

எனக்கு மூன்று ஆண்டுகளாக வயிற்றுக் கோளாறு இருக்கிறது. கூடுதல் உணவு சாப்பிட்டாலோ, பால், புரதப் பொருட்கள், எண்ணெய் பண்டங்களைச் சாப்பிட்டால் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது. பசிக்கும்போது, வாய் வழியாக வாயு வெளியேறுகிறது. இதற்கு என்ன சிகிச்சை?
பாரத மணி, மின்னஞ்சல்
வாசகரின் கேள்விக்கு இந்த வாரம் பதில் அளிக்கிறார் திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் சிறப்புநிலை சித்த மருத்துவர் எஸ். காமராஜ்:
வயிற்றில் அரை பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற்றிடமாகத் தினமும் வைத்திருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். மலக்கட்டு பிரச்சினை இருந்தால் முதலில் அதற்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை பேதிக்குச் சாப்பிட வேண்டும்.
அகம் என்ற வயிற்றில் வாயு சேராமல் இருக்கவும், வயிற்றைப் பலப்படுத்தவும் இஞ்சி, மிளகு, பெருங்காயம், ஓமம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அமுக்கரா சூரண மாத்திரை, திரிபலா சூரண மாத்திரை, இஞ்சி லேகியம், பஞ்ச தீபாக்கினி லேகியம், மாதுளை மணப்பாகு, ஓமத் தீநீர் ஆகியவற்றுடன் சாப்பிடும் நேரம், உறக்கம், பழக்கவழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை முறைப்படுத்தினால், மன உளைச்சல் இல்லாமல் நலம் வாழலாம்.