Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM

மனத்தைக் கொல்லும் மரண பயம்

மனிதனுக்கு வரும் பயங்களிலேயே உச்சக்கட்ட பயம் மரண பயம்தான். அந்தப் பயத்தை எல்லோருக்கும் கரோனா காட்டிவிட்டதைக் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். சமீபத்தில் ‘இவரா இப்படிப் பயப்படுகிறார்?’ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மனோதிடம் வாய்ந்த நபர்கள், மருத்துவர்கள்கூட மனநல ஆலோசனைக்கு வருகிறார்கள். இந்தப் பயத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல.

அன்றாடம் கரோனா வைப் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மட்டுமல்லாது, மரணச் செய்திகளையும் கேட்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பலர் தேவைக்கு அதிகமான, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனப்பதற்றத்திற்குள்ளாகக்கூடும்.

விளிம்பில் நிற்கும் அனுபவம்

தேவைக்கு அதிகமாகக் கைகழுவுதல், அறிகுறிகள் இல்லாதபோதும் பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் ஆக்ஸிஜன் அளவை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது, மன திருப்திக்காக அடிக்கடி கரோனா பரிசோதனை மேற்கொள்வது, இந்த அளவீடுகளில் வரும் சாதாரண ஏற்ற தாழ்வுகளைக்கூட நோயின் அறிகுறியாக எடுத்துக்கொள்வது, தூக்கமின்மை போன்ற செயல்கள் இதன் அறிகுறிகள்.

ஒரு சிலர் இந்தப் பயத்தினாலேயே ஏற்படும் அதிக இதயத்துடிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளைத் தவறாகப் புரிந்துகொண்டு மரண பயத்திற்கு ஆளாவார்கள். கரோனா அறிகுறிகளைவிட, கரோனாவாக இருக்குமோ என்கிற பதற்றத்தின் அறிகுறிகள் அதிகம் இருப்பதே இவர்களைப் பிரித்தறிய உதவும்.

மரண பயத்திற்கான காரணங்கள்

திடீர் மரணங்களையும், மரண பயத்தையும் ஏற்படுத்தும் மாரடைப்பு போன்ற நோய்களைக்கூடச் சாதாரண நோயாகக் கருதும் அளவிற்கு கரோனா எல்லோரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால்தான், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட, தனக்கு அல்லது தனது குடும்ப நபர்களுக்கு கரோனா வந்துவிடுமோ என்கிற பயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதில் பலர் தங்களுக்குத் திடீர் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்கிற உச்சக்கட்ட மனப்பதற்றத்தில் அவதிப்படுகின்றனர். இந்த மரண பயத்திற்கான காரணங்கள் மற்ற காரணங்களால் வரும் பயத்தைவிடச் சற்று வித்தியாசமானவை. அவை என்னவென்று பார்ப்போம்.

# மற்றவர்களால் ஆற்றுப்படுத்த முடியாத அளவிற்கு உலகளாவிய பெருந்தொற்று நோயாக கோவிட்-19 இருப்பது

# எங்கோ கேள்விப்பட்ட மரணச் செய்திகள், நண்பர்கள், உறவினர்கள் வட்டாரம், அக்கம்பக்கத்திலிருந்து கேட்க ஆரம்பித்த பிரச்சினைகள்

# நோய்த்தொற்றைவிடத் தனிமைப் படுத்துதலைப் பற்றிய அதிக பயம்

# மற்ற நோய்களைப் போல் இல்லாமல், குடும்ப நபர்கள் உடன் இருந்து கவனிக்க முடியாத நிலை

# தங்கள் வயதை ஒத்த நபர்கள் பாதிக்கப் படுவது - மரணம் அடைவதைப் பற்றிய செய்திகளை அதிகம் கேட்பது

# ஊடகங்கள் - சமூக வலைத்தளங் களில் வரும் கரோனா விழிப்புணர்வு செய்திகளைவிட, அது ஏற்படுத் திய பாதிப்புகளை அதிகம் தெரிந்து கொள்வது

