

மஞ்சள் காமாலை ஒரு தனி நோயல்ல, அது பல நோய்களுக்குக் காரணியாக இருக்கலாம் என்பதைப் பார்த்தோம். பல காரணங்களால் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம். இதை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பார்க்க முடியும்.
1. பல்வேறு நோய்களால் சிவப்பணுக்கள் சிதைவடையும்போது: மஞ்சள் நிற நிறமிகள் (bilirubin hyperbilirubinemia) ரத்தத்தில் அதிகரிக்கும். எடுத்துக்காட்டு மலேரியா, மரபுவழி நோய்கள் (thalassemia), இதன் காரணமாக ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
2. கல்லீரல் பாதிக்கப்படுவதால்: கல்லீரல் அழற்சி வைரஸ்களில் (ஏ, பி, சி, டி, ஈ) பல வகைகள் உள்ளன. பிற வைரஸ்களும் கல்லீரலைப் பாதிக்கலாம். நீண்ட கால மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலில் இழைநார் படிவு மிகும். கல்லீரல் அழற்சி (Cirrhosis), நச்சுப் பொருட்கள், சில மருந்துகள், பிறவி நோய்களாலும் கல்லீரல் பாதிக்கப்படும்போது மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
3. பித்த நீர் வெளியேற முடியாமல் தடைபடுவதால்: கல்லீரலில் சுரந்து, பித்தப்பையில் சேமித்து வைக்கப்படும் பித்த நீர் குடலுக்குச் செல்ல முடியாமல், பித்தக் கற்களாகவோ, கணையப் புற்றுநோய்களாலோ அடைபடும்போது, வெளியேற முடியாத பித்த நீர் ரத்தத்தில் மிகுந்தும் மஞ்சள் காமாலை ஏற்படும்.
உரிய சிகிச்சை
ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். எனவே, மஞ்சள் காமாலை ஏற்பட்ட பிறகு, எந்தக் காரணத்தால், நோயினால் அது ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். பிறக்கும் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வரலாம். பிறந்த முதல் வாரத்தில் மஞ்சள் காமாலை (Neonatal jaundice) ஏற்பட சாத்தியம் உண்டு. குறைப்பிரசவமாக பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக சாத்தியம் உண்டு! உடனே பெற்றோர் மருத்துவர்களை நாடுவார்கள். பெரியவர்களுக்கு நேரும்போதும் அதுபோலவே கடைப்பிடியுங்கள்.
ஆபத்தா, ஆபத்தில்லையா?
வளரும் நாடுகளில் பெரும்பாலும் மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் கல்லீரல் அழற்சி வைரஸ் ‘ஏ’ வகையாகும் (HAV- Hepatitis A virus - ஹெபடைடிஸ் ‘ஏ’ வைரஸ் தொற்று). உணவு, குடிநீர் ஆகியவை சுத்தமாக இல்லாதபோது இவை பரவுகின்றன. இதேபோல் கல்லீரல் அழற்சி ‘இ’ வைரஸ் (HEV-Hepatitis E virus - ஹெபடைடிஸ் இ வைரஸ் தொற்று) சுகாதாரமற்ற உணவு, குடிநீரால் மனிதர்களுக்குப் பரவுகிறது. ‘ஏ’ வைரஸின் முதல் மூன்று வகைகளும், ‘இ’ வைரஸின் ‘முதல்’ வகையும்தான் மனிதர்களின் கல்லீரலைப் பாதித்து மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகின்றன.
இந்த இரண்டு வைரஸ்களுமே நமது நாட்டில் (endemic) இருந்துவருபவை. இவை பொதுவாக மஞ்சள் காமாலை, உடல் அசதி, பசியின்மை, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். எந்தச் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாமலேயே (Self - Limiting condition) இவை சரியாகிவிடவும்கூடும்.
இதற்குச் சற்று ஓய்வெடுக்க வேண்டும். திரவ உணவை உட்கொள்ள வேண்டும். மது அருந்தக் கூடாது. கொழுப்பு உணவைத் தவிர்த்து எளிதில் ஜீரணிக்கக்கூடிய எளிய உணவை உண்ண வேண்டும். மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு இந்த வைரஸின் பாதிப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படியிருந்தால், மேற்கூறிய சிகிச்சை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதேநேரம், ஹெபடைடிஸ் ‘சி’ வைரஸ் போன்றவை ஆபத்தானவை. எனவே, எந்த வைரஸால் நமக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே மருத்துவர் சிகிச்சையைத் தொடங்குவார். அப்படித் தெரிந்துகொள்ளாமல் சுயசிகிச்சை செய்வது தவறாக முடியக்கூடும்.
கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர் தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com