Published : 05 Jun 2021 03:33 PM
Last Updated : 05 Jun 2021 03:33 PM

கரோனா பாதிப்பு; காலதாமதம் உயிருக்கு ஆபத்து: டாக்டர் வி.பி.துரை

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மூச்சுத் திணறலோடு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுகிறார். பரிசோதித்ததில் அவருடைய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 78 சதவீதம் மட்டுமே இருக்கிறது. சிடி ஸ்கேனில் (CT Scan) அவருடைய நுரையீரல் 50 சதவீதத்துக்கு மேல் பாதிப்படைந்துள்ளதைக் காட்டுகிறது. என்ன நடந்தது என்று கேட்டபோது, "எனக்கு ஒரு வாரத்துக்கு முன்பு தொண்டை வலியும், லேசான காய்ச்சலும் இருந்தது. கஷாயங்கள் சிலவற்றைக் குடித்தேன். அருகிலுள்ள மெடிக்கல் ஷாப்பில் சில மாத்திரைகள் வாங்கி உட்கொண்டேன். இரு தினங்களிலேயே குணமடைந்துவிட்டேன். நேற்று இரவிலிருந்து மூச்சு விடுவதில் லேசாக சிரமம் ஏற்பட்டது. இன்று காலை முதல் அதிகமாகிவிட்டது" என்றார். கோவிட் டெஸ்ட் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் அடைத்துவிடுவார்கள் என்று பயந்துகொண்டு எடுக்கவில்லை என்கிறார்.

அவர் ஓரிரு நாளில் இறந்துவிட்டார். பெரும்பாலான மருத்துவமனைகளில் இது போன்ற நெஞ்சை உலுக்கும் காட்சிகள் தினமும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மரணம் தவிர்க்க முடியாததா? கோவிட்-19 என்கிற புதிய நோயை உலகுக்குச் சொன்ன நவீன விஞ்ஞான மருத்துவம் அதற்கான மருந்துகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லையா? என்னதான் இதற்கெல்லாம் தீர்வு? மரண பயத்துடன் எத்தனை நாள்கள் வாழ்வது? இப்படிப் பல தத்துவார்த்தரீதியான கேள்விகள் பலர் மனத்தில் எழுந்துகொண்டிருக்கின்றன. விஞ்ஞானரீதியாக இந்நோய் குறித்த சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

இந்நோய்த் தொற்று ஏற்பட்ட ஆரம்பக் காலகட்டத்தில், இந்நோய்க்கான நோய்க்கூறியல் மருத்துவர்களுக்குச் சரியாக விளங்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் இறந்த நோயாளிகளின் உடல்களில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பல உண்மைகளை மருத்துவ உலகுக்கு உணர்த்தியிருக்கிறது. தற்பொழுது கோவிட்-19-க்கான நோயியல் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொண்டு, உயிரைக் காப்பாற்ற நவீன விஞ்ஞான மருத்துவம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது.

சைட்டோகைன்ஸ்

நோய்த்தொற்று ஏற்பட்டவுடன் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். இருமல், காய்ச்சல், தொண்டை வலி, கண் சிவத்தல், வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இருக்கும். ஒருவருக்கு நோய் எதிர்ப்பாற்றல் முறையாகச் செயல்பட்டால் (கவனிக்கவும் - முறையாகச் செயல்பட்டால்) இரண்டு, மூன்று நாட்களில் அவர்களுக்குக் காய்ச்சல், சளிக்குப் பயன்படுத்தும் சாதாரண மருந்துகளின் மூலமாக குணம் கிடைக்கும். சிலருக்கு இந்த கரோனா வைரஸ், நோய் எதிர்ப்பாற்றலை முறையற்றுத் தூண்டிவிடும். இதனால் எதிரணுக்கள் பல்கிப் பெருகி வைரஸை அழிக்கச் சிலவகை திரவத்தைச் சுரக்கும்.

இதற்கு மருத்துவ உலகம் சைட்டோகைன்ஸ் (Cytokines) என்று பெயரிட்டுள்ளது. இந்த சைட்டோகைன்ஸ் வைரஸை அழிக்கச் சுரக்கப்பட்டாலும் அவை அதோடு நின்றுவிடுவதில்லை. “எதிரியை நாம நூறு அடி அடிக்கும்போது ஒரு அடி தவறி நம்ம மேல விழதான்டா செய்யும். அந்த அடி கால்ல விழுந்திரிச்சி” என்று ஒரு திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவையாகச் சொல்லுவார். இங்கே கொஞ்சம் உல்டாவாக எதிரியை ஒரு அடி அடித்துவிட்டு நம் நுரையீரலை நூறு அடி அடித்துவிடுகின்றன நம்முடைய எதிரணுக்கள். அதாவது எதிரியை அழிப்பதாகச் சொல்லி, நம்முடைய எதிரணுக்களே நமக்குத் துரோகியாக மாறிவிடுகின்றன.