# ‘ஆக்ஸிஜன் இல்லை, படுக்கைகள் இல்லை, மயானங்களில் இடம் இல்லை’ என்பது போன்ற எதிர்மறை செய்திகளை அதிகம் கேட்பது

# குடும்ப நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப் படுத்தலிலோ மருத்துவமனையிலோ இருப்பது

# ஏற்கெனவே மனப்பதற்றமுள்ள ஆளுமையாக இருப்பவர்கள், மனப்பதற்ற நோயாளிகள்

# மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதுவரை காணாத நெருக்கடி நிலையைக் காண நேரிடுவது

செய்ய வேண்டியவை:

# கரோனாவால் பாதிக்கப்படும் எல்லோ ருக்கும் உயிரிழப்பு ஏற்படுவதில்லை. எனவே, மரணத்தைத் தழுவும் மிகக்குறைந்த சதவீதத்தினர் மீது மனதளவில் கவனம் கொள்வதைவிட, பெரும்பான்மையோருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கிற நேர்மறை நம்பிக்கை மீது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

# அரசு சொல்லும் அனைத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளையும் தேவையான இடங்களில், தேவையான அளவிற்குச் செயல்படுத்த வேண்டும். அதைச் சரியாகச் செயல்படுத்தும்பட்சத்தில் தொற்று வர வாய்ப்பில்லை என்கிற நம்பிக்கையை மனத்தில் நிறுத்த வேண்டும்.

# வீட்டிலிருந்தாலும், உடலையும் மனத்தையும் அடிக்கடி வெவ்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளில் அல்லது பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

# சொந்தபந்தங்களுடன் அலைபேசியில் கரோனாவைத் தவிர்த்து, மற்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது நல்லது.

# எப்பொழுதும் சமூக வலைத்தளங்களி லும், 24 மணி நேரச் செய்தி அலைவரிசைகளின் முன்பு அமர்வதைவிட, மூச்சுப்பயிற்சி, பாரம்பரிய விளையாட்டுக்கள், வீட்டிற்குள் இருந்து விளையாடும் விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபடுவது மனத்துக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

# கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மனப்பதற்றம், மரண பயம் இருந்தால் மனநல மருத்துவரை நேரடியாகவோ, ஆன்லைன் வாயிலாகவோ தொடர்புகொண்டு சிகிச்சை பெறுவது நல்ல பலன் தரும்.

செய்யக்கூடாதவை:

# எப்போதும் ‘கரோனா ஆராய்ச்சியாளர்’ போல அதைப் பற்றிய எதிர்மறை செய்திகளைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

# பிறருக்கு நிகழும் அசம்பாவிதங்கள் தனக்கும் வந்துவிடுமோ என்று பாதிக்கப்பட்ட நபர்களின் நோய் அறிகுறிகளை மனத்தில் அசைபோடு வதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்வது உங்கள் காலை மற்றவர்கள் காலணிக்குள் நுழைப்பது போன்றது. ஒன்று காலைக் கடிக்கும்; இல்லை கழன்று போகும்.

# ஏற்கெனவே பயத்திலும் பதற்றத்திலும் இருக்கும் நபர்களிடம், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது மரணமடைந்த நபர்கள் கஷ்டப்பட்டதைக் குறித்து விலாவரியாக வர்ணனை செய்வது போல் விவரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

# அங்கே ஆக்ஸிஜன் பற்றாக்குறையாம், இங்கே படுக்கைகள் நிரம்பிவிட்டன வாம்’ என்பது போன்ற எதிர்மறை செய்திகளைப் பேசுவது, பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.

# தேவையற்ற உடல் சுயபரிசோதனை களைக் குறைக்க வேண்டும்.

அதீத முன்னெச்சரிக்கையாலும் மனப்பதற்றத்தாலும் மருத்துவமனை களை நாடுபவர்கள், படுக்கைகளை ஆக்கிரமித்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது என்று சக மருத்துவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டுவருகிறோம். இது நிச்சயமாகப் படுக்கை வசதி தேவைப்படும் நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முன்னுரிமையைத் தடுப்பதுடன், மருத்துவத் துறைக்கு அதிக நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. எனவே, மருத்துவர்களை அணுகும் முன்பு உண்மையில் நோய் அறிகுறிகளுடன் செல்கிறோமா அல்லது மனப் பதற்றத்தின் விளைவாகச் செல்கிறோமா என்பதைப் பிரித்தறிந்துகொள்வது நல்லது.

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.comSign up to receive our newsletter in your inbox every day!

 
x