

எனக்கு நீண்ட நாட்களாக மலச்சிக்கல் இருக்கிறது. வயிறு உப்பி, நாற்றத்துடன் காற்று வெளியேறு கிறது. மலம் கருப்பாக வெளியேறுகிறது. இதற்குச் சித்த மருத்துவத்தில் ஏதாவது மருந்து உண்டா?
- மாணிக்கம் ரவி
இந்தக் கேள்விக்குத் திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் சிறப்புநிலை சித்த மருத்துவர் எஸ். காமராஜ் பதிலளிக்கிறார்:
உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என்று முதலில் பரிசோதித்துக் கொள்ளுங்கள். வயிற்றில் புண் இருந்தாலும், மலக்குடலில் புண் இருந்தாலும், மலம் தினசரி ஒன்று அல்லது இரண்டு வேளை வெளியேறவில்லை என்றாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, சுகாதாரமற்ற உணவு, தின்பண்டங்களை அதிகம் உண்பது, அசைவ உணவை அதிகமாகவும் தொடர்ந்தும் உண்பது, அளவுக்கு அதிகமாக மது, புகையிலை பயன்பாடு, நிறைய மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வது, நேரம் தவறித் தூங்குவது, தொடர் மன உளைச்சல் போன்றவற்றில் ஒன்றோ அதற்கு மேற்பட்ட விஷயங்களோதான் மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருக்க முடியும்.
ரத்தப் பரிசோதனை, எண்டாஸ்கோப்பி, கொலனாஸ்கோப்பி, அல்ட்ராசோனோகிராம் செய்து நோயை உறுதிசெய்துகொண்டு ஆறு மாதங்களுக்கு அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வயிற்றுப் பேதிக்குச் சாப்பிட வேண்டும். முக்குற்றங்களையும் (வாத, பித்த, கபம்) சமநிலைப்படுத்தக்கூடிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த மருந்துகள், ஏலம், சீரகம், கிராம்பு, அதிமதுரம், நெல்லி, லவங்கபத்திரி, சிறுநாகப்பூ, கருவேப்பிலை, சந்தனம், சடாமாஞ்சில், சோம்பு சேர்ந்த ஏலாதி சூரணம், திரிபலா சூரணம், மாசிக்காய், ஜாதிக்காய், கசகசா, கடுக்காய்பூ, புளியங்கொட்டை சேர்ந்த ஜாதிக்காய் லேகியம் ஆகியவற்றுடன் வயிற்றுப் பேதிக்கும் சாப்பிட்டு மருத்துவர் ஆலோசனையோடு சிகிச்சை எடுத்துக்கொண்டால், உங்களுக்குள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் குணம் கிடைக்கும்.