

கரோனா முதல் அலையின்போது தடுப்பூசி பயன்பாட்டில் இல்லை. அதை எப்படி எதிர்கொள்வது என்கிற குழப்பம் மருத்துவர்களுக்கும் இருந்தது. ஆனால், இரண்டாம் அலையில் நிலைமை அப்படி அன்று. இன்று தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. கரோனாவுக்கான சிகிச்சை குறித்த தெளிவும் மருத்துவர்களிடம் உள்ளது. இருந்தும், கரோனா இரண்டாம் அலை, முதல் அலையைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மரண பயமும் வேதனையின் கூக்குரலும் நாடெங்கும் எதிர்ப்படுகின்றன.
மருத்துவமனையில் இடம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இடம் கிடைத்தாலும் ஆக்சிஜன் படுக்கைக்கு வழியில்லை. இது போதாதென்று உயிர் காக்கும் மருந்துகளுக்கு வேறு பெரும் தட்டுப்பாடு. கூட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் ரத்தப் பரிசோதனை நிலையங்களும், ஸ்கேன் சென்டர்களும்கூடத் திணறுகின்றன. அரசின் மெத்தனமும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் மக்கள் காட்டிய ஒழுக்கமின்மையும் தடுப்பூசி குறித்துப் பரப்பப்பட்ட வதந்திகளும் இன்று நிலைமையைக் கைமீறிப் போகச் செய்துவிட்டன.
பயனற்றதாகும் மருத்துவர்களின் உழைப்பு
கரோனா பாதிப்புக்கு உள்ளான பின்னர் மக்களுக்கு ஏற்படும் அச்சமும் முன்னெச்சரிக்கை உணர்வும் கரோனா பாதிப்புக்கு முன்னரே வந்திருந்தால், அவர்களை கரோனா பாதித்திருக்கச் சாத்தியமே இல்லை. ஊரடங்கு என்று அறிவித்த பின்னரும், தேவையின்றி வெளியே சுற்றுவது, சமூக இடைவெளியைப் பின்பற்ற மறுப்பது, முகக்கவசத்தை அணிய மறுப்பது அல்லது அதைத் தாடைக்குக் கீழே அணிவது என கரோனாவை எதிர்கொள்வதில் மக்கள் காட்டும் அலட்சியம்தான், இன்று நிலைமையைக் கைமீறி போகச் செய்திருக்கிறது. மேலும், இந்த அலட்சியத்தால், கரோனாவுக்கு எதிரான போரில் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் சேவையும் பயனற்றதாகி விடுகிறது.
ஆபத்தை உணர்வோம்
இனியாவது, நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து மக்கள் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். முக்கியமாக இளம் வயதினர். ஆம், இந்த இரண்டாம் அலை இளம் வயதினரையும் விட்டு வைக்கவில்லை. கரோனாவுக்கு எதிரான மிகப் பெரிய போரின் நடுவில் நாம் நிற்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போரிட்டால் மட்டுமே நம்மால் கரோனாவை ஒழிக்க முடியும். நம்மில் ஒருவர் தன்னுடைய பாதுகாப்புக் கவசத்தைத் தவறவிட்டாலும், அந்த வைரஸ் அவருக்குள் நுழைந்து நம் அனைவரையும் தாக்கி, பாதிப்புக்கு உள்ளாக்கும்.
தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதும், ஊரடங்கில் வீட்டில் அடங்கி இருப்பதும், வெளியே செல்ல நேர்ந்தால் ஈரடுக்கு முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் மிகவும் எளிமையான செயல்களே. இவற்றைப் பின்பற்றுவதில் ஒரு தனிநபர் காட்டும் அலட்சியத்தால், பாதிப்புக்கு உள்ளாவது அவர் மட்டுமல்ல; அவருக்கு நெருக்கமானவர்களும்தாம். இதை உணர்ந்து செயல்பட்டால் போதும்.