

இளைய தலைமுறையினரின் ஃபேஷன் விருப்பங்களில் ஒன்று டாட்டூ. உலகில்,18-34 வயது கொண்டவர்களில் சுமார் 40 சதவீதத்தினர் டாட்டூ போட்டுக்கொண்ட வர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அனைத்து நிறங்களிலும் டாட்டூ குத்தப்படுகிறது. இதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களும் அதிகமாகச் சந்தைக்கு வந்துவிட்டன. இந்த மை ஒரு கருவியின் உதவியோடு உள்தோலில் (Dermis layer) செலுத்தப்படுகிறது.
தோல் மூன்று முக்கிய அடுக்குகளைக் கொண்டது. மேல்தோலில் டாட்டூ போட்டால் அழிந்துவிடும். உட்தோலில் போடுவதால்தான் அழியாமல் இருக்கிறது. மேல்தோலுக்கும் அடித்தோலுக்கும் இடையில் உள்தோல் (Dermis) இருக்கும். நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டாட்டூ மின்னணுக் கருவி ஊசிகள் (டாட்டூ துப்பாக்கிகள்) தோலின் மேற்பரப்பிலிருந்து 1 மி.மீ. வரை ஊடுருவக்கூடியவை.
மருத்துவப் பிரச்சினைகள்
பழைய ஊசிகளைக் கிருமி நீக்கம் செய்யாமல், தொற்று உள்ள ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்தினால் புதியவருக்கு ஊசி மூலம் தொற்று ஏற்பட்டுவிடும். குறிப்பாகக் கல்லீரல் அழற்சி வைரஸ் பி, சி வைரஸ் இதனால் பரவலாம். தோல் ஒவ்வாமை ஏற்படலாம். தோல் ஒவ்வாமையால் புண் ஏற்பட்டு, பிறகு ஆறாத தழும்பாக மாறலாம்.
சிலர் பயன்படுத்தும் டாட்டூ மைகளில் ஈயம், ஆர்சனிக் உள்ளிட்ட கன உலோகங்கள் உள்ளன. அவை புற்றுநோய், பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. சிவப்பு நிறத்தில் டாட்டூ போட விரும்புகிறவர்கள், அது நிரந்தரமாக இருக்க வேண்டுமென நினைக்கிறவர்கள், இதற்கான மையில் பாதரசம் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அல்லது இரும்பு ஆக்சைடு, காட்மியம் போன்ற கன உலோகங்கள் இருக்கலாம். தோலில் நிரந்தரச் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் இந்த உலோகங்களால் தோல் அரிப்பு, தடிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.
இவர்கள் எம்.ஆர்.ஐ. (MRI) பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்படும். பரிசோதனையின்போது ஏற்படும் மின்காந்தம் தோலில் உலோகத்தால் இடப்பட்ட டாட்டூகளைப் பாதிக்கும். இதனால் தோல் புண்ணாகலாம். தோலில் நிரந்தர பச்சை மையிலும் மற்ற நிறங்களிலும் படங்கள்,அடையாளக் குறிகள் போன்றவற்றை இடுவதற்குப் பல்வேறு கன உலோகங்களைப் பயன்படுத்தப்படுகின்றன. ஈயம், ஆன்டிமனி, பெரிலியம், குரோமியம், கோபால்ட், நிக்கல், ஆர்சனிக் ஆகியவை முக்கியமானவை. இவற்றால் சிலருக்குத் தோல் ஒவ்வாமை ஏற்படலாம்.
பாதுகாப்பான டாட்டூ
டாட்டூ போட்டுத்தான் ஆக வேண்டுமென நினைத்தால், கறுப்பு ஓரளவு பாதுகாப்பான நிறம். கறுப்புக்கு கார்பன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சிவப்பு போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுத்தால் அவை உலோகமற்ற நிறமிகளா எனக் கேட்டுப் பயன்படுத்த வேண்டும்.
டாட்டூவை அகற்றுவது எப்படி?
டாட்டூவை அகற்ற லேசர் பயன்படுகிறது. குறைந்த அலைநீளம் கொண்ட லேசர் ஒளியலைகள் சிவப்பு, ஆரஞ்சு, பழுப்பு நிற டாட்டூகளைப் போக்க பயன்படுகின்றன. நீண்ட அலைநீளம் கொண்ட லேசர் ஒளியலைகள் பச்சை, ஊதா, கத்திரிப்பூ நிற டாட்டூகளைப் போக்க பயன்படுகின்றன. கறுப்பு நிறத்தை எந்த அலைநீளம் கொண்ட ஒளியாலும் போக்கலாம்.
கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com