நுரையீரல் சிதைவு

நம்முடைய நுரையீரலில் கோடிக்கணக்கான சின்னஞ்சிறிய காற்றுப் பைகள் இருக்கும். இவற்றை ஆல்வியோலை (Alveoli) என்று கூறுவோம். இந்தக் காற்றுப் பைகளைச் சுற்றி சிறிய ரத்த நாளங்கள் பின்னிப் பிணைந்திருக்கும். இவ்விடத்தில்தான் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைடு வாயுக்கள் பரிவர்த்தனை நடைபெறும். அதாவது நுரையீரலில் உள்ள ஆக்சிஜன் ரத்த நாளங்களுக்குச் செல்லும், நச்சுக் காற்றான கார்பன் டை ஆக்ஸைடு, ரத்த நாளங்களிலிருந்து வெளியேறி நுரையீரல் வழியாக வளிமண்டலத்துக்குச் செல்லும். மேலே சொன்ன சைடோகன்ஸ் (நம் எதிரணுக்கள் சுரப்பது) பரிவர்த்தனை நடக்கும் நுரையீரலின் இந்தப் பகுதியைத்தான் சேதப்படுத்துகிறது. இதனால் காற்றுப் பைகள் சிதைந்துபோகும். அதனைச் சுற்றியுள்ள ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்துபோகும். இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் ஏற்றம் தடைப்படும். தடைப்படும்போது நோயாளிக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். ஆக்சிஜன் ஏற்பு குறையும்.

என்ன செய்ய வேண்டும்?

இந்த நுரையீரல் சிதைவு கரோனா அறிகுறிகள் தென்பட்ட 4-5 நாட்களில் தொடங்கும். தொடக்கத்திலேயே சைடோகைன்ஸ் சுரத்தலைக் கட்டுப்படுத்தி, எதிரணுக்களை முறைமைப்படுத்தும் ஸ்டீராய்டு மருந்துகளைச் செலுத்த வேண்டும். மேலும் ரத்த நாளங்களில் உரைந்திருக்கும் ரத்தத்தைக் கரைக்க ரத்தம் உறையா தன்மையை ஏற்படுத்தும் மருந்துகளைச் செலுத்த வேண்டும். இம்மருந்துகளை உரிய நேரத்தில் செலுத்தினால் நோயாளி முழுமையாக மீண்டு வந்துவிடுவார். நுரையீரல் 60 சதவீதத்துக்கு மேல் சேதாரம் அடைந்த பின் மருத்துவமனைக்கு வந்தால் ஆபத்து அதிகம்.

எமனாகும் எதிர்ப்பாற்றல்

கோவிட்-19 நோய்க் கூறியல் தெரியாமல் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தி இந்நோயை எதிர்கொள்வோம் என்கின்ற வகையில் பல்வேறு வாட்ஸ் அப் செய்திகள் உலா வருகின்றன. இவை ஆயுஷ் நிபுணர்களால் எழுதப்பட்டவையும் அல்ல. திடீர் மருத்துவர்கள் பலர் உருவாகி தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் வாட்ஸ் அப்பில் உலாவ விடுகிறார்கள். அதில் பல்வேறு மூலிகைகள் குறிப்பாக அதிமதுரம், திப்பிலி, கிராம்பு, மிளகு, கடுக்காய் போன்றவற்றைக் கஷாயமாகக் காய்ச்சிக் குடித்தால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து கரோனாவிலிருந்து குணமாகலாம் என்றும் தேங்காய்ப் பாலில் கிராம்பு மற்றும் இஞ்சி கலந்து சாப்பிட்டால் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றன.

இங்கே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது எதிர்ப்பாற்றல் குறைவால் மரணம் ஏற்படவில்லை, மாறாக தாறுமாறாகச் செயல்படும் எதிர்ப்பாற்றலே நுரையீரல் சிதைவுக்கும், மரணத்துக்கும் காரணமாக அமைகிறது. இந்த மூலிகைகளை எல்லாம் நாம் நீண்ட நெடிய காலமாகப் பயன்படுத்தி பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் கண்டிருக்கிறோம். ஆனால் கோவிட்-19 நோய்க்கு அவை பயன் அளிக்கவில்லை என்பதே கடந்த ஓராண்டு அனுபவத்தின் படிப்பினை. என் சொந்த அனுபவமும்கூட.

நுரையீரல் மற்றும் ரத்தக் குழாய்கள் கட்டமைப்பு சேதம் (structural damage) ஏற்பட்ட பின்பு புனரமைப்பு மிகக் கடினம். எனவே, நோய் அறிகுறிகள் தோன்றியவுடன் அவற்றை மறைக்க முற்படாமல், சுய வைத்தியம் பார்க்காமல், அருகிலுள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் உட்கொள்வதே உயிர்ச் சேதத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே வழி.

கட்டுரையாளர்: டாக்டர் வி.பி.துரை,

காசநோய் தடுப்பு துணை இயக்குநர்,

தொடர்புக்கு: drpdorai@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x