சிகள் பற்றிய தெளிவுபடுத்துதல் அவசியமாக இருக்கிறது.

கதைப்படி துர்கா (நயன்தாரா), சி.பி.ஐ. அதிகாரி. விபத்தொன்றில் இரு கண்களிலும் பார்வையை இழந்துவிடுகிறார். படத்தின் தொடக்கத்தில் இழந்த பார்வையைப் படத்தின் இறுதியில் கண்தானம் மூலம் பெறுகிறார். இறந்துபோன காவலர் மணிகண்டனின் கண்கள் பொருத்தப்பட்டு அவர் பார்வை பெறுவதாகப் படம் முடிகிறது. இது சாத்தியம்தானா? கண்தானம் குறித்து இந்தப் படம் உணர்த்தும் சேதி சரியானதா?

யாருக்குப் பார்வை கொடுக்கலாம்?

கண்தானம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால் சில அடிப்படை செய்திகளைத் தெரிந்துகொள்வது நல்லது. பார்வை இல்லாதவர்களை நாள்தோறும் பல இடங்களில் பார்க்கிறோம். பார்வையிழப்புக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பார்வை நரம்பு பாதிப்பு அடைந்தாலோ, கண்நீர் அழுத்த உயர்வுக்கு முறையாகச் சிகிச்சைபெற்று அழுத்தத்தைக் கட்டுப்படுத்தத் தவறினாலோ, விழித்திரை பிரிவதாலோ பார்வையிழப்பு ஏற்படலாம். சர்க்கரை நோய் போன்ற பிரச்சினையால் விழித்திரை பாதிக்கப்பட்டும் பார்வையிழப்பு ஏற்படலாம். கண்புரைக்கு உரிய நேரத்தில் அறுவைசிகிச்சை செய்யாவிட்டால் புரை முற்றி பார்வையை இழக்கலாம். மேலும் கருவிழி (Cornea) பாதிக்கப்பட்டாலும் பார்வை பாதிக்கப்படலாம். இவை எல்லாமே பார்வையிழப்புதான்.

இங்கே குறிப்பிட்ட அனைத்து வகையான பார்வையிழப்புகளுக்கும் கண்தானம் மூலம் பார்வையை மீட்டெடுத்துவிட முடியாது. பிறகு யாருக்குக் கொடுக்க முடியும்? கருவிழியால் ஏற்படும் பார்வையிழப்புக்கு (Corneal Blindness) மட்டுமே கண் தானம் மூலம் பார்வை கொடுக்க முடியும். மேலும் முழுக்கண்ணையும் கண்தானத்தில் பயன்படுத்துவது இல்லை. முழுக்கண்ணையும் அப்படி மாற்றவும் முடியாது. இந்த இரண்டு செய்திகளையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

எந்த பாதிப்புக்குத் தீர்வு?

ஒரு சிறிய எடுத்துக்காட்டின் மூலம் இதை எளிதில் புரிந்துகொள்ளலாம். கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கக் கடிகாரத்தில் உள்ள இயந்திரமும் கடிகாரத்தின் மேல் உள்ள கண்ணாடியும் (Watch Glass) நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகார இயந்திரம் நல்ல நிலையிலிருந்து, கடிகாரத்தின் மேல் இருக்கும் கண்ணாடி கீறல் விழுந்துபோய் (Scratch) கண்ணாடி வழியாக நேரத்தைப் பார்க்க முடியாத அளவுக்குத் தெளிவில்லாமல் இருந்தால் என்ன செய்வோம்? தேய்ந்துபோன கண்ணாடியை மட்டும் மாற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய கண்ணாடியைப் பொருத்தி நேரத்தைப் பார்ப்போம் இல்லையா! கண் தானத்திலும் அப்படித்தான் நடைபெறுகிறது.

