

மருத்துவர்கள் அடிக்கடி, ‘ஹார்ட் அட்டாக்’ என்கிறார்கள், ‘கார்டியாக் அரெஸ்ட்’ என்கிறார்கள். இரண்டும் ஒன்றா? வேறு வேறா? இரண்டுக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. ஆனால், இரண்டும் ஒன்றல்ல.
இந்த இரண்டு பிரச்சினைகளுமே பல நேரம் மாரடைப்பு என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. அதாவது, ‘மாரடைப்பு’ (Heart attack) ஏற்பட்ட ஒருவருக்கு அடுத்து, ‘இதய நிறுத்தம்’ (cardiac arrest) ஏற்படலாம்.
இதய நிறுத்தம் ஏன் ஏற்படுகிறது?
இதயம் நேரடியாகப் பாதிக்கப்படா விட்டாலும், வேறு பல காரணங்களால் அது பாதிக்கப்படும், மாரடைப்பு ஏற்படும். அவை:
# மின்சாரம் தாக்கி ஏற்படுவது
#அதிக மருந்து/விஷங்களால் ஏற்படுவது
# விபத்து போன்றவற்றால் அதிக ரத்த இழப்பு ஏற்படுவது (Hypovolaemic shock)
#திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் வெகுவாகக் குறைவது (Hypoxia)
மாரடைப்புக்கான அறிகுறிகள்
# இவர்களுக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கிக் கீழே விழுவார்கள்
# மூச்சுத் திணறல் ஏற்படலாம்
# இடது தோள்பட்டை, கை பகுதிகளில் வலி ஏற்படலாம்
# படபடப்பு, வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்
# சிலரால் பேசவே முடியாது
# மயங்கிச் சரிந்து விழுந்துவிடுவார்கள்
‘மாரடைப்பு’நோயாளிக்கு இதய ரத்த ஓட்டம், அடைப்பால் பாதிக்கப்படும். அவருக்கு நெஞ்சு வலி ஏற்படும். ஆனால், மூச்சு இருக்கும். பேச்சு இருக்கும். சுயநினைவு இருக்கும்.
இதய நிறுத்தத்துக்கான அறிகுறிகள்:
‘இதயம் நின்ற’ நோயாளிக்கு இதய ரத்த நாளம் பெரிதும் அடைபடுவ தில்லை. இவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்படும். உடனே மயங்கி நினை விழந்துவிடுவார்கள். இதயத் துடிப்பு (நாடித்துடிப்பு) இருக்காது, சுவாசிக்க மாட்டார். இதனால், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் தடைப்படும். மூளைக்குக் கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜனும், ஆற்றலும் கிடைக்காது. சுயநினைவு இருக்காது. எவ்வளவு பேசி தூண்டிப் பார்த்தாலும் கண் திறந்து பார்க்க மாட்டார்.
உடனே அவருக்கு முதலுதவி (CPR) செய்து அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லாவிட்டால், தீவிர சிகிச்சை செய்யாவிட்டால் சில நிமிடங்களில் அவர் இறந்துவிடக்கூடும். மாரடைப்பு நோயாளிகளுக்கும் இதே போலத்தான் சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களும் எந்த விநாடியிலும் இதய நிறுத்த நிலைக்குப் போய்விடுவார்கள். மாரடைப்பும், இதய நிறுத்தமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால் மக்கள் மாரடைப்பு என்றால் இரண்டையும் ஒன்று என்றே கருதுகிறார்கள்.
மாரடைப்பைத் தவிர்க்க/தள்ளிப்போட என்ன செய்ய வேண்டும்?
# உடல் பருமனைக் கட்டுக்குள் வையுங்கள்
# ரத்தத்தில் கொழுப்பு, ட்ரைகிளிசரைட் களின் அளவு உயர்வதைத் தடுத்து நிறுத்துங்கள்
# உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீரான அளவில் வைத்துக்கொள்ளுங்கள்.
# நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துங்கள்
# ரத்த சர்க்கரை அளவு மீறிவிடாமல் மட்டுப்படுத்துங்கள்
# போதுமான உறக்கம் தேவை
# மதுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள்
# புகைப் பழக்கத்தைக் கைவிடுங்கள்
# வழக்கமான உடற்பயிற்சியைத் தொடருங்கள்
# ஆரோக்கியமான உணவை, சரியான நேரத்துக்கு உண்ணுங்கள்
# எந்தப் பிரச்சினை வந்தாலும் பதறாதீர்கள்
இதயக் கோளாறு சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் இ.சி.ஜி, பயிற்சி இ.சி.ஜி, இதய ஸ்கேன்-எக்கோ, கழுத்துப்பகுதி முக்கிய ரத்த நாளத்தில் 3டி ஸ்கேன் பரிசோதனை, ஆஞ்சியோ போன்ற பரிசோதனைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்துகொள்வது நல்லது. கவனத்துடன் இருந்தால், தீடிர் மாரடைப்பைத் தவிர்க்க முடியும்.
கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com