கண்ணில் பிம்பம் எப்படி விழித்திரையில் விழுகிறது என்பது தெரிந்துகொண்டால் இது எளிதில் விளங்கும். ஒரு பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கருவிழியை ஊடுருவி லென்சு வழியாகச் சென்று விழித்திரையில் (Retina) பிம்பம் விழுகிறது. இப்படி பிம்பம் தெளிவாக விழுந்து நாம் பார்ப்பதற்கு, கண்ணின் கருவிழி, லென்சு, விழித்திரை அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும். சில நேரம் கண்ணில் ஏற்படும் காயங்களினாலோ, சில வகை நோய்கள் காரணமாகவோ ஒளி ஊடுருவும் தன்மையைக் கருவிழி இழந்துவிடலாம். அப்போது கண்ணின் பிற பகுதிகள் நல்ல நிலையிலிருக்கும் போதிலும் ஒளி ஊடுருவும் தன்மையைக் கருவிழி இழந்துபோவதால் கண்ணுக்குள் ஒளி செல்ல முடியாமல் பார்வை பாதிக்கப்படுகிறது. இங்கேதான் கண் தானம் பயன்படுகிறது.

எப்படிக் கைக்கடிகாரத்தின் மேல் தேய்ந்து போன கண்ணாடியை மாற்றுகிறோமோ, அதே போன்று ஒளி ஊடுருவும் தன்மையை இழந்த கருவிழியை அகற்றிவிட்டு, இறந்தவரிடம் இருந்து கண்தானம் மூலம் பெற்ற கண்ணின் கருவிழியை அறுவை சிகிச்சை (Corneal Transplantation) மூலம் அந்த இடத்தில் பொருத்திப் பார்வை கொடுக்கிறார்கள். கருவிழி பார்வையிழப்பில் ஒளி ஊடுருவும் தன்மையை இழந்த கருவிழி சற்று வெள்ளையாக இருக்கும். பூ விழுந்தது என்று சொல்வோம். ஆனால், நெற்றிக்கண் படத்தில் விபத்துக்குப் பின் நயன்தாராவின் கண்ணின் கருவிழி நல்ல நிலையில் இருப்பதுபோலவே படம் முழுக்க காட்டப்பட்டுள்ளது. மேலும், கண்தானக் கொள்கைப்படி தானமாகக் கிடைக்கும் கண்கள் யாருக்குப் பொருத்தப்படுகிறது என்பது சொல்லப்படுவதில்லை. ஆனால், படத்தில் அதுவும் மீறப்பட்டுள்ளது. சரியான தகவலைத் தெரிவிக்காவிட்டாலும் தவறான தகவலை சினிமா போன்ற சக்திவாய்ந்த ஊட கத்தில் கொண்டு செல்லக்கூடாது அல்லவா.

கண்தானம் பற்றி சில செய்திகள்

கண்தானம் செய்வதற்கு முன்னரே பதிவு செய்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒருவர் இறந்தவுடன் அவரது நெருங்கிய உறவினர் களோ நண்பர்களோ சம்மதித்தால் போதுமானது. கண்களை எடுத்துப் பயன்படுத்த முடியும்.

ஒருவர் இறந்தவுடன் ஆறு மணி நேரத்துக்குள் கண்களை உடலிலிருந்து அகற்ற வேண்டு மாதலால், இறந்தவுடன் அருகில் உள்ள கண்வங்கிக்குத் தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இறந்தவரின் கண்களை மூடி, மூடிய இமையின்மேல் ஈரப்பஞ்சினை வைக்கலாம். சடலம் வைக்கப்பட்டிருக்கும் அறையின் மின்விசிறியை நிறுத்திவிட வேண்டும்.

கண்வங்கியிலிருந்து மருத்துவர் வீட்டுக்கே வந்து கண்களை எடுத்துச்செல்வார்.

கண்களை எடுக்க பத்து நிமிடங்கள் போதும். எடுத்தவுடன் முகம் விகாரமாகத் தோன்றாது.

ஆண், பெண், சிறுவர், பெரியவர், கண்ணாடி அணிந்தவர், கண்ணில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் என யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம்.

கